யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 5வது வாரம் திங்கட்கிழமை
2021-02-08

புனித லூர்து அன்னை




முதல் வாசகம்

கடவுள் "ஒளி தோன்றுக" என்றார்; ஒளி தோன்றிற்று.
தொடக்கநூலிலிருந்து வாசகம் 1:1-19

1 தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்த பொழுது, 2 மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. 3 அப்பொழுது கடவுள் "ஒளி தோன்றுக" என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். 4 கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். 5 கடவுள் ஒளிக்குப் 'பகல்' என்றும் இருளுக்கு 'இரவு' என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது. 6 அப்பொழுது கடவுள், "நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்" என்றார். 7 கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. 8 கடவுள் வானத்திற்கு விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது. 9 அப்பொழுது கடவுள், "விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. 10 கடவுள் உலர்ந்த தரைக்கு 'நிலம்' என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் 'கடல்' என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். 11 அப்பொழுது கடவுள், "புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்!" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. 12 புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். 13 மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது. 14 அப்பொழுது கடவுள், "பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக! 15 அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. 16 கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார். 17 கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்; 18 பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். 19 மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக
திருப்பாடல்கள் 104:1-2,5-6,10-12,24,25

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். 2 பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர்

5 நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது என்றென்றும் அசைவுறாது. 6 அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது; மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது

10 பள்ளத்தாக்குகளில் நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்; அவை மலைகளிடையே பாய்ந்தோடும்; 11 அவை காட்டு விலங்குகள் அனைத்திற்கும் குடிக்கத் தரும்; காட்டுக் கழுதைகள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்; 12 நீருற்றுகளின் அருகில் வானத்துப் பறவைகள் கூடுகட்டிக்கொள்கின்றன; அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன

24 ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தணை எத்தணை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.

35 பாவிகள் பூவுலகினின்று ஒழிந்து போவார்களாக! தீயோர்கள் இனி இல்லாது போவார்களாக! என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! அல்லேலூயா!


நற்செய்திக்கு முன் வசனம்

அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:53-56

53 அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்து படகைக் கட்டி நிறுத்தினார்கள்.54 அவர்கள் படகைவிட்டு இறங்கிய உடனே, மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுணர்ந்து,55 அச்சுற்றுப் பகுதி எங்கும் ஓடிச் சென்று, அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நோயாளர்களைப் படுக்கையில் கொண்டு வரத் தொடங்கினார்கள்.56 மேலும் அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொதுவிடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொதுவிடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள்'' (மாற்கு 6:56)

மாற்கு நற்செய்தியின் முதல் பகுதியில் (மாற் 1:1-8:30) இயேசு வல்லமை வாய்ந்த ''மருத்துவராக'' வருகின்றார். அவரை அணுகிச் சென்ற மக்கள் எல்லாரும் நலம் பெறுகிறார்கள். அவருடைய ''மேலுடையின் ஓரத்தைத் தொட்டவர்கள்'' கூட குணமடைகிறார்கள் (காண்க: மாற் 5:21-34). இயேசுவின் பேரும் புகழும் எல்லா இடங்களிலும் பரவுகிறது. இதை மாற்கு தெளிவாகக் காட்டுகிறார். ஆனால் மாற்கு நற்செய்தியில் 8ஆம் அதிகாரத்தின் நடுப்பகுதியில் திடீரென ஒரு மாற்றம் நிகழ்வதைப் பார்க்கிறோம் (மாற் 8:31). இயேசுவை வல்லமை மிக்க மெசியாவாகக் கண்டவர்கள் இயேசு பற்றிய முழு உண்மையையும் அறியவில்லை என மாற்கு உணர்த்துகிறார். இயேசு புரிந்த அதிசயங்களும் புதுமைகளும் அரும்செயல்களும் மக்களுக்கு நலன் கொணர்ந்தது உண்மையே. ஆனால் அத்தகைய வெளிச் செயல்களைக் கொண்டு மட்டுமே இயேசு யார் என்னும் கேள்விக்கு நாம் பதில் கண்டுவிட முடியாது.

இயேசு மெசியா என்றாலும் அவர் ''பல துன்பங்கள் அனுபவித்து, யூத சயமத் தலைவர்களால் உதறித் தள்ளப்பட்டு, கொலைசெய்யப்படுவார்'' (மாற் 8:31) என்னும் செய்தி அவருடைய சீடர்களுக்கும் பிறருக்கும் ஒரு பேரதிர்ச்சியாகத் தோன்றியிருக்க வேண்டும். வல்லமை மிக்கவராகக் காட்சியளித்த மெசியா இங்கே வல்லமையற்றவராகத் தெரிகின்றார். ஆக, இயேசுவின் வல்லமை எதில் அடங்கியிருக்கிறது என்பதை மாற்கு படிப்படியாக விளக்குவார். இயேசு மக்களுக்குக் குணமளித்தார் என்றால் அது அவர் மனித வாழ்வில் உள்ளார்ந்த விதத்தில் கொணர்ந்த நலனின் வெளிப்பாடுதான். வல்லமையற்றவராகத் தோன்றுகின்ற இயேசுதான் உண்மையிலேயே வல்லவர் என நாம் ஏற்க வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் ஆழ்ந்த நம்பிக்கை தேவை. இயேசு கடவுளின் செய்தியை நமக்கு வழங்குகின்றார் என நாம் உறுதியாக ஏற்பதே அந்நம்பிக்கை.

மன்றாட்டு:

இறைவா, வல்லமையற்ற நிலையிலும் உம் வல்லமையை நாங்கள் உணர்ந்திட அருள்தாரும்.