யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2021-02-07

(இன்றைய வாசகங்கள்: யோபு நூலிலிருந்து வாசகம் 7: 1-4,6-7,திபா 147: 1-2. 3-4. 5-6,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவே என் ஆண்டவர் என்று அறிக்கையிட்டு அவரை வழிபட இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்தி அன்புடன் வரவேற்கின்றோம். இன்று பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு. உதவி கேட்டு வருபவர்கள்தாம் உலகில் அதிகம். உதவிக்கு வருபவர்கள் மிகச் சிலர்தான். ஆனால் எல்லாரையும் எல்லா வகையிலும் விடுவிப்பவராக இருக்கிறார் இயேசு என்பதை சிந்திக்க அழைக்கிறது நற்செய்தி. குணமளித்த இயேசுவைப்பற்றி நற்செய்தியில் கேட்டு வந்த நாம் இன்றும் அவரை குணமளிக்கும் வல்லவராகக் காண்கிறோம். ஆம் இயேசு வெறும் வார்த்தைகளால் மட்டும் நற்செய்தியைப் பறைச்சாற்றவில்லை. மாறாகத் தம் செயல்களால், வாழ்வால் அதை அறிவித்தார். அவரின் குணமளிக்கும் வல்லமையால் உடல் நோயிலிருந்து விடுதலையும் தந்தார். இவ்வாறு தனது இறையரசுப் பணியில் இம்மை வாழ்வையும், மறுமை வாழ்வையும் ஒன்றிணைத்து வாழ்வாலும், வார்த்தையாலும் போதித்துத் தானே நடமாடும் நற்செய்தியானார். நாமும் இயேசுவைப் பின்பற்றி நடமாடும் நற்செய்திகளாக மாற இன்றைய திருப்பலியில் மனதார வேண்டிடுவோம்.



முதல் வாசகம்

விடியும்வரை படுக்கையில் புரண்டு உழல்வேன்.
யோபு நூலிலிருந்து வாசகம் 7: 1-4,6-7

யோபு கூறியது: மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன; இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன். என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூர்வீர்; என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார்
திபா 147: 1-2. 3-4. 5-6

1 நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது. 2 ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார். பல்லவி

3 உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார். 4 விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். பல்லவி

5 நம் தலைவர் மாண்பு மிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது. 6 ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். பல்லவி

இரண்டாம் வாசகம்

நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23

சகோதரர் சகோதரிகளே, நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம்கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக்கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெற வேண்டி, நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டா அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39

அக்காலத்தில் இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப்பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவர் அருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரைவிட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை. இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், ``எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்கள். அதற்கு அவர், ``நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்'' என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நலன்களுக்கெல்லாம் தொடக்கமும் நிறைவுமாகிய இறைவா!

எம் திருஅவையில் உள்ள அனைவரும் எத்தகைய துன்பங்கள் சோதனைகள் வந்தாலும் இறை நம்பிக்கைக் குறையாமல் உமது அன்பின் சாட்சிகளாக நற்செய்திகளின் விழுமியங்களைத் தங்கள் வாழ்வாக மாற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியாக வாழ்ந்திடத் தேவையான வரங்களை அருள் மாறிப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

செப வீரரான இயேசு ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம்.

உமது அத்தனை பணிகளுக்கு மத்தியிலும் செபிக்க நீர் நேரம் ஒதுக்கினீர். செபிப்பதற்கு வாய்ப்புகளை உருவாக்கினீர். உம்மைப் போல நாங்களும் செப வீரர்களாக வாழ்ந்திடத் தேவையான வரங்களை அருள் மாறிப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

என்றென்றும் இரக்கமுள்ள இறைவா!

உமது பிள்ளைகள் இளையோராகிய நாங்கள் எமது தேவைகளில் முதன்மையான தேவை நீரே என்று உணர்ந்து நாங்கள் முழுமையாக உம் கரம் பற்றிக் கொள்ளவும், நிலைவாழ்வுப் பெற்று உம்மை அடையவும், இறைநம்பிக்கையில் வளரவும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் தந்தையாகிய தந்தையே!

துன்பங்களாலும், துயரங்களாலும், வறுமையாலும் வாடிக்கொண்டிருக்கும் அனைவர் மீதும் இரங்கி, ஆசி வழங்கி, உம் திருமுக ஒளியை அவர்கள்மீது வீசி அமைதியையும், மகிழ்ச்சியையும் அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஒளியும் மீட்புமான தந்தையே இறைவா!

எமது இளைஞர்களுக்கு நீர் ஒளியாகவும், வழியாகவும் இருந்து வழிகாட்டி, உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மருத்துவராய் நலம் அளிக்கும் தந்தையே, எம் இறைவா!

நோய்களின் உருமாற்றத்தால் செய்வதறியாமல் தவிக்கும் எங்களைக் கண்ணோக்கும். சிறந்த மாற்றுமருந்துகளைக் கண்டுபிடிக்கத் தேவையான ஞானத்தையும், அறிவாற்றலையும் எம் மருத்துவர்களுக்குத் தந்து எம் நலம் காக்க அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு சீமோனுடைய மாமியார் அருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்'' (மாற்கு 1:31)

இயேசு இறையாட்சிப் பணி ஆற்றிய இடங்களில் முக்கியமான ஒன்று கப்பர்நாகும் ஊர் ஆகும். அங்கே சீமோன் பேதுருவின் வீடு இருந்தது. இயேசு அங்குச் செல்வது வழக்கம். சீமோனுடைய மாமியாருக்குக் காய்ச்சல். இயேசு நோயாளருக்கு நலமளிக்கிறார் என்னும் செய்தி ஏற்கெனவே பரவியிருந்தது (காண்க: மாற் 1:27-28). எனவே, சீமோனுடைய மாமியாருக்கு நலமளிக்க வேண்டும் என இயேசுவைக் கேட்கிறார்கள். இயேசு கையைப் பிடித்து அவரைத் தூக்கவே காய்ச்சல் நீங்குகிறது. நலம் பெற்ற அப்பெண்மணி இயேசுவுக்கும் அவரோடு இருந்தவர்களுக்கும் ''பணிவிடை செய்தார்'' (மாற் 1:31). இங்குப் பணிவிடை எனக் குறிக்கப்படுவது ஏதோ உணவு பரிமாறியது மட்டுமல்ல. திருச்சபைச் சமூகத்தில் ஒருவர் மற்றவர் மட்டில் அன்புகொண்டு அவர்களைத் தம் குடும்ப உறுப்பினர்போல ஏற்று மதித்து ஒழுகுவதே ''பணிவிடை''. இத்தகைய பணிவிடை (''தொண்டு'') செய்யவே இயேசு இவ்வுலகில் வந்தார் (மாற் 10:45).

இயேசுவின் மீட்புப் பணி நம்மைத் தீமையிலிருந்து விடுவிப்பதோடு நாம் பிறரை முழு மனத்தோடு அன்புசெய்ய நமக்கு சக்தியையும் வழங்குகிறது. சீமோனின் மாமியார் இதற்கு ஒரு முன்மாதிரி எனலாம். அவருக்கு ஏற்பட்ட ''தீமை'' காய்ச்சலாக வெளிப்பட்டது. அத்தீமையிலிருந்து அவர் விடுதலை பெற்றது இயேசுவை அவர் சந்தித்து, அவரால் தொடப்பட்ட நேரம் நிகழ்ந்தது. இவ்வாறு நலம் பெற்ற அவர் ஒரு புதிய மனிதராக மாறுகிறார். இயேசுவுக்கும் அவரில் நம்பிக்கைகொண்டோருக்கும் ''பணிவிடை'' செய்ய அவர் திறம் பெறுகிறார். நாமும் நலம் பெற்ற மனிதராக, பிறருக்கு நலம் கொணரும் மனிதராக மாறிட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவைப் போல நாங்கள் பணிசெய்திட அருள்தாரும்.