யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 4வது வாரம் வியாழக்கிழமை
2021-02-04




முதல் வாசகம்

புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள்
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12:1-4

18 நீங்கள் வந்து சேர்ந்திருப்பது தொட்டுணரக்கூடிய, தீப்பற்றியெரிகின்ற, இருள்சூழ்ந்த, மந்தாரமான, சுழல்காற்று வீசுகின்ற சீனாய் மலை அல்ல.19 அங்கு எக்காளம் முழங்கிற்று: பேசும் குரலொன்று கேட்டது. அக்குரலைக் கேட்டவர்கள் அதற்குமேல் தங்களோடு அது ஒரு வார்த்தைகூடப் பேசவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.21 நான் அஞ்சி நடுங்கிறேன் என்று மோசேயே சொல்லுமளவுக்கு அக்காட்சி அச்சம் விளைவித்தது.22 ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்: விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக் கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர்.23 விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவுபெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும்,24 புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள். ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச் சிறந்த முறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைந்து உருகினோம்.
திருப்பாடல்கள் 103:1-2,13-14,17-18

.2 அழகும் உயரமுமாய் தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியால் இலங்குகின்றது; மாவேந்தரின் நகரும் அதுவே. 3 அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார்.4 இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்; அணிவகுத்து ஒன்றாக வந்தனர்.

8 கேள்விப்பட்டவாறே நேரில் யாம் கண்டோம்; படைகளின் ஆண்டவரது நகரில், ஆம், கடவுளின் நகரினில் கண்டோம்; கடவுள் அந்நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார். (சேலா)9 கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைந்து உருகினோம்.

10 கடவுளே! உமது பெயரைப் போலவே உமது புகழும் பூவுலகின் கடை எல்லைவரை எட்டுகின்றது; உமது வலக்கை நீதியை நிலைநாட்டுகின்றது.


நற்செய்திக்கு முன் வசனம்

அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:7-13

7 அப்பொழுது அவர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.8 மேலும், ' பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம்.9 ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும் ' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.10 மேலும் அவர், ' நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள்.11 உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் ' என்று அவர்களுக்குக் கூறினார்;12 அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்;13 பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இவர் தச்சர் அல்லவா”!

மாற்கு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடைக்கம் ஓர் அபூர்வமான செய்தி இது. பிற நற்செய்தியாளர்கள் இயேசு தச்சரின் மகன் என்பதைப் பதிவு செய்திருக்கும்போது, மாற்கு மட்டுமே இயேசுவும் ஒரு தச்சர் என்று எழுதியுள்ளார். இயேசு தன் முப்பதாவது வயதில் பணிவாழ்வைத் தொடங்கும் முன், தன் குடும்பத்தில் ஓர் உழைப்பாளியாக, தன் தந்தையின் தொழிலாகிய தச்சுத் தொழிலையே செய்து வந்தார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். மாற்கு அதனைப் பதிவு செய்துள்ளார். ஆம், இயேசு ஒரு தச்சர், உழைப்பாளி. உழைப்பின் மேன்மையை அனுபவமுறையில் அறிந்தவர். இந்தத் தகவல் நம் உள்ளங்களில் பல எண்ணங்களை மலரச் செய்கிறது. .

1. இறைவன் உழைப்பை மேன்மைப்படுத்துகிறார். நாம் உழைக்க வேண்டும். உழைக்காதவர் உண்ணலாகாது. .

2. எந்தத் தொழிலும் இழிவானது அல்ல. நேர்மையுடன் செய்யப்படும் எந்தத் தொழிலும் இறைவனுக்கு ஏற்றதே. .

3. ஒரு மனிதரை அவர் செய்யும் தொழிலைக் கொண்டு மதிப்பிட்டு, இழிவு படுத்தாமல், அவரது பண்புகள், இயல்புகளுக்காக அவரை மதிக்க வேண்டும். .

4. உழைப்பின் அருமையை உணர்ந்தவர்கள்தான் பிறரின் சுமைகளை உணர முடியும். சுமை சுமந்து சோர்ந்திருப்போர், வாருங்கள் என்று இறைப்பாறுதல் தரமுடியும். உழைப்பவர் மட்டுமே உழைக்கும் மக்களின் உணர்வுகளைப் புரிய முடியும். இன்றைய நாளில் உழைப்பாளிகள் பற்றிய நம் பார்வையை ஆழப்படுத்திக்கொள்வோம்.

மன்றாட்டு:

உழைப்பின் மாண்பை வெளிப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீர் ஒரு தச்சராகப் பணி செய்து, உழைப்பவர் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர். நானும் பிறரின் உழைப்பை மதிக்கவும், உடல் உழைப்பில் ஈடுபடுவோர்மீது அக்கறை கொள்ளவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.