யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - B
2021-01-31

(இன்றைய வாசகங்கள்: இணைச்சட்டம் நூலிலிருந்து வாசகம் (இ.ச 18:15-20),திருப்பாடல்கள்: 95: 1-2, 6-9 ,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7:32-35,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

பொதுக்காலம் நான்காம் ஞாயிறுத் திருப்பலிக்கு வந்துள்ள இறை மக்களே! உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

கிறிஸ்து இயேசுவில் அன்புக்குரியவர்களே!! நம் ஆண்டவரின் திருப்பாதத்தில் அவருடைய வார்த்தைகளைக் கேட்டு நிறைவுபெற ஒன்று கூடியுள்ளோம். போதனையும், சாதனையும் என்ற தழைப்பின் கீழ் நம்மைக் சிந்திக்க அழைக்கிறது ஆண்டின் பொதுக்காலம் நான்காம் ஞாயிறு. இருபத்தோராம் நூற்றாண்டில் மனிதர்கள் போதனைகளைவிட சாதனைகளுக்கும், அறிவுரைகளைவிட வாழ்க்கை அனுபவங்களுக்கும் அதிக அழுத்தம் தருகின்றனர் என்றார் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் தனது "மீட்பரின் பணி" என்னும் திருமடலில். உண்மைதான், இந்த மனநிலை எல்லாக் காலத்து மனிதர்களுக்கும் இருக்கிறது. இயேசுவின் காலத்திலும், அவரது போதனைகளைக் கேட்ட மக்கள் வியந்தனர். காரணம் அவரது போதனை அதிகாரம் நிறைந்ததாக இருந்தது. அந்த அதிகாரத்தை இயேசுவின் செயல்களிலும் அவர்கள் கண்டனர்.

இயேசு தீய ஆவியிடம் வாயை மூடு. இவரைவிட்டு வெளியே போ" என்று அதிகாரத்தோடு அதட்டி, வெளியேற்றினார். எனவேதான், மக்கள் திகைப்புற்று, இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! என்று வியந்தனர். நமது சொற்கள் அதிகாரம் கொண்டதாக அமையவேண்டுமென்றால், நமது சொற்களுக்கும், செயல்களுக்கும் முரண்பாடு இல்லாமல் இருக்கவேண்டும். நமது சொற்கள் நமது செயல்களில் எதிரொலிக்க வேண்டும். எங்களுடைய வாழ்விலும் நாங்கள் பேசுகின்ற வார்த்தைகளின்படி செயல்பட்டு, அதன்வழியாக அதிகாரம் நிறைந்து பேச அருள்வேண்டி தொடரும் இத்திருப்பலியில் இறைஞ்சி மன்றாடுவோம்.முதல் வாசகம்

ஓர் இறைவாக்கினனை ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்பேன்.
இணைச்சட்டம் நூலிலிருந்து வாசகம் (இ.ச 18:15-20)

அந்நாள்களில், மோசே மக்களிடம் கூறியது: உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. ஓரேபில் திருப்பேரவை கூடிய நாளில், நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடி, "நான் இறந்து போகாதபடி, என் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலியை இனி நான் கேட்காமலும் இப்பெரும் நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக" என்று விண்ணப்பித்தபோது, ஆண்டவர் என்னைநோக்கி, "அவர்கள் சொன்னதெல்லாம் சரி" என்றார். உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என்பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பான். ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்.
திருப்பாடல்கள்: 95: 1-2, 6-9

வாருங்கள். ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள். நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம். புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி:

வாருங்கள். தாள்பணிந்து அவரைத் தொழுவோம். நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள். நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள். நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! பல்லவி:

அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர். என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதி த்துப் பார்த்தனர் பல்லவி:

இரண்டாம் வாசகம்

கன்னிப்பெண்; தூயவராக இருக்கும் வண்ணம் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறையாக இருக்கின்றார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7:32-35

சகோதர சகோதரிகளே, நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன், மணமாகாதவர் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். ஆனால் மணமானவர் உலகுக்குரியவற்றில் அக்கறைகொள்கிறார்; எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது. மணமாகாத பெண்ணும் கன்னிப்பெண்ணும் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோராகின்றனர். ஆனால் மணமான பெண், உலகுக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழுமனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28

இம்முறை இயேசுவும் அவர் சீடர்களும் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கத்தியது. "வாயை மூடு; இவரை விட்டு வெளியோ போ" என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. அவர்கள் அனைவரும் திகைப்புற்று, "இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" என்று தங்களிடையே பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நல்லாசிரியராம் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். உமது உண்மை நெறியில் அவர்களை நடத்தி அவர்களுக்குக் கற்பித்தருளும். அதன் வழியாக அவர்கள் தாங்கள் பெற்றுக் கொண்ட அழைத்தலுக்கு ஏற்ப பிரமாணிக்கமாய் வாழ்ந்திட வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஐயங்கள் அகற்றி எம்மை அன்புணர்வில் ஒன்றுசேர்க்கும் இறைவா!

நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள உறவுகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் இன்று தவறான போதனைகளாலும், போலியான புரிதல்களாலும், தீய சக்திகளாலும், பொறாமையாலும் பிரிந்திருக்கின்ற எங்கள் உறவுகளை மீண்டும் உமதருளால் புதுப்பித்து, ஒன்றிணைத்து ஒற்றுமையிலும், அன்பிலும், மன்னிப்பிலும் என்றும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நலம் அருளும் எம் தந்தையே! இறைவா!

தொற்று நோயின் தாக்கத்திலிருந்து எங்களை காத்தருளும். மருத்துவர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் அனைவரையும் உமது வல்லமை மிக்கக் கரத்தால் பாதுகாத்து, தன்னலமற்ற இந்த சேவையில் சிறப்புடன் செயல்பட தேவையான வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

வானகத் தந்தையே இறைவா,

உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம். ஆண்டவர் இயேசுவின் அதிகாரம் நிறைந்த போதனைக்காக உம்மைப் போற்றுகிறோம். எங்களுடைய வாழ்விலும் நாங்கள் பேசுகின்ற வார்த்தைகளின்படி செயல்பட்டு, அதன்வழியாக அதிகாரம் நிறைந்து பேச அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஒளியும் மீட்புமான தந்தையே இறைவா!

எமது இளைஞர்களுக்கு நீர் ஒளியாகவும், வழியாகவும் இருந்து வழிகாட்டி, உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மருத்துவராய் நலம் அளிக்கும் தந்தையே, எம் இறைவா!

நோய்களின் உருமாற்றத்தால் செய்வதறியாமல் தவிக்கும் எங்களைக் கண்ணோக்கும். சிறந்த மாற்றுமருந்துகளைக் கண்டுபிடிக்கத் தேவையான ஞானத்தையும், அறிவாற்றலையும் எம் மருத்துவர்களுக்குத் தந்து எம் நலம் காக்க அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''நீர் யாரென எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' (மாற்கு 1:24)

மாற்கு நற்செய்தியின் தொடக்கத்திலேயே இயேசுவுக்கும் தீய சக்திகளுக்கும் இடையே ஒரு பெரிய போராட்டம் நிகழ்வது குறிக்கப்படுகிறது. தீய ஆவியை இயேசு துரத்துகிறார். ஆனால் அந்த ஆவி இயேசு யார் என்பது குறித்துச் சான்று பகர்கிறது. ''நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' (மாற் 1:24) என்னும் சொற்கள் தீய ஆவியின் வாயிலிருந்து புறப்பட்டதாக மாற்கு எடுத்துரைக்கிறார். இயேசு கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்னும் உண்மையை இயேசுவின் சீடரே படிப்படியாகத்தான் அறிந்துகொண்டார்கள். ஆனால் தீய ஆவியோ இயேசு யார் என்பதை அறிக்கையிட முந்திக்கொள்கிறது. இவ்வாறு இயேசு பற்றிய தகவலைத் தீய ஆவி அறிக்கையிட்டபோது இயேசு அதைக் கடிந்துகொள்கிறார். ''வாயை மூடு'' என இயேசு கடுமையாகக் கூறுகிறார்.

இதிலிருந்து நாம் அறியும் முக்கிய கருத்து இயேசு பற்றிய நம்பிக்கை அறிக்கை மனிதரின் வாயிலிருந்து வெளிவர வேண்டும் என்பதாகும். தீய ஆவியின் அறிக்கை ஒரு தகவலாக இருக்கலாமே ஒழிய, கடவுளின் திட்டத்தை ஏற்றுப் பணிகின்ற பண்பு தீய ஆவிக்கு இல்லை. மாறாக, மனிதரின் உள்ளத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே இயேசுவின் பணி நோக்கம். மனிதர் உள்ளத்தில் மாற்றம் பெற்று, கடவுளின் வெளிப்பாட்டை ஏற்று, அவர் அனுப்பிய அவர்தம் மகனில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இந்நோக்கம் நிறைவேறும்போது இயேசுவின் பணி நம்மில் பயன் நல்குகிறது என நாம் கூறலாம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனை அறியவும் அவர் அறிவிக்கின்ற நற்செய்தியை ஏற்கவும் எங்களுக்கு அருள்தாரும்.