யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 3வது வாரம் சனிக்கிழமை
2021-01-30
முதல் வாசகம்

கடவுளைத் தன் சிற்பியும், கட்டுபவருமாகக் கொண்ட நகரை ஆபிரகாம் எதிர்நோக்கியிருந்தார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2, 8-19

சகோதரர் சகோதரிகளே, நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர். ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஓர் அன்னியரைப்போல வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே. ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர். இவர்கள் எல்லாம் நம்பிக்கை கொண்டவர்களாய் இறந்தார்கள்; வாக்களிக்கப்பட்டவற்றை அவர்கள் பெறவில்லையெனினும், தொலையில் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்; இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக்கொண்டார்கள். இவ்வாறு ஏற்றுக்கொள்வோர் தம்முடைய தாய்நாட்டைத் தேடிச் செல்வோர் என்பது தெளிவு. தாங்கள் விட்டுவந்த நாட்டை அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். ஆனால், அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிறார்கள். அதனால்தான் கடவுளும் தம்மை, ``அவர்களுடைய கடவுள்'' என்று அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை. அவர்களுக்கென அவர் ஒரு நகரை ஆயத்தப்படுத்தியுள்ளார். ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். ``ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்'' என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன்வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக் கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

லூக் 1: 69-70. 71-73. 74-75
தம் மக்களைத் தேடிவந்து விடுவித்த ஆண்டவரைப் போற்றுவோம்.

தம் தூய இறைவாக்கினர் வாயினால் 70 தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார். பல்லவி

71 நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார். 72 அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, 73 தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார். பல்லவி

74 இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து 75 விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41

அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ``அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்'' என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன. அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அவர்கள், ``போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?'' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, ``இரையாதே, அமைதியாயிரு'' என்றார், காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று. பின் அவர் அவர்களை நோக்கி, ``ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?'' என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, ``காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?'' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

அக்கரைக்குச் செல்வோம் !

”அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் ” என்னும் அழைப்பு இன்று நம் காதுகளில் ஒலிக்கிறது. மாலை நேரத்தில் இயேசு தம் சீடர்களை அக்கரை செல்ல அழைக்கிறார். அவர்களும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, இயேசுவை படகில் வேறு இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு பாடம். நாள் முழுவதும் மக்களுடன் நற்செய்தி அறிவிப்புப் பணியையும், குணமாக்கும் பணியையும் இயேசு செய்தார். ஆனால், மாலையிலோ மக்களை அனுப்பிவிட்டு, தம் சீடருடன் தனியாக இருக்க, செபிக்க, உறவைப் பகிர விரும்பினார் இயேசு. எனவே, மக்களை அனுப்பிவிட்டு, தம் சீடரோடு தனித்திருக்க அழைக்கிறார். அவர்களும் உடன் செல்கிறார்கள்.

நீங்கள் உழைப்பையே வாழ்வுநிலையாக மாற்றிக்கொண்டவரா? ஓய்வின்றி வேலை செய்பவரா? உங்கள் குடும்பத்தினருடன், நெஞ்சுக்கு நெருக்கமானவர்களுடன் நேரம் செலவழிப்பதற்குக்கூட உங்களுக்கு நேரமில்லாதபடி பணியாற்றுகின்றீர்களா? அப்படியென்றால், அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் என்னும் அழைப்பு உங்களுக்குத்தான். உழைத்தது போதும். ஓடி, ஆடி வேலை செய்தது போதும். உங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. உங்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்க, உறவாட, தனிமை தேவைப்படுகிறது. அக்கரைக்குச் செல்லுங்கள். உறவைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள். அதன்பின், இன்னும் அதிக ஆர்வத்துடன் உங்களால் பணியாற்ற முடியும்.

மன்றாட்டு:

அழைத்தலின் நாயகனே இயேசுவே, அக்கரைக்குச் செல்ல நீர் தந்த அழைப்புக்காக நன்றி. எல்லாப் பணிகளுக்கு மத்தியிலும் உமக்கும், எனக்கு நெருக்கமானவர்களுக்கும் நேரம் ஒதுக்கி, தனித்திருக்க, உறவை மேம்படுத்த அருள் தாரும். ஆமென்.