முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 3வது வாரம் வெள்ளிக்கிழமை 2021-01-29
முதல் வாசகம்
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மனஉறுதி தேவை.
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10:32-39
32 முன்னைய நாள்களை நினைவு கூருங்கள். நீங்கள் ஒளி பெற்றபின் உங்களுக்கு நேரிட்ட துன்பம் நிறைந்த போராட்டத்தை மனஉறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள்.33 சில வேளைகளில், நீங்கள் இகழ்ச்சிக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, வேடிக்கைப் பொருளானீர்கள். வேறு சில வேளைகளில், இந்நிலைக்கு ஆளானோரின் துன்பங்களில் பங்கு பெற்றீர்கள்.34 கைதிகளுக்குப் பரிவிரக்கம் காட்டினீர்கள். உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோதும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். ஏனெனில் சிறந்த, நிலையான உடைமைகள் உங்களுக்கு உள்ளன என்பதை அறிவீர்கள்.35 உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டுவிடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு.36 கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மனஉறுதி தேவை.37 இன்னும், மிக மிகக் குறகிய காலமே இருக்கிறது: வரவிருக்கிறவர் வந்து விடுவார், காலம் தாழ்த்தமாட்டார்.38 நேர்மையுடன் நடக்கும் என் அடியார், நம்பிக்கையினால் வாழ்வு அடைவார். எவராவது பின்வாங்கிச் செல்வார் என்றால் அவரில் நான் மகிழ்ச்சியுறேன்.39 நாமோ பின்வாங்கிச் சென்று அழிவுறுவோர் அல்ல. மாறாக, நம்பிக்கையையும் வாழ்வையும் காத்துக்கொள்வோர் ஆவோம்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது
திருப்பாடல்கள் 37;3-6, 23-24, 39-40
3 ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ்.4 ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.
5 உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.6 உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார்.
23 தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார்.24 அவர்கள் விழுந்தாலும் வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்; ஆண்டவர் அவர்களைத் தம் கையால் தூக்கி நிறுத்துவார்.
39 நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே.40 ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார்.
நற்செய்திக்கு முன் வசனம்
இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்?
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4:26-34
26 தொடர்ந்து இயேசு, ' இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்:27 நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது.28 முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது.29 பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது ' என்று கூறினார்.
30 மேலும் அவர், ' இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்?31 அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது.32 அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும் ' என்று கூறினார்.
33 அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார்.34 உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ
அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்'' (மாற்கு 4:25)
பிறருக்கு நன்மை செய்தால் நமக்கும் பிறர் நன்மை செய்வர் என்னும் தத்துவம் பெரும்பாலும் உண்மையாக இருக்கலாம். ஆனால் சில வேளைகளில் சில மனிதர்கள் இதைப் பொய்யாக்கிவிடுகிறார்கள். ஏனென்றால், நன்மை செய்கின்ற மனிதருக்கும் தீமையைக் கைம்மாறாக அளிக்கும் அவல நிலை நம் சமுதாயத்தில் தொடர்ந்து நிலவுகிறது. இயேசு அளித்த போதனையில் இரு கருத்துக்கள் உள்ளன: முதலில், நாம் பிறருக்கு எப்போதுமே நன்மை செய்ய வேண்டும் என இயேசு வலியுறுத்துகிறார். நம் வாழ்வு விளக்கைப் போல ஒளிவீச வேண்டும்; யாவருக்கும் தெரியும் விதத்தில் விளங்க வேண்டும் (காண்க: மாற் 3:21). இவ்வாறு பிறருக்கு ஒளியாக அமைகின்ற வாழ்க்கையை அணைத்துப்போட நினைப்பவர்கள் உண்டு. இயேசுவுக்கு இதுதான் நிகழ்ந்தது. உலகுக்கு ஒளியாக வந்த அவரை இருள் ஏற்றுக்கொள்ளவில்லை (காண்க: யோவா 1:9-10). நன்மை செய்வோருக்குத் தீமையே பரிசாகக் கிடைப்பதும் உண்டு. இரண்டாவதாக, பிறருக்கு நாம் தீங்கு செய்தால் அதன் உடனடி விளைவு நம்மைப் பாதிக்காததுபோலத் தோன்றினாலும் கடவுளின் தீர்ப்பு ஒருநாள் நம்மை வந்தடையும்.
எனவே, எப்போதும் எவ்விடத்திலும் நன்மை செய்வதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும் என இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார். நன்மை செய்வோர் கடவுளின் பணியைத் தொடர்கின்றனர். மாறாக, தீங்கு செய்வோர் கடவுளின் செயலுக்குத் தடைபோட முனைகிறார்கள். அத்தடைகளைத் தாண்டி தீமையிலிருந்தும் நன்மை விளைவிக்கும் திறனும் கடவுளுக்கு உண்டு. நாம் அளக்கும் அளவை கடவுளின் அளவையாக இருக்க வேண்டும். அப்போது நம் வழியாகக் கடவுளின் செயல் உலகில் வல்லமையோடு தோன்றும்.
மன்றாட்டு:
இறைவா, நன்மை செய்யும் ஆற்றலை எங்களுக்கு அளிப்பவர் நீரே என உணர்ந்து வாழ அருள்தாரும்.
|