யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 3வது வாரம் வியாழக்கிழமை
2021-01-28

புனித ஜோன் பொஸ்கோ0




முதல் வாசகம்

நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10:19-25

19 சகோதர சகோதரிகளே, இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்துக்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு.20 ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி.21 மேலும் கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு.22 ஆதலால், தீய மனச் சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக.23 நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். எனவே நாம் எதிர்நோக்கியிருப்பதைப்பற்றித் தயக்கமின்றி அறிக்கையிடுவதில் நிலையாய் இருப்போமாக.24 அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக.25 சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது: ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதிநாள் நெருங்கி வருகிறதைக் காண்கிறோம்: எனவே இன்னும் அதிகமாய் ஊக்கமூட்டுவோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே
திருப்பாடல்கள் 24:1-6

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.

2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலை நாட்டினவரும் அவரே.3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்?

4 கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்; வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர்,5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.

6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. (சேலா)


நற்செய்திக்கு முன் வசனம்

வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4:21-25

21 இயேசு அவர்களிடம், ' விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின் மீது வைப்பதற்காக அல்லவா?22 வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை.23 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் ' என்றார்.24 மேலும் அவர், ' நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும்.25 ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் ' என்று அவர்களிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்'' (மாற்கு 4:25)

பிறருக்கு நன்மை செய்தால் நமக்கும் பிறர் நன்மை செய்வர் என்னும் தத்துவம் பெரும்பாலும் உண்மையாக இருக்கலாம். ஆனால் சில வேளைகளில் சில மனிதர்கள் இதைப் பொய்யாக்கிவிடுகிறார்கள். ஏனென்றால், நன்மை செய்கின்ற மனிதருக்கும் தீமையைக் கைம்மாறாக அளிக்கும் அவல நிலை நம் சமுதாயத்தில் தொடர்ந்து நிலவுகிறது. இயேசு அளித்த போதனையில் இரு கருத்துக்கள் உள்ளன: முதலில், நாம் பிறருக்கு எப்போதுமே நன்மை செய்ய வேண்டும் என இயேசு வலியுறுத்துகிறார். நம் வாழ்வு விளக்கைப் போல ஒளிவீச வேண்டும்; யாவருக்கும் தெரியும் விதத்தில் விளங்க வேண்டும் (காண்க: மாற் 3:21). இவ்வாறு பிறருக்கு ஒளியாக அமைகின்ற வாழ்க்கையை அணைத்துப்போட நினைப்பவர்கள் உண்டு. இயேசுவுக்கு இதுதான் நிகழ்ந்தது. உலகுக்கு ஒளியாக வந்த அவரை இருள் ஏற்றுக்கொள்ளவில்லை (காண்க: யோவா 1:9-10). நன்மை செய்வோருக்குத் தீமையே பரிசாகக் கிடைப்பதும் உண்டு. இரண்டாவதாக, பிறருக்கு நாம் தீங்கு செய்தால் அதன் உடனடி விளைவு நம்மைப் பாதிக்காததுபோலத் தோன்றினாலும் கடவுளின் தீர்ப்பு ஒருநாள் நம்மை வந்தடையும்.

எனவே, எப்போதும் எவ்விடத்திலும் நன்மை செய்வதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும் என இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார். நன்மை செய்வோர் கடவுளின் பணியைத் தொடர்கின்றனர். மாறாக, தீங்கு செய்வோர் கடவுளின் செயலுக்குத் தடைபோட முனைகிறார்கள். அத்தடைகளைத் தாண்டி தீமையிலிருந்தும் நன்மை விளைவிக்கும் திறனும் கடவுளுக்கு உண்டு. நாம் அளக்கும் அளவை கடவுளின் அளவையாக இருக்க வேண்டும். அப்போது நம் வழியாகக் கடவுளின் செயல் உலகில் வல்லமையோடு தோன்றும்.

மன்றாட்டு:

இறைவா, நன்மை செய்யும் ஆற்றலை எங்களுக்கு அளிப்பவர் நீரே என உணர்ந்து வாழ அருள்தாரும்.