முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 3வது வாரம் புதன்கிழமை 2021-01-27
முதல் வாசகம்
இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்துள்ளார்.
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10:11-18
11 ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை.12 ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்துள்ளார்.13 அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார்.14 தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார்.15 இதுபற்றித் தூய ஆவியாரும், அந்நாள்களுக்குப்பிறகு அவர்களோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே:16 என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்: அதை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன் என்று நமக்குச் சான்று பகர்கிறார். இவ்வாறு சொன்ன பின்,17 அவர்களது தீச்செயலையும் அவர்களுடைய பாவங்களையும் இனிமேல் நினைவுகூர மாட்டேன் என்றும் கூறுகிறார்.18 எனவே பாவமன்னிப்பு கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமேயில்லை.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே
திருப்பாடல்கள் 110:1-4
1 ஆண்டவர் என் தலைவரிடம் 'நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார்.
2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஒங்கச்செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! 3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.
4 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார் அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார்.
நற்செய்திக்கு முன் வசனம்
சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4:1-10
1 அவர் மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர்.2 அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது:3 ' இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.4 அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.5 வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன.6 ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின.7 மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை.8 ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.9 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும். ' 10 அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்து கொண்டு, உவமைகளைப்பற்றி அவரிடம் கேட்டார்கள்.11 அதற்கு இயேசு அவர்களிடம், ' இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன.12 எனவே அவர்கள் ' ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டு கொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள் ' என்று கூறினார்.
13 மேலும் அவர் அவர்களை நோக்கி, ' இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்?14 விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார்.15 வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான்.16 பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள்.17 ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள்.18 முட்செடிகளுக்கு இடையில் விதைக்கபட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் 19 இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கி விடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.20 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர் ' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து,
சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும்
சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன'' (மாற்கு 4:8)
கடவுளாட்சி என்றால் என்னவென்று விளக்கிச் சொல்வதற்காக இயேசு பல உவமைகளைப் பயன்படுத்தினார். இவ்வாறு இயேசு கூறிய உவமைகள் அன்றாட வாழ்க்கைச் சூழமைவைப் பிரதிபலித்தன. அவர் கூறிய உவமைகளில் பல விவசாயப் பின்னணியில் அமைந்தன. எடுத்துக்காட்டாக, விதைப்பவர் உவமையைக் கூறலாம். விதைக்கும்போது எல்லா விதைகளும் நல்ல நிலத்தில் விழாமல் சில வழியோரத்திலும், சில பாறைப் பகுதிகளிலும், சில முட்செடிகள் நடுவிலும் விழுந்ததால் பயனற்றுப் போயின. ஆனால் நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் ஏராளமாகப் பலன் நல்கின; முப்பது, அறுபது, நூறு மடங்குவரை அறுவடை கிடைத்தது. இங்கே வருகின்ற ''விதை'' கடவுளின் வார்த்தையைக் குறிக்கிறது என்றும், அவ்வார்த்தையைக் கேட்டு, அதை உள்ளத்தில் ஏற்று, அதன் ஒளியில் தம் வாழ்க்கையை அமைப்போர் மிகுந்த பலன் நல்குவர் என்று இயேசுவே இந்த உவமைக்கு விளக்கம் தந்ததாகவும் நற்செய்தியாசிரியர் குறிப்பிடுகிறார் (காண்க: மாற் 4:13-20). நம் உள்ளத்தில் கடவுளின் வார்த்தையை நாம் எவ்வாறு ஏற்கிறோம்? நம் உள்ளம் பண்பட்ட நிலமாக உள்ளதா அல்லது கல்லும் முள்ளும் நிறைந்த பயனற்ற நிலமாகக் கிடக்கிறதா? பண்பட்ட நிலத்தில் விழுகின்ற விதை பயன்தருவது போல நாமும் கடவுளின் வார்த்தையைப் பணிவோடு ஏற்று, பாதுகாத்து, வளரவிட்டால் அது அதிசயமான பலனை நல்கும் என்பதில் ஐயமில்லை.
மன்றாட்டு:
இறைவா, எங்கள் உள்ளம் பண்பட்ட நிலமாக இருந்து உம் வார்த்தையை ஏற்றுப் பலன் நல்கிட அருள்தாரும்.
|