திருவழிபாடு ஆண்டு - B 2021-01-24
(இன்றைய வாசகங்கள்:
இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம். (யோனா.3:1-5,10),திருப்பாடல்கள்: திபா 25: 4-5, 6-7, 8-9
,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7:29-31,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 14-20)
திருப்பலி முன்னுரை
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவே என்ஆண்டவர் என்று அறிக்கையிட்டு அவரை வழிபட இவ்வாலயம் வந்துள்ள உங்கள்அனைவரையும் வாழ்த்தி அன்புடன் வரவேற்கின்றோம். இன்று நாம் பொதுக்கால மூன்றாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.
இயேசு அழைத்தபோது படகையும், வலைகளையும் விட்டுவிட்டு அவரை பின்தொடர்ந்தனர் சீடர்கள். இனி அவர்களின் நிறைவு கடல் அல்ல கடவுளே. இன்றைய திருவழிபாட்டின் வழியாக இயேசு நம்மையும் அழைக்கின்றார். பணம், பட்டம், பதவி, பேர், புகழ் இவைகளை விட்டுவிட்டு அவரை பின்தொடர விரும்புகின்றோமா? நாம் எதில் நிறைவு காண்கின்றோம்? உலகச் செல்வத்திலா? இயேசுவிலா? உலகச் செல்வத்தில் கவனம் செலுத்திய நேரங்களுக்காக மனம்வருந்துவோம். இயேசுவில் நிறைவுக்கான வரம்வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசகம்
நினிவே மக்கள் தீய வழிகளினின்று விலகினர்.
இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம். (யோனா.3:1-5,10)
அந்நாள்களில், இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், 'நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி ' என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்றுநாள் ஆகும். யோனா நகருக்குள் சென்ற, ஒரு நாள் முழுதும் நடந்த பின், உரத்த குரலில், ' இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும் ' என்று அறிவித்தார். நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர். கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்: தாம் அவர்கள் மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்.
திருப்பாடல்கள்: திபா 25: 4-5, 6-7, 8-9
4.ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்;
உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்;
உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். ஏனெனில்,
நீரே என் மீட்பராம் கடவுள்: பல்லவி
6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில்,
அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7 உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்;
ஏனெனில் ஆண்டவரே நீரே நல்லவர்: பல்லவி
8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால்,
அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்;
எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார்.: பல்லவி
இரண்டாம் வாசகம் இந்த உலக அமைப்பு கடந்து போகக் கூடியது. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7:29-31அன்பர்களே, நான் சொல்வது இதுவே; இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடு நாள் இராது. - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. 'மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்". அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 14-20
யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார். அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நல்லாசிரியராம் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். உமது உண்மை நெறியில் அவர்களை நடத்தி அவர்களுக்குக் கற்பித்தருளும். அதன் வழியாக அவர்கள் தாங்கள் பெற்றுக் கொண்ட அழைத்தலுக்கு ஏற்ப பிரமாணிக்கமாய் வாழ்ந்திட வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
விண்ணரசு சிறுபிள்ளைகளுக்கே உரியது என்று உரைத்த இறைவா, சிறுவர் சிறுமிகளை உமது கரத்தில் ஒப்படைக்கின்றோம். அவர்கள் பெற்றோர்களுக்கு கீழ்படிந்து வாழவும், ஞானத்திலும், பக்தியிலும் வளரவும், உமக்கு உகந்த பிள்ளைகளாக வாழவும் தேவையான வரம் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பிரிவுற்ற அனைவரையும் ஒன்றிணைத்து அமைதியை உருவாக்கும் தந்தையே. நாங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருந்து. எங்களிடையே உள்ள பிளவுகளைத் தவிர்த்து, கிறீஸ்துவுக்குள் ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டு, உமக்குகந்த அன்பிய சமூகமாக வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக்காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே! நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும், துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணை யினாலும் , இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் , நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஒளியும் மீட்புமான தந்தையே இறைவா! எமது இளைஞர்களுக்கு நீர் ஒளியாகவும், வழியாகவும் இருந்து வழிகாட்டி, உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
உம்மைத் தேடியவர்களுக்கு உம்மை வெளிப்படுத்திய எம் இறைவா! எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் உம்மைத் தேடிக் கண்டடையவும், எமது வாழ்வு நடத்தை, செயல்கள், பேச்சு, உடைநடை பாவனை எல்லாம் உலகமாந்தர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய் மாற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..
|