இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 1வது வாரம் சனிக்கிழமை 2021-01-16
முதல் வாசகம்
அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-16
சகோதரர் சகோதரிகளே, கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை.
அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்க வேண்டும். எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால், நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக!
ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.
திருப்பாடல் 19: 7. 8. 9. 14
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. பல்லவி
8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. பல்லவி
9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி
14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
லூக் 4: 18-19
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-17
இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், ``என்னைப் பின்பற்றி வா'' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள்.
அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், ``இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?'' என்று கேட்டனர்.
இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, ``நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்'' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு, 'நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள்.
அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்' என்றார்'' (மாற்கு 1:38)
மக்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்தார் இயேசு. அவ்வேளைகளில் இயேசு தம்மோடு தொடர்ந்து இருக்கவேண்டும் என்று மக்கள் விரும்பியதுண்டு. எனவேதான் சீடர்கள் இயேசுவிடம் சென்று, ''எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்'' என்று கூறினார்கள் (மாற் 1:37). ஆனால் இயேசு ஒருசில மனிதரை மனமாற்றம் அடையச் செய்தால் போதும் என்றோ, அவர்களுக்கு மட்டும் நற்செய்தி அறிவித்தால் போதும் என்றோ நினைக்கவில்லை. அவர் மேலும் பல ஊர்களுக்குச் செல்ல வேண்டும்; மேலும் பல மக்களைச் சென்றடைய வேண்டும்; மேலும் பலரை இறையாட்சியின் அரவணைப்பில் கொண்டு வர வேண்டும் என்னும் ஆர்வத்தால் உந்தப்பட்டார். எனவே, ''நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம்'' என்றார். இயேசு பல ஊர்களுக்குச் சென்று போதித்தாலும் அவருடைய நடமாட்டம் கலிலேயா பகுதியிலும் எருசலேம் பகுதியிலும் மட்டுமே நிகழ்ந்தது. இயேசுவின் பணியைத் தொடர்ந்து அனைத்துலக மக்களுக்கும் நற்செய்தியை அறிவிக்கின்ற பொறுப்பு அவருடைய சீடர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாம் இயேசுவின் கால்களாக, கைகளாக, ஏன் இயேசுவின் உடலாக இருக்கின்றோம் என பவுல் அறிவுறுத்துகிறார் (காண்க: 1 கொரி 12:27; எபே 4:4-6). இத்தகைய உணர்வால் உந்தப்பட்டு, பவுல் போன்ற திருத்தூதர்கள் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கப் புறப்பட்டுச் சென்றார்கள். பிற்காலத்தில் தூய பிரான்சிஸ் சவேரியார் போன்றோர் இந்திய நாட்டிற்கு வந்து மறையறிவித்தார்கள். எனவே, இயேசு ஊர் ஊராகச் சென்று போதித்த பணி இன்றும் தொடர்கிறது. நற்செய்தியைப் பறைசாற்றுவோர் இயேசுவைப் பின்பற்றி ''அடுத்த ஊர்களுக்கும்'' போக அழைக்கப்படுகிறார்கள். ஒரே இடத்தில், ஒரே தளத்தில் வேரூயஅp;ன்றி விடாமல் வெவ்வேறு மக்களை அணுகிச் சென்று அவர்களையும் இறையாட்சியின் அரவணைப்பில் கொணர்ந்திட முயல வேண்டும் என்பதை இயேசுவின் பணி நமக்கு உணர்த்துகிறது. இதனால் நாம் பயணம் சென்று தொலைநாடுகள் செல்லவேண்டும் என்றில்லை; மாறாக, எங்கிருந்தாலும் அங்குள்ள அனைவருக்கும் வேறுபாடின்றி நற்செய்தியின் தூதுவர்களாக நாம் விளங்கிட வேண்டும் என்பதே பொருள்.
மன்றாட்டு:
இறைவா, எங்களை நற்செய்தியின் தூதுவர்களாக மாற்றியருளும்.
|