இரண்டாவது திருவழிபாடு ஆண்டு திருக்காட்சிக் காலம் 1வது வாரம் வியாழக்கிழமை 2021-01-07
முதல் வாசகம்
கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும்
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 19-5: 4
அன்பார்ந்தவர்களே, கடவுளே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம். கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது. கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும்.
இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை. இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
திருப்பாடல் 72: 1-2. 14-15. 17
கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி
14 அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்; அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது. 15bஉ அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக! அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக! பல்லவி
17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ள வரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசி பெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிட்டு அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார்.
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 14-22
அக்காலத்தில் இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.
இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.
இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: �ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.
ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.''
பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, �நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று'' என்றார்.
அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, �இவர் யோசேப்பின் மகன் அல்லவா?'' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
அவர்கள் உள்ளம் மழுங்கிப் போயிருந்தது !
இன்றைய நற்செய்தி வாசகத்தின் கடைசி வாக்கியத்தை நம் சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம். இயேசு கடல்மீது நடந்து வந்ததையும், காற்றை அடக்கியதையும் கண்ட சீடர்கள் மிக மிக மலைத்துப் போனார்கள். ஏனெனில், அப்பங்கள் பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்று கூறும் நற்செய்தியாளர் அதற்குத் தருகின்ற விளக்கம்தான் “அவர்கள் உள்ளம் மழுங்கிப்போயிருந்தது” என்பது.
அப்பங்கள் பற்றிய நிகழ்ச்சியைப் புரிந்துகொள்ளாததனால்தான், இயேசு கடல்மீது நடந்த நிகழ்ச்சியை சீடர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்பங்களைப் பெருக்கியதன் மூலம் இயேசு தாமே மெசியா என்றும், விண்ணரசின் புதிய விருந்தளிப்பவர் என்றும், நிறைவான உணவை வழங்குபவர் என்றும் எண்பித்தார். ஆனால், அந்த நிகழ்ச்சியினால் அவரை மெசியாவாக ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே, அவருக்கு இயற்கையின்மீது ஆற்றலும், அதிகாரமும் உண்டு என்பதை உணர முடியும். அப்படி உணராததால்தான் அவர்கள் மலைத்துப்போனார்கள் என்று சொல்லும் நற்செய்தியாளர் அதற்கான காரணமாக உள்ளம் மழுங்கியதைக் குறிப்பிடுகிறார். யாருக்கெல்லாம் இறைவன் ஞ்hனம் என்னும் கொடையை, நம்பிக்கை என்னும் வரத்தைத் தருகிறாரோ, அவர்களெல்லாம் இயேசுவை அருளடையாளங்களில் மெசியாவாக ஏற்றுக்கொள்வர். இறையருள் இல்லாதவர்களின் உள்ளம் மழுங்கித்தான் போகும். அந்தக் கொடைக்காக மன்றாடுவோம்.
மன்றாட்டு:
ஞானத்தின் ஊற்றே ஆண்டவரே, எங்கள் வாழ்வில் நீர் செய்யும் அரும்பெரும் செயல்களைக் கண்டும் உம்மை எம் ஆண்டவராக, மெசியாவாக ஏற்றுக்கொள்ளாத தன்மைக்காக மன்னிப்புக் கோருகிறோம். எங்கள் உள்ளங்களைத் தூய ஆவி என்னும் கொடையால் நிரப்பி, மழுங்கிய உள்ளங்களைத் திறக்கச் செங்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்
|