யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2020-12-25

கிறிஸ்துபிறப்பு பெருவிழா

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 7-10, திருப்பாடல் 98: 1. 2-3. 3-4. 5-6,எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-6,புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். நம் மீட்பரும் ஆண்டவருமான இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாட பெருமகிழ்ச்சியுடன் ஒன்று கூடியுள்ளோம்.

முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இக்காலத்தில்; தம் மகன் வழியாக நம்மோடு பேசுகின்றார். நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தினால் கடவுள் நம்மை மீட்டார்: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்: நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன, என்பது இயேசுவின் பிறப்பு நமக்குத் தரும் உறுதி மொழியாகும். இதுவே நமக்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி. இயேசுவின் பிறப்பு நம் ஒவ்வொருவருக்கும் எண்ணிறைந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகின்றது. விடுதலையும், மகிழ்வும், அமைதியும் அவரது பிறப்பின் வழியாக நாம் பெற்றுக்கொள்ளும் செல்வங்களாகும். இதற்காகவே மீட்பர் இயேசு நமக்காகப் பிறந்துள்ளார். இந்த நற்செய்தி கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோருக்கு நிறைவான மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாக இருக்கும். இந்த அருள் உண்மைகளை நம் மனத்தில் ஆழமாகப் பதித்தவர்களாக, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழவும், ஆண்டவருக்குள் மகிழ்ந்திருந்து, அவரை எப்பொழுதும் புகழ்ந்தேத்தவும், நாம் அனைவரும் அமைதியின் தூதர்களாக வாழவும் பணிபுரியவும் வரம் கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 7-10

நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, `உன் கடவுள் அரசாளுகின்றார்' என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்; அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்; ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார். பிற இனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
திருப்பாடல் 98: 1. 2-3. 3-4. 5-6

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ய இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3உன உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார்
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-6

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். இவ்வாறு இறைமகன் வானதூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களை விட இவர் மேன்மை அடைந்தார். ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது �நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்'' என்றும், �நான் அவருக்குத் தந்தையாய் இருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார்'' என்றும் எப்போதாவது கூறியதுண்டா? மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, �கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே, வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18

தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை. கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ள வில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள். வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார். யோவான் அவரைக் குறித்து, �எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்'' என உரத்த குரலில் சான்று பகர்ந்தார். இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வியத்தகு ஆலோசகரும், வலிமைமிகு இறைவனுமாகிய தந்தையே!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்கும் ஞானத்தையும், வலிமையையும் அளித்து இறைப்பற்றின்மையையும், உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக், கட்டுப்பாட்டுடனும், நேர்மையுடனும், இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ அவர்களுக்கு தேவையான அருள் வரங்களை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வியத்தகு செயல்களால் எம்மை வழிநடாத்தும் தந்தையே!

உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள், இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழவும், அமைதியின் தூதர்களாக வாழவும், செயற்படவும் தேவையான ஞானத்தை அளித்துக் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்களை காத்து பராமரித்து வரும் அன்பு தெய்வமே இறைவா!

உலக நாடுகளில் அனைத்திலும் உண்மைக்காகவும், நீதிக்காகவும், விடுதலைக்காகவும், உரிமை வாழ்வுக்காகவும், அன்புக்காகவும் தாகித்து நிற்கும் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, அவர்களின் குறைகளைப் போக்கி நிறைவு செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அரும்பெரும் செயல்கள்; புரியும் வல்லவராம் தந்தையே இறைவா!

நீர் எமக்கு கொடுத்துள்ள எல்லா வளங்களுக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றோம். இம் மகிழ்வின் காலத்தில் அவற்றை நாம் விரயமாக்காது, தேவையற்ற, ஆடம்பரப் பொருட்களுக்காகச் செலவிடாது பெறுப்புணர்வோடு அவைகளைப் பயன்படுத்துவதற்கும், ஏழைகளோடு அவற்றைப் பகிர்ந்து வாழ்வதற்கும் வேன்டிய நல்லுள்ளத்தை எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம்மைத் தேடிவந்த அன்பே எம் இறைவா,

தொற்றுநோயின் வீரியம் குறைந்து மக்கள் விரைவாக நலம் பெற்று மகிழ்வுடன் கிறிஸ்து பிறப்புக் காலத்தை மகிழ்வுடன் கொண்டாடத் தேவையான எல்லா அருள்வளங்களைத் தந்து, இறைமக்கள் அனைவரும் உம் இல்லத்தில் தங்கி இறைஆசீர் நிறைவாய் பெற்றுச் செல்ல அருள்மழைப் பொழியத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே!

இன்று இத்திருப்பலியில் பங்குகொள்ளமுடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர்மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்களை உம் அன்பின் சிறகுகளில் காத்து வரும் அன்பு தந்தையே இறைவா!

தொற்று நோயினால் மரித்த இறைப்பணியாளர்கள் அனைவரையும் உம் பாதம் சமர்ப்பிக்கிறோம். நோயில் போராடும் அனைவரையும் நலமாக்கி உம் பணிசிறக்க அருள் புரியும். யாரும் நினையாத உத்தரிக்கும் தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காக மன்றாடுகிறோம். அவர்களை விரைவில் உமது இல்லத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று அன்புடன் உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்'' (யோவான் 1:14)

கடவுள் மனிதரிடமிருந்து வேறுபட்டவர் என்றும் மனிதரை விட்டு வெகு தொலையில் வாழ்பவர் என்றும் சிலர் உருவகிப்பதுண்டு. கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் கடவுள் மனிதரை விட்டு அகன்று நிற்பவர் அல்ல. மனிதரைப் படைத்தவர் கடவுள் என்பதால் அவர் நம்மோடு நெருங்கிய விதத்தில் இணைந்துள்ளார். ஆனால், கடவுள் அதைவிடவும் மேலாகத் தம்மை மனிதரோடு ஒன்றித்திட விரும்பினார். கடவுளே மனிதராக மாறிட விழைந்தார். இதை நாம் ஒரு மறைபொருள் என அழைக்கிறோம். இதன் முழுப் பொருளும் நமக்கு ஒருநாளும் தெளிவாகாது என்றாலும் கடவுள் மனிதராக மாறிய உண்மையை விவிலியம் தெளிவாக எடுத்துரைக்கிறது. குறிப்பாக யோவான் நற்செய்தி இதை உணர்த்துகிறது. கடவுளோடு எக்காலத்திலும் இணைந்திருந்த வாக்கு காலம் நிறைவேறியபோது மனிதராக மாறினார் என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் செய்தி. நம்மைத் தேடிவந்த கடவுளை நாம் அடையாளம் காண வேண்டும். மனிதர் ஆன வாக்கு ''நம்மிடையே குடிகொண்டார்'' என்பதால் அவருடைய உடனிருப்பு ஒரு தொடர் நிகழ்வாகிறது.

கடவுள் நம்மிடையே குடிகொண்டிருக்கின்ற உண்மையிலிருந்து சில முக்கிய விளைவுகள் பிறக்கின்றன. கடவுளை விட்டு மனிதர் அகன்றிருப்பதில்லை என்பதால் அந்த உடனிருப்பை நாம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்திட வேண்டும். அந்த உணர்வோடு நம் செயலும் ஒருங்கிணைந்து சென்றால் கடவுளின் விருப்பம் நமது விருப்பமாக மாறும். அப்போது நமது செயலும் விருப்பும் ஒன்றாக இணைந்த விதத்தில் நம் வாழ்வும் பொருள்பொதிந்ததாக உருப்பெறும். மனிதரான கடவுள் தம்மை ஒவ்வொரு மனிதரோடும் இணைத்துக்கொண்ட உண்மை நம்மை வழிநடத்த வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் உடனிருப்பை எங்கள் உள்ளத்தில் உணர்ந்திட அருள்தாரும்.