யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2020-12-24

கிறிஸ்து பிறப்பு இரவுத் திருப்பலி

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 2-4,6-7,திருப்பாடல் 96: 1-2. 2-3. 11-12. 13,திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 11-14,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-14 )




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

“உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!”

அன்பார்ந்தவர்களே, கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்வோடு வரவேற்கிறோம். ரோமப் பேரரசை அகுஸ்து சீசர் ஆட்சி செய்த காலத்தில், கன்னி மரியாவின் மகனாக ஆண்டவர் இயேசு பிறந்த வரலாற்று நிகழ்வை இன்று நாம் கொண்டாடுகிறோம். விண்ணுலகும் மண்ணுலகும் களிகூரட்டும். தாவீதின் ஊரில் இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். சாவின் நிழல் சூழ்ந்த மனித குலத்தின் மேல் சுடரொளியாக ஆண்டவர் உதித்துள்ளார். விண்ணக உணவாகிய இயேசு, இதோ தீவனத் தொட்டியில் துணிகளில் பொதிந்து கிடத்தப்பட்டுள்ளார். இறைமகன் வழியாக மனிதர் அனைவருக்கும் கடவுளின் அருள் வெளிப்பட்ட மாபெரும் தருணத்தை மனதில் இருத்தி அக்களிக்க அழைக்கப்படுகிறோம். நமது மீட்புக்காக விண்ணகத்தில் இருந்து மண்ணகம் இறங்கிய ஆண்டவர் இயேசு வழியாக நிலைவாழ்வின் பேரின்பத்தைப் பெற்றுக்கொள்ள வரம் கேட்டு, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

ஓர் ஆண் மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 2-4,6-7

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர். ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ `வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்' என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலைபெயராது உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.
திருப்பாடல் 96: 1-2. 2-3. 11-12. 13

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; 2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். பல்லவி

2 அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். 3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். 12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். பல்லவி

13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். பல்லவி

இரண்டாம் வாசகம்

மனிதர் அனைவருக்கும் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது
திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 11-14

மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்து, கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப் பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் நமக்காகப் பிறந்திருக்கிறார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-14

அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான யோசேப்பும் தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. மரியா தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், �அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்'' என்றார். உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!'' என்று கடவுளைப் புகழ்ந்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வியத்தகு ஆலோசகரும், வலிமைமிகு இறைவனுமாகிய தந்தையே!

எம் திருச்சபையை வழிநடத்திக் கொண்டிருக்கும் திருந்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் திருத்தொண்டர்கள் அனைவரையும் நிறைவாக ஆசிர்வதித்து, உம் அன்பு மகனின் அருள்பணியை செவ்வனே செய்ய தேவையான உடல் உள்ள சுகத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வியத்தகு செயல்களால் எம்மை வழிநடாத்தும் தந்தையே!

உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள், இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழவும், அமைதியின் தூதர்களாக வாழவும், செயற்படவும் தேவையான ஞானத்தை அளித்துக் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அமைதியின் அரசரே இறைவா,

உம் திருமகன் இயேசு பிறந்த வேளையில் வானதூதர்களால் அறிவிக்கப்பட்ட அமைதியை, மக்கள் அனைவரும் கண்டுணரும் வகையில் உழைக்கும் மனத்தை, உலக நாடுகளின் தலைவர்களுக்கு வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

அரும்பெரும் செயல்கள்; புரியும் வல்லவராம் தந்தையே இறைவா!

உம் திருமகனின் பிறப்பைக் கொண்டாடும் ஒவ்வொருவரும், உறவிலும் நட்பிலும் வளர்ந்து உள்ளத்தில் மகிழ்ச்சியைக் கண்டடையத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

எம்மைத் தேடிவந்த அன்பே எம் இறைவா,

தொற்றுநோயின் வீரியம் குறைந்து மக்கள் விரைவாக நலம் பெற்று மகிழ்வுடன் கிறிஸ்து பிறப்புக் காலத்தை மகிழ்வுடன் கொண்டாடத் தேவையான எல்லா அருள்வளங்களைத் தந்து, இறைமக்கள் அனைவரும் உம் இல்லத்தில் தங்கி இறைஆசீர் நிறைவாய் பெற்றுச் செல்ல அருள்மழைப் பொழியத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே!

இன்று இத்திருப்பலியில் பங்குகொள்ளமுடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர்மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்களை உம் அன்பின் சிறகுகளில் காத்து வரும் அன்பு தந்தையே இறைவா!

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு காரணங்களால் துன்பத்தின் இருளில் சிக்கியுள்ள மக்கள் அனைவரும், உம் திருமகன் கொணர்ந்த மீட்பின் ஒளியைக் கண்டடைய உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்...செக்கரியா எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, 'இக்குழந்தையின் பெயர் யோவான்' என்று எழுதினார்'' (லூக்கா 1:57,63)

செக்கரியா, எலிசபெத்து என்னும் தம்பதியர் ''வயது முதிர்ந்தவர்கள்'' (லூக் 1:18). ஆனால் அவர்களுக்கு மகப் பேறு இல்லை. இருவருமே குரு குல வரிசையில் வந்தவர்கள். செக்கரியா திருக்கோவிலில் குருத்துவப் பணி ஆற்றி, தூபம் காட்டுகிற வேளையில் அவருக்குக் கடவுளிடமிருந்து ஒரு செய்தி வருகிறது. வயது முதிர்ந்த அத்தம்பதியருக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்பதே அச்செய்தி. அதை கபிரியேல் வானதூதர் செக்கரியாவுக்கு அறிவிக்கிறார். செக்கரியாவுக்கோ பெரும் அதிர்ச்சி. கடவுளிடமிருந்து வந்த செய்தியை அவரால் நம்ப முடியவில்லை. அப்போது வானதூதர் ''நான் கூறிய வார்த்தைகள் நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்'' (காண்க: லூக் 1:20) என்கிறார். பேறு காலம் வந்ததும் எலிசபெத்து ஓர் ஆண்மகவை ஈன்றெடுக்கிறார். இவ்வரலாறு விவிலியத்தில் வருகின்ற பிற அதிசயப் பிறப்பு வரலாறுகளை ஒத்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, வயதில் முதிர்ந்த ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் ஈசாக்கு பிறந்ததைக் குறிப்பிடலாம் (தொநூ 18:1-15). அதுபோல, மனோவாகு என்பவருக்கும் அவருடைய மனைவிக்கும் சிம்சோன் பிறந்ததும் (1 நீத 13:2-25), எல்கானா என்பவருக்கும் அவருடைய மனைவி அன்னாவுக்கும் சாமுவேல் பிறந்ததும் (1 சாமு 1-23) முதிர்ந்த வயதில் நிகழ்ந்தவையே. கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்னும் உண்மையை இந்த நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. யோவான் பிறந்த செய்தி அவருடைய பெற்றோருக்கும் உற்றார் உறவினர்க்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொணர்ந்தது (லூக் 1:58).

பிறந்த குழந்தைக்குப் பெயரிடுவது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. யூத வழக்கப்படி, குழந்தைக்கு இடப்படுகின்ற பெயர் அக்குழந்தையின் குடும்பப் பின்னணியோடு அல்லது அக்குழந்தையின் சிறப்பியல்புகளோடு ஏதாவது ஒருவிதத்தில் தொடர்புடைய ஒரு கருத்தைத் தெரிவிப்பது உண்டு. குழந்தைக்கு அதன் பாட்டனார் பெயரை இடுவது வழக்கம் (காண்க: லூக் 1:61). மேலும், இடப்படுகின்ற பெயர் அப்பெயருடையவரின் ஆளுமையை வரையறுப்பதாகவும் கருதப்பட்டது. யோவான் என்னும் பெயர் ''ஆண்டவர் பெரிதும் இரக்கம் காட்டினார்'' எனப் பொருள்படும் (காண்க: லூக் 1:58). எனவேதான் இப்பெயரைத் தமிழில் ''அருளப்பன்'' என்று பெயர்த்தார்கள். இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் இரக்கத்தின் வெளிப்பாடு எனலாம். ''இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'' என நாம் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பின்போதும் வியந்து கூறலாம் (காண்க: லூக் 1:66). ஏனென்றால் ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் சாயலாகவே இவ்வுலகில் வருகிறது. அச்சாயல் நாள்தோறும் தெளிவாகத் துலங்கிட வேண்டும் என்றால் நாம் கடவுளிடம் துலங்குகின்ற அன்பு, இரக்கம் என்னும் பண்புகளை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். அப்போது நாமும் கடவுளின் அருள் பெற்றவர்களாக வாழ்வோம், பிறரும் அந்த அருளை அனுபவிக்க வழியாவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் அருள் பெருக்கால் எங்களை நிறைவுசெய்யும் நற்செயலுக்கு நன்றி!