யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 4வது வாரம் திங்கட்கிழமை
2020-12-21




முதல் வாசகம்

இதோ, மலைகள்மேல் தாவி என் அன்பர் வருகின்றார்.
இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 2: 8-14

தலைவி கூறியது: என் காதலர் குரல் கேட்கின்றது; இதோ, அவர் வந்துவிட்டார்; மலைகள்மேல் தாவி வருகின்றார்; குன்றுகளைத் தாண்டி வருகின்றார். என் காதலர் கலைமானுக்கு அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர். இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்; பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்; பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார். என் காதலர் என்னிடம் கூறுகின்றார்: “விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா. இதோ, கார்காலம் கடந்துவிட்டது. மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது. நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன; பாடிமகிழும் பருவம் வந்துற்றது; காட்டுப்புறா கூவும் குரலதுவோ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது. அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன; திராட்சை மலர்கள் மணம் தருகின்றன; விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.''பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு எனக்கு உன் முகத்தை; எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நீதிமான்களே, புதியதொரு பாடல் ஆண்டவர்க்குப் பாடுங்கள்.
திருப்பாடல் 33: 2-3. 11-12. 20-21

யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். 3 புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். பல்லவி

11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். 12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 21 நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இம்மானுவேலே, சட்டம் இயற்றும் எம் அரசே, இறைவனாம் எம் ஆண்டவரே, எம்மை மீட்க எழுந்தருளும்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45

அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டில் உள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது எலிசபெத்து உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப்பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார்'' (லூக்கா 1:28)

அன்னை மரியாவை இயேசுவின் தாய் எனப் போற்றுகின்ற திருச்சபை அதே அன்னையைக் ''கடவுளின் தாய்'' எனவும் வாழ்த்திப் புகழ்கின்றது. கடவுளுக்கு நாம் அளிக்கின்ற ஆராதனையை நாம் மரியாவுக்கு வழங்குவதில்லை. ஏனென்றால் மரியா கடவுளின் படைப்பு. கடவுளுக்கு நிகரான நிலை அவருக்குக் கிடையாது. ஆனால் கடவுளின் திருமகனாகிய இயேசுவை அந்த அன்னை இந்த உலகிற்குப் பெற்றுத் தந்தார். எனவே, அவருக்குச் சிறப்பு மரியாதை செலுத்துவது பொருத்தமே என திருச்சபை கற்பிக்கிறது. வானதூதர் கபிரியேல் மரியாவுக்குத் தோன்றுகிறார். ''அருள்மிகப் பெற்றவரே'' என்று கூறி அவரை வாழ்த்துகிறார் (காண்க: லூக் 1:28). பழைய கத்தோலிக்க மொழிபெயர்ப்பில் ''அருள்நிறைந்தவளே, வாழ்க'' என்று இலத்தீன் பாடத்தின் நேர் தரவாக இருந்தது. புராட்டஸ்டாண்டு சபையினரின் பெயர்ப்பில் ''கிருபை பெற்றவளே, வாழ்க'' என்றுள்ளது. உண்மையிலேயே கடவுள் மரியாவுக்கு ஒரு சிறப்பான மாண்பை அளித்தார் என்பதில் ஐயமில்லை; அதற்கான விவிலிய ஆதாரமும் உள்ளது. ஆனால் கத்தோலிக்க திருச்சபை மரியாவைக் கடவுளின் நிலைக்கு உயர்த்தி வழிபடுகிறது என்று சிலர் குற்றம் காண்கிறார்கள். இவ்வாறு குற்றம் காண்பது சரியல்ல என்பதைச் சுட்டிக்காட்டியாக வேண்டும். அண்மையில் ஒரு வலைப்பதிவில் கண்டது இது: கேள்வி: ''மரியாளை வணங்கக் கூடாது (றழசளாippiபெ ஆயசல ளை ளin) என உரோமன் கத்தோலிக்கர்களுக்கு விளக்குவது எப்படி?'' இதற்கு தரப்படுகின்ற பதில்: ''இயேசு பூமிக்கு வர மரியாள் ஒரு பாத்திரமாக இருந்தாள். அவள் ஒரு பாக்கியமான பெண்தான். அதில் சந்தேகமில்லை. சோறு சமைக்க வேண்டுமென்றால் ஒரு பாத்திரம் (உழழமநச) தேவைப்படுகின்றது. சமைத்தப்பின்பு சோறுதான் சாப்பிட வேண்டும். பாத்திரத்தை (உழழமநச) அல்ல. மரியாள் பாத்திரம். இயேசு அந்த உணவு. மரியாளை வழிபடுவது பாத்திரத்தைக் கடித்துச் சாப்பிடுவது போன்று இருக்கிறது''.

மேலே தரப்பட்ட மேற்கோளிலிருந்து நாம் அறிவது என்ன? சிலர் கத்தோலிக்கர் பற்றி உண்மையிலேயே தவறான கருத்துக் கொண்டிருப்பது தெளிவாகவே தெரிகிறது. கத்தோலிக்கர் மரியாவைக் கடவுளாகக் கருதுவதும் இல்லை, நம் மீட்பரும் இடைநிலையாளருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கு நிகராக மரியாவைக் கொள்வதும் இல்லை. இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1965) இந்த உண்மையை அழகாக எடுத்துரைக்கிறது. திருச்சபை வழக்கில் கடவுளுக்கு நாம் அளிக்கின்ற வழிபாடு ''ஆராதனை'' (யனழசயவழைn) எனவும் மரியாவுக்கு நாம் அளிக்கின்ற மரியாதை ''வணக்கம்'' (எநநெசயவழைn) எனவும் கலைச்சொற்களால் குறிக்கப்படுகின்றன. இதோ வத்திக்கான் சங்கம் தரும் போதனை: ''திருச்சபை மரியாவைத் தனிப்பட்டதொரு வணக்கத்தால் (எநநெசயவழைn) தக்க காரணத்துடன் பெருமைப்படுத்துகிறது. ஏனெனில்...இவர் கடவுளின் தூய்மைமிகு தாய் ஆவார். தூய கன்னியை தொடக்க முதலே, நம்பிக்கை கொண்டோர் 'கடவுளின் தாய்' என்றழைத்து வணங்கினர்... திருச்சபையில் என்றும் இருந்துள்ள இவ்வணக்கம் உண்மையிலேயே தனிப்பட்டது; மனிதரான வாக்குக்கும் தந்தைக்கும் தூய ஆவியார்க்கும் நம் அளிக்கும் ஆராதனையிலிருந்து (யனழசயவழைn) உள்ளியல்பிலேயே இது வேறுபட்டது; இந்த ஆராதனையை (யனழசயவழைn) இவ்வணக்கம் (எநநெசயவழைn) மிகச் சிறந்தவிதமாய் ஊக்குவிக்கும் எனலாம்'' (திருச்சபை, எண் 66).

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் தாயாக நீர் தேர்ந்தெடுத்த அன்னை மரியாவிடம் துலங்கிய ஆழ்ந்த நம்பிக்கை எங்கள் வாழ்விலும் விளங்கிட அருள்தாரும்.