யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
வியாழக்கிழமை 2வது வாரம் வியாழக்கிழமை
2020-12-10

புனித மதலாம் தமசுஸ்




முதல் வாசகம்

இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 41: 13-20

நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; உன் வலக்கையைப் பற்றிப்பிடித்து, �அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்'' என்று உன்னிடம் சொல்பவரும் நானே. �யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாய் இருப்பேன்,'' என்கிறார் ஆண்டவர். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர். இதோ, நான் உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன். நீ மலைகளைப் போரடித்து நொறுக்குவாய்; குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய். அவற்றைத் தூற்றுவாய், காற்று அவற்றை வாரிக்கொண்டுபோகும்; புயல் அவற்றைச் சிதறடிக்கும்; ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்; இஸ்ரயேலின் தூயவரில் மேன்மை அடைவாய். ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்; அது கிடைக்கவில்லை. அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர்; ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்; இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன். பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன்; பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்; பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும் வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன். பாலைநிலத்தில் கேதுரு மரங்களை வளரச் செய்வேன்; சித்திம் மரம், மிருதுச் செடி, ஒலிவ மரம் ஆகியன தோன்றச் செய்வேன்; பாழ்நிலத்தில் தேவதாரு மரங்களையும், புன்னை மரங்களையும், ஊசியிலை மரங்களையும் வைப்பேன். அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால் இதைச் செய்தார் என்றும், இஸ்ரயேலின் தூயவர் அதைப் படைத்தார் என்றும் மக்கள் கண்டு உணர்ந்துகொள்வர்; ஒருங்கே சிந்தித்துப் புரிந்துகொள்வர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.
திருப்பாடல் 145: 1,9. 10-11. 12-13

1 என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13ய உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

வானங்கள் பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும். மண்ணுலகம் வாய் திறந்து விடுதலைக் கனி வழங்கட்டும். அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-15

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: �மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன. உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'திருமுழுக்கு யோவான் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்' என்றார்'' (மத்தேயு 11:12)

கடவுள் ''வல்லமை மிக்கவர்'' என்னும் கருத்து பழைய ஏற்பாட்டில் பரவலாகக் காணக்கிடக்கிறது. தாம் தெரிந்துகொண்ட மக்களைப் பாதுகாப்பதற்காகக் கடவுள் எதிரிகளை முறியடிக்கிறார், நாடுகளை வீழ்த்துகிறார், அநீத அமைப்புகளை உடைத்தெறிகிறார். இவ்வாறு வல்லமையோடு செயல்படுகின்ற கடவுள் வன்முறையை ஆதரிப்பதுபோலத் தோன்றும். புதிய ஏற்பாட்டில் நாம் காண்கின்ற கடவுள் அன்புமிக்க தந்தையாக இருக்கிறார். இயேசு வழியாக அவர் தம் அன்பு இதயத்தை நமக்குத் திறந்துள்ளார். நமக்கு எதிராகப் பிறர் தீங்கிழைத்தாலும் நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கலாகாது என இயேசு நமக்குக் கற்பிக்கிறார். எனவே, இயேசு வன்முறையை ஆதரிக்கவில்லை என்பது தெளிவு. அதே நேரத்தில் ''விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகிறது'' என்றும் ''வன்முறையாகத் தாக்குகின்றவர்கள் விண்ணரசைக் கைப்பற்றுவர்'' (காண்க: மத் 11:12) என்றும் இயேசு கூறுவதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? இச்சொற்றொடருக்கு ஒரு மாற்று மொழி பெயர்ப்பை நாம் தமிழ் விவிலியத்தில் காணலாம். அடிக்குறிப்பாகத் தரப்படுகின்ற அந்த மொழிபெயர்ப்பு இதோ: ''திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரை விண்ணரசு வல்லமையாகச் செயலாற்றி வருகிறது. ஆர்வமுள்ளோர் அதைக் கைப்பற்றுகின்றனர்''.

இயேசுவின் காலத்தில் ''தீவிரவாதிகள்'' என்றொரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் உரோமை ஆட்சியாளர்களைத் தம் நாட்டிலிருந்து வெளியேற்றி, நாட்டை விடுதலை செய்வதற்கு ஒரே வழி வன்முறையே என நம்பினர். அவர்களைப் பற்றிய சில குறிப்புகள் புதிய ஏற்பாட்டில் உள்ளன. எடுத்துக்காட்டாகக் காண்க: திப 5:35-37; லூக் 13:1. கலகத்தில் ஈடுபட்டுக் கொலைசெய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்த பரபா என்பவன் ஒரு தீவிரவாதியாக இருந்திருக்கலாம் (காண்க: லூக் 23:18-19). தீவிரவாதிகள் வன்முறையால் ஆட்சியை மாற்ற எண்ணினார்கள், வன்முறையைக் கையாளுகின்ற மெசியா கடவுளாட்சியை நிறுவுவார் எனவும் நம்பினார்கள். அவர்களுடைய முயற்சி வெற்றிபெறவில்லை. ஆனால் இயேசு வேறொரு ஆட்சியை அறிவித்தார். அதைக் கடவுளாட்சி (''விண்ணரசு'') என நற்செய்தியாளர்கள் குறிக்கின்றனர். அந்த ஆட்சி வன்முறையில் பிறக்கின்ற ஆட்சியல்ல. மாறாக, கடவுள் நம்மீது காட்டுகின்ற அன்பும் இரக்கமும் நீதியும் உண்மையும் அந்த ஆட்சியின் அடித்தளங்களாக அமையும். எனவே, ஒருவிதத்தில் கடவுளாட்சி வல்லமை மிக்கதுதான். அதன் வல்லமை வன்முறையிலிருந்து பிறப்பதல்ல, மாறாக அன்பிலிருந்து ஊற்றெடுப்பது. எங்கே அன்பும் நட்பும் உளதோ அங்கே கடவுளாட்சி தொடங்கிவிட்டது. அதன் நிறைவை எதிர்பார்த்து நாம் காத்திருக்கின்றோம். அந்த நம்பிக்கை வீண்போகாது என இயேசு நமக்கு உறுதியளிக்கிறார்.

மன்றாட்டு:

இறைவா, உம் ஆட்சியில் பங்கேற்க நாங்கள் அன்பு என்னும் ''வல்லமையோடு'' செயலாற்ற அருள்தாரும்.