யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 1வது வாரம் செவ்வாய்க்கிழமை
2020-12-01




முதல் வாசகம்

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 11: 1-10

ஆண்டவருக்குரிய நாளில் ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர் விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனி தரும். ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத் திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு - இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார். கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்; நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்; வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்; உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். நேர்மை அவருக்கு அரைக்கச்சை; உண்மை அவருக்கு இடைக்கச்சை. அந்நாளில், ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்; அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்; பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்; பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை; கேடு விளைவிப்பார் யாருமில்லை; ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும். அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிற இனத்தார் தேடி வருவார்கள்; அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்ததாக இருக்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருடைய காலத்தில் நீதியும் சமாதானமும் தழைத்தோங்கும்.
திருப்பாடல் 72: 1-2. 7-8. 12-13. 17

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி 7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லைவரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி 12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி 17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இதோ! நம் ஆண்டவர் வல்லமையுடன் வருவார்; தம் ஊழியரின் கண்களுக்கு ஒளி தருவார்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 21-24

அக்காலத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, �தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்'' என்றார். �என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்'' என்று கூறினார். பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, �நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர். ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர்... எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது'' (மாற்கு 13:35)

திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் ''விழிப்பாயிருங்கள்'' என்னும் செய்தி அறிவிக்கப்படுகிறது. அதுபோலவே, திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கத்திலும் நாம் விழிப்பாயிருக்க அழைக்கப்படுகிறோம். ''விழிப்பு'' என்றால் கண்துஞ்சாமல் இருப்பது என்பது முதல் பொருள். அதே நேரத்தில் ஒவ்வொருவரும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை ஆற்றுவதில் ஈடுபட்டிருப்பதும் ''விழிப்பாயிருத்தலோடு'' நெருங்கிப் பிணைந்ததாகும். பயணம் செல்லவிருக்கின்ற வீட்டுத் தலைவர் தம் பணியாளர்களிடம் வீட்டுப் பொறுப்பை ஒப்படைக்கின்றார். அவர் எந்த நேரத்திலும் வீடு திரும்பக் கூடும். அவர் வருகின்ற வேளையில் பணியாளர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நன்முறையில் ஆற்றுகின்றனரா எனப் பார்ப்பார். விழிப்பாயிருக்கின்ற பணியாளரே பொறுப்பானவராகவும் செயல்பட்டுத் தம் தலைவரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்.

வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் விழிப்புத் தேவை. விழிப்பு என்பது வரவிருக்கும் ஆபத்துக்களிலிருந்து தப்பிப்பதற்கு உதவும்; வருகின்ற சவால்களைத் துணிச்சலோடு எதிர்கொள்ளப் பயன்படும்; தடைகளைக் கண்டு தளர்ந்து போகாமல் அவற்றைத் தாண்டிச் செல்கின்ற வலிமையை நமக்குத் தரும். எனவே, விழித்திருப்போர் பொறுப்பான விதத்தில் செயல்படுகின்ற மனிதராக விளங்குவர். இயேசு நம்மிடம் எதிர்பார்க்கின்ற விழிப்பு அவரிடமிருந்து நாம் ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட பொறுப்பை முழுமனதோடு ஏற்று நடைமுறைப்படுத்துவதில் நாம் கண்ணும் கருத்துமாய் இருக்க நமக்கு உந்துதல் தர வேண்டும். விழித்திருப்போர் தூக்க மயக்கத்தில் இருக்கமாட்டார்கள் (காண்க: மாற்கு 13:36). அவர்களுடைய இதயம் மழுங்கிய நிலையில் இருக்காது. மாறாக, விழித்திருப்போர் தம் இதயத்தைக் கடவுளுக்குத் திறந்து வைப்பார்கள்; அவர்களது இதயத்தில் கடவுள் நுழைந்திட யாதொரு தடையும் இருக்காது. எந்த நேரத்தில் கடவுள் அவர்களைத் தேடி வந்தாலும் அவர்கள் தங்கள் இதயக் கதவுகளைத் திறந்துவிட உடனடியாக முன்வருவார்கள். எனவே, இயேசு நம்மைப் பார்த்து, ''நான் உங்களுக்குச் சொல்வதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்'' என அழைப்பு விடுக்கிறார். அந்த அழைப்பு நமக்கு விடுக்கப்படுகின்ற ஒரு சவால் கூட.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் விழிப்பாயிருந்து உம் வரவை எதிர்கொள்ள அருள்தாரும்.