யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 33வது வாரம் சனிக்கிழமை
2020-11-21

தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் நினைவு




முதல் வாசகம்

மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்.
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 2: 10-13

மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன் என்கிறார் ஆண்டவர். அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்; நீங்களும், படைகளின் ஆண்டவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை அறிந்து கொள்வீர்கள். ஆண்டவர் யூதாவைப் புனித நாட்டில் தமக்குரிய பங்காக உரிமைச் சொத்தாக்கிக் கொள்வார். எருசலேமை மீண்டும் தேர்ந்துகொள்வார். மானிடரே, நீங்கள் அனைவரும் ஆண்டவர் திருமுன் அமைதியாய் இருங்கள்; ஏனெனில் அவர்தம் புனித இடத்திலிருந்து எழுந்தருளினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: என்றும் வாழும் தந்தையின் மகனைச் சுமந்த மரியே, நீர் பேறுபெற்றவர்.
லூக் 1: 47. 48-49. 50-51. 52-53. 54-55

47 ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. பல்லவி

48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். 49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். பல்லவி

50-51 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். பல்லவி

52-53 வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். பல்லவி

54-55 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

தம் சீடர் பக்கம் கையை நீட்டி, என் தாயும் சகோதரர்களும் இவர்களே என்றார்.

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 46-50

அக்காலத்தில் மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, ``அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கின்றார்கள்'' என்றார். அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, ``என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?'' என்று கேட்டார். பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, ``என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்... அதைப் பார்த்து, '...உன் பகைவர்கள் உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரை மட்டமாக்குவார்கள்' என்றார்'' (லூக்கா 19:41,43-44)

யூத மக்களின் வரலாற்றில் எருசலேம் நகரமும் அங்கிருந்த கோவிலும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஒரு நாள் இயேசு எருசலேம் நகரை நெருங்கிவந்து, அது விரைவில் அழியப்போவதை முன்னறிவித்தார். பளிங்குக் கற்களும் பொன்னும் வெள்ளியும் அழகு செய்த அந்நகரம் தரைமட்டமாக்கப்படும் என்று இயேசு கூறிய சொற்கள் கி.பி. 70இல் நிறைவேறின. உரோமைப் படையினர் எருசலேமை அழித்து அங்கிருந்த மக்கள் பலரையும் கொன்றுகுவித்தார்கள். இந்த வரலாற்று நிகழ்ச்சியின் அடிப்படையில் சிலர் யூத மக்களுக்கு எதிரான ஒரு போக்கினைத் தூண்டிவிட்டது உண்மைதான். இருபதாம் நூற்றாண்டில் 6 மில்லியன் யூத மக்களை அடோல்ஃப் ஹிட்லர் கொன்று குவித்ததும் யூதர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பெரும் கொடுமை ஆகும். ஆனால் இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1965) யூதர்-வெறுப்பு மனநிலை தவறு என்று அறிக்கையிடுகிறது. யூதர்கள்தான் இயேசுவைக் கொன்றவர்கள் என்று குற்றம் சாட்டுவதும் சரியல்ல; இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்களில் சிலர் இயேசுவை ஏற்கவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி இக்காலத்தில் வாழ்கின்ற யூதர்களை வெறுப்பதும் சரியல்ல. அண்மைக் காலத்தில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் யூத மக்களோடு நாம் நல்லுறவை வளர்க்கவேண்டும் என்பதை மிகவே வலியுறுத்தினார். கிறிஸ்தவர்கள் பலர் யூத வெறுப்பு மனநிலையோடு செயல்பட்டதற்காக அவர் 1994இல் வருத்தம் தெரிவித்தார். மேலும், அவர் 2000ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் நாள் எருசலேம் சென்று, அழிந்துபட்ட கோவிலின் மேற்குச் சுவர் அருகே நின்று யூதர்களுக்காக இறைவேண்டல் செய்தார். வரலாற்றில் யூதர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளை நினைத்து கத்தோலிக்க திருச்சபை வருத்தம் தெரிவிக்கிறது என அறிவித்தார். யூத சமயத்தோடும் யூத மக்களோடும் நாம் உரையாடலில் ஈடுபட வேண்டும் என்னும் கருத்தை இன்றைய திருச்சபை மிகவும் வலியுறுத்துகிறது.

இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் யூதர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளைத் திருச்சபை போதிய அளவு கண்டித்துப் பேசவில்லை என்று பல யூத அமைப்புக்கள் குறைகூறுகின்றன. அப்போது திருச்சபைத் தலைவராக இருந்த திருத்தந்தை 12ஆம் பயஸ் (பத்திநாதர்) போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் குற்றச்சாட்டு. அக்கால நிகழ்ச்சிகள் பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களைத் திருச்சபைத் தலைமைப் பீடம் முற்றிலுமாக வெளியிட வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கை. நாசி ஆட்சியினரின் கொடுமையிலிருந்து தப்பிக்கும் வண்ணம் பல யூத குழந்தைகளுக்குக் கிறிஸ்தவ சபை வழக்கப்படி திருமுழுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்ட குழந்தைகளை மீண்டும் யூத குடும்பத்தினரோடு சேர்த்துவைக்கவில்லை என்பது இன்னொரு குற்றச் சாட்டு. இவ்வாறு பல குறைகள் சுட்டிக்காட்டப்பட்டாலும் இன்றைய திருச்சபை யூத சமயத்தோடும் யூத மக்களோடும் தனக்குள்ள உறவுகளைக் கோடிட்டுக் காட்டுகிறது. இயேசு யூத குடும்பத்தில் பிறந்து, யூதராக வளர்ந்து இறந்தார் என்னும் உண்மையை நாம் மறக்கலாகாது. அவருடைய வாழ்வுக்கு ஊற்றாக இருந்தது யூத சமய ஆன்மிகம்தான். எனவே, கடவுளின் திட்டத்தில் யூத சமயம் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது என்பதை எல்லாக் கிறிஸ்தவ மக்களும் உணர்ந்து, யூத சமயத்தாரோடு உரையாடலில் ஈடுபட்டு, நல்லுறவு கொண்டு வாழ்ந்திட திருச்சபை நம்மை அழைக்கிறது.

மன்றாட்டு:

இறைவா, உம் அருள் பெருக்கின் பெருமையை நாங்கள் வியந்து பாடிட அருள்தாரும்.