யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 33வது வாரம் வியாழக்கிழமை
2020-11-19




முதல் வாசகம்

மக்களைக் கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டில் இருந்து வாசகம் 5: 1-10

சகோதரர் சகோதரிகளே, அரியணையில் வீற்றிருந்தவரது வலக் கையில் ஒரு சுருளேட்டைக் கண்டேன். அதில் உள்ளும் புறமும் எழுதியிருந்தது; அது ஏழு முத்திரை பொறிக்கப்பெற்று மூடப்பட்டிருந்தது. ``முத்திரைகளை உடைத்து, ஏட்டைப் பிரிக்கத் தகுதி பெற்றவர் யார்?'' என்று வலிமைமிக்க வானதூதர் ஒருவர் உரத்த குரலில் முழங்கக் கண்டேன். நூலைத் திறந்து படிக்க விண்ணுலகிலோ மண்ணுலகிலோ கீழுலகிலோ இருந்த எவராலும் இயலவில்லை. சுருளேட்டைப் பிரித்துப் படிக்கத் தகுதி பெற்றவர் எவரையும் காணவில்லையே என்று நான் தேம்பி அழுதேன். அப்பொழுது மூப்பருள் ஒருவர் என்னிடம், ``அழாதே, யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் குலக்கொழுந்துமானவர் வெற்றி பெற்றுவிட்டார்; அவர் அந்த ஏழு முத்திரைகளையும் உடைத்து ஏட்டைப் பிரித்துவிடுவார்'' என்று கூறினார். அந்த நான்கு உயிர்களும் மூப்பர்களும் புடை சூழ, அரியணை நடுவில் ஆட்டுக்குட்டி ஒன்று நிற்கக் கண்டேன். கொல்லப்பட்டதுபோல் அது காணப்பட்டது. அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. அக்கண்கள் மண்ணுலகெங்கும் அனுப்பப்பெற்ற கடவுளின் ஏழு ஆவிகளே. ஆட்டுக்குட்டி முன்சென்று, அரியணையில் வீற்றிருந்தவரின் வலக் கையிலிருந்து அந்த ஏட்டை எடுத்தது. அப்பொழுது அந்த நான்கு உயிர்களும் இருபத்து நான்கு மூப்பர்களும் ஆட்டுக்குட்டிமுன் வீழ்ந்தார்கள்; அவர்கள் ஒவ்வொருவரும் யாழும், சாம்பிராணி நிறைந்த பொற்கிண்ணங்களும் வைத்திருந்தார்கள். இறைமக்களின் வேண்டுதல்களே அக்கிண்ணங்கள். அவர்கள் புதியதொரு பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள்: ``ஏட்டை எடுக்கவும் அதன் முத்திரைகளை உடைத்துப் பிரிக்கவும் தகுதி பெற்றவர் நீரே. நீர் கொல்லப்பட்டீர்; உமது இரத்தத்தால் குலம், மொழி, நாடு, மக்களினம் ஆகிய அனைத்தினின்றும் மக்களைக் கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர். ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் அவர்களை எங்கள் கடவுளுக்காக ஏற்படுத்தினீர். அவர்கள் மண்ணுலகின்மீது ஆட்சி செலுத்துவார்கள்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆட்சியுரிமை பெற்ற குருக்களாய் கடவுளுக்காக ஏற்படுத்தினீர்.
திருப்பாடல்149: 1-2. 3-4. 5-6,9

ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வாராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவாராக! 6ய அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும். 9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 41-44

அக்காலத்தில் இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் கோவிலைப் பார்த்து அழுதார். ``இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக் கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது. ஒரு காலம் வரும். அப்போது உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி, உன்னை முற்றுகையிடுவார்கள்; உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரைமட்டமாக்குவார்கள்; மேலும் உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்... அதைப் பார்த்து, '...உன் பகைவர்கள் உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரை மட்டமாக்குவார்கள்' என்றார்'' (லூக்கா 19:41,43-44)

யூத மக்களின் வரலாற்றில் எருசலேம் நகரமும் அங்கிருந்த கோவிலும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஒரு நாள் இயேசு எருசலேம் நகரை நெருங்கிவந்து, அது விரைவில் அழியப்போவதை முன்னறிவித்தார். பளிங்குக் கற்களும் பொன்னும் வெள்ளியும் அழகு செய்த அந்நகரம் தரைமட்டமாக்கப்படும் என்று இயேசு கூறிய சொற்கள் கி.பி. 70இல் நிறைவேறின. உரோமைப் படையினர் எருசலேமை அழித்து அங்கிருந்த மக்கள் பலரையும் கொன்றுகுவித்தார்கள். இந்த வரலாற்று நிகழ்ச்சியின் அடிப்படையில் சிலர் யூத மக்களுக்கு எதிரான ஒரு போக்கினைத் தூண்டிவிட்டது உண்மைதான். இருபதாம் நூற்றாண்டில் 6 மில்லியன் யூத மக்களை அடோல்ஃப் ஹிட்லர் கொன்று குவித்ததும் யூதர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பெரும் கொடுமை ஆகும். ஆனால் இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1965) யூதர்-வெறுப்பு மனநிலை தவறு என்று அறிக்கையிடுகிறது. யூதர்கள்தான் இயேசுவைக் கொன்றவர்கள் என்று குற்றம் சாட்டுவதும் சரியல்ல; இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்களில் சிலர் இயேசுவை ஏற்கவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி இக்காலத்தில் வாழ்கின்ற யூதர்களை வெறுப்பதும் சரியல்ல. அண்மைக் காலத்தில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் யூத மக்களோடு நாம் நல்லுறவை வளர்க்கவேண்டும் என்பதை மிகவே வலியுறுத்தினார். கிறிஸ்தவர்கள் பலர் யூத வெறுப்பு மனநிலையோடு செயல்பட்டதற்காக அவர் 1994இல் வருத்தம் தெரிவித்தார். மேலும், அவர் 2000ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் நாள் எருசலேம் சென்று, அழிந்துபட்ட கோவிலின் மேற்குச் சுவர் அருகே நின்று யூதர்களுக்காக இறைவேண்டல் செய்தார். வரலாற்றில் யூதர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளை நினைத்து கத்தோலிக்க திருச்சபை வருத்தம் தெரிவிக்கிறது என அறிவித்தார். யூத சமயத்தோடும் யூத மக்களோடும் நாம் உரையாடலில் ஈடுபட வேண்டும் என்னும் கருத்தை இன்றைய திருச்சபை மிகவும் வலியுறுத்துகிறது.

இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் யூதர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளைத் திருச்சபை போதிய அளவு கண்டித்துப் பேசவில்லை என்று பல யூத அமைப்புக்கள் குறைகூறுகின்றன. அப்போது திருச்சபைத் தலைவராக இருந்த திருத்தந்தை 12ஆம் பயஸ் (பத்திநாதர்) போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் குற்றச்சாட்டு. அக்கால நிகழ்ச்சிகள் பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களைத் திருச்சபைத் தலைமைப் பீடம் முற்றிலுமாக வெளியிட வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கை. நாசி ஆட்சியினரின் கொடுமையிலிருந்து தப்பிக்கும் வண்ணம் பல யூத குழந்தைகளுக்குக் கிறிஸ்தவ சபை வழக்கப்படி திருமுழுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்ட குழந்தைகளை மீண்டும் யூத குடும்பத்தினரோடு சேர்த்துவைக்கவில்லை என்பது இன்னொரு குற்றச் சாட்டு. இவ்வாறு பல குறைகள் சுட்டிக்காட்டப்பட்டாலும் இன்றைய திருச்சபை யூத சமயத்தோடும் யூத மக்களோடும் தனக்குள்ள உறவுகளைக் கோடிட்டுக் காட்டுகிறது. இயேசு யூத குடும்பத்தில் பிறந்து, யூதராக வளர்ந்து இறந்தார் என்னும் உண்மையை நாம் மறக்கலாகாது. அவருடைய வாழ்வுக்கு ஊற்றாக இருந்தது யூத சமய ஆன்மிகம்தான். எனவே, கடவுளின் திட்டத்தில் யூத சமயம் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது என்பதை எல்லாக் கிறிஸ்தவ மக்களும் உணர்ந்து, யூத சமயத்தாரோடு உரையாடலில் ஈடுபட்டு, நல்லுறவு கொண்டு வாழ்ந்திட திருச்சபை நம்மை அழைக்கிறது.

மன்றாட்டு:

இறைவா, உம் அருள் பெருக்கின் பெருமையை நாங்கள் வியந்து பாடிட அருள்தாரும்.