யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
பொதுக்காலம் 31வது வாரம் திங்கட்கிழமை
2020-11-02

இறந்த விசுவாசிகள் நினைவு நாள்




முதல் வாசகம்

பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவதுபோல் அவர் அவர்களைப் புடமிட்டார்
சாலமோனின் ஞானம் 3.1-9

1நீதி மான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. 2அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப்போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது. 3அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள். 4மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். 5சிறிதளவு அவர்கள் தண்டித்துத் திருத்தப்பட்டபின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்தபின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார். 6பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவதுபோல் அவர் அவர்களைப் புடமிட்டார்; எரிபலிபோல் அவர்களை ஏற்றுக்கொண்டார். 7கடவுள் அவர்களைச் சந்திக்கவரும்போது அவர்கள் ஒளி வீசுவார்கள்; அரிதாள் நடுவே தீப்பொறிபோலப் பரந்து சுடர்விடுவார்கள்; 8நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்; மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார். 9அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்; அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர்.* அருளும் இரக்கமும் அவர் தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும்.*

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

இருள் சூழ்ந்த பள்ளத் தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் தீமையானதெதெற்கும் அஞ்சேன்.
திருப்பாடல்கள்23:1-3, 4, 5, 6

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; -பல்லவி

4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி

இரண்டாம் வாசகம்

நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.
தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5;5-11

5அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. 6நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். 7நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். 8ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார். 9ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப்பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? 10நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! 11அது மட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவுகொண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்.

நற்செய்தி வாசகம்

புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்7;11-17

137தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன். 38ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன். 39“அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். 40மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்” என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நாமும் புனிதர்களே !

புனிதர்கள் மொத்தம் எத்தனை பேர் என்று உங்களுக்குத் தெரியுமா? நினைவிலிருந்து சில பெயர்களைச் சொல்லச் சொன்னால், இருபது பெயர்களுக்குப் பிறகு யோசிக்கத் தொடங்கி விடுவோம். புனிதர்களின் பிரார்த்தனையில் ஏறக்குறைய 50 புனிதர்களின் பெயர்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இணைய தளத்தில் நுழைந்து பார்த்தால், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புனிதர்களின் பெயர்களைப் பார்க்கலாம். இவர்களெல்லாம் திருச்சபையால் புனிதர்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவர்கள்தான். உண்மையில், இறைத் திருவுளத்தின்படி வாழ்ந்து, இன்று விண்ணி;ல் இறையின்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் என்னும் பார்வையில் பார்த்தால், இலட்சக்கணக்கான புனிதர்களை எண்ணலாம்.

இன்றைய நாளில் திருச்சபை அனைத்துப் புனிதர்களையும் நினைவுகூர்ந்து, இறைவனைப் போற்றுகிறது. நன்றி கூறுகிறது. பெயர் தெரிந்த, பெயர் தெரியாத அனைத்துப் புனிதர்களையும் இன்று எண்ணிப்பார்க்கிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். புனிதர்கள் என்பார் யார்? தங்களுடைய வாழ்வையும், பணியையும் இறைவனின் விருப்பத்துக்கேற்ப அமைத்துக்கொண்டவர்கள்தான் புனிதர்கள். இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் கேட்கும் மலைப்பொழிவைத் தம் வாழ்வாக்கிய அனைவருமே புனிதர்கள்தான். இந்த நாள் நமக்கு விடுக்கும் அழைப்பு: நாமும் புனிதராக வாழவேண்டும். புனித வாழ்வை விரும்ப வேண்டும். புனிதர்கள் என்பவர்கள் நமக்கு அப்பாற்பட்டவர்கள், வியத்தகு வரங்களைப் பெற்றவர்கள் என்று எண்ணாமல், அவர்களும் நம்மைப் போன்ற நிறைகளும், குறைகளும் கொண்டவர்களே என்பதையும், ஆனால், நாள்தோறும் தங்கள் வாழ்வை இறைவார்த்தையின்படி நடத்தியவர்கள் என்பதையும் நினைவுகூர்ந்தால், நாமும் புனிதர்களாக வாழலாம், முயற்சி செய்யலாம்.

மன்றாட்டு:

புனிதர்களின் பேரின்பமே இறைவா, தங்கள் வாழ்வில் உம்மை மாட்சிப்படுத்தி, இன்று உம்மோடு வாழும் பேறுபெற்ற அனைத்துப் புனிதர்களுக்காகவும். அவர்களுக்கு நீர் அளித்த மாட்சியின் மணிமுடிக்காகவும் உம்மைப் போற்றுகிறோம். இறைவா, எங்கள் வானகத் தந்தையாகிய நீர் தூயவராய், இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல. நாங்களும் வாழவும், அதன்வழி புனிதர்களாய் மாறவும் அருள்தாரும்.