யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 30வது வாரம் வெள்ளிக்கிழமை
2020-10-30




முதல் வாசகம்

உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள்வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-11

கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்கின்ற பிலிப்பி நகர இறைமக்கள், சபைக் கண்காணிப்பாளர்கள், திருத்தொண்டர்கள் அனைவருக்கும், கிறிஸ்து இயேசுவின் பணியாளர்களான பவுலும் திமொத்தேயுவும் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும், ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! உங்களை நினைவுகூரும்பொழுதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்; உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மன்றாடி வருகிறேன். ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள். உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள்வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன். நீங்கள் என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள். உங்கள் எல்லாரையும் பற்றி எனக்கு இத்தகைய எண்ணங்கள் எழுவது முறையே. ஏனெனில் நான் சிறையிலிருக்கும் இந்நேரத்திலும் நற்செய்திக்காக வழக்காடி அதை நிலைநாட்டிய காலத்திலும் நான் பெற்ற அருளில் உங்களுக்கும் பங்குண்டு. கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன் என்பதற்குக் கடவுளே சாட்சி. மேலும், நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன். கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை.
திருப்பாடல்111: 1-2. 3-4. 5-6

நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். 2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். பல்லவி

3 அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது. 4 அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். பல்லவி

5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்; 6 வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார். இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து, ``ஓய்வு நாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?'' என்று கேட்டார். அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார். பிறகு அவர்களை நோக்கி, ``உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?'' என்று கேட்டார். அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பின்பு இயேசு, ''இறையாட்சி...ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின' என்றார்'' (லூக்கா 13:18-19)

கடுகு விதை மிகச் சிறிது. தமிழ் இலக்கிய மரபிலும் கடுகு, தினை மற்றும் ஆல விதைகள் சிறுத்திருப்பது பற்றிய கூற்றுக்கள் உண்டு. ''கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்'' என்று திருக்குறளைப் புகழ்கின்றார் இடைக்காடர். தினையையும் பனையையும் ஒப்பிடுவார் வள்ளுவர் (குறள் 104). சிறிய விதையிலிருந்து வானோக்கி வளர்ந்து விரிகின்ற ஆல மரம் அரசனின் படைக்கு நிழலாகும் என்பதும் இலக்கிய வழக்கு. அதுபோல இயேசு கடுகு பற்றி ஒரு சிறு உவமை வழி இறையாட்சியின் தன்மையை விளக்குகிறார். பாலஸ்தீன நாட்டில் கடுகு வகைகள் பல உண்டு. அவற்றுள் ஒருவகை 10 அடி வரை வளர்ந்து ஓங்கும் மரமாக உயர்வதுண்டு. இயேசு தொடங்கிவைத்த இறையாட்சியும் சிறிய அளவில் ஆரம்பமானாலும் மிக உயர்ந்தும் விரிந்தும் வளர்ந்தோங்கும் தன்மையது. பழைய ஏற்பாட்டில் வானளாவ வளர்கின்ற கேதுரு மரம் பற்றிப் பேசப்படுகிறது (காண்க: எசே 17:22-24). அது 50 அடி வரை வளர்ந்து பெருமரமாகக் காட்சியளிக்கும். ஆனால் இயேசு இறையாட்சியை அத்தகைய பெரியதொரு மரத்திற்கு ஒப்பிடவில்லை. மாறாக, மிகச் சிறிய விதையிலிருந்து தோன்றி வளர்கின்ற ஒரு சிறு மரத்திற்கு அதை ஒப்பிடுகிறார். நோயுற்ற மனிதர்களுக்கு நலமளிப்பதும், மக்களுக்கு இறையாட்சி பற்றிச் சொல்லாலும் செயலாலும் போதிப்பதுமே இயேசுவின் பணியாக இருந்தது. சிறிய அளவில் தொடங்கிய அப்பணி உலகளாவிய பெரும் பணியாக விரியும். எல்லா மனிதர்களும் இயேசு அறிவித்த இறையாட்சியில் பங்கேற்க இயலும்.

வானத்துப் பறவைகள் என்னும் உருவகம் வழியாக இயேசு இறையாட்சி என்பது எல்லா மக்களையும் வரவேற்கின்ற இடம் எனக் காட்டுகிறார். பறவைகள் மரத்தில் கூடு கட்டும். மரத்துக் கனிகளை உண்டு மகிழும். கிளைகளில் அமர்ந்து இனிமையாகப் பாடும். இறையாட்சியும் அவ்வாறே என்க. மனிதர்கள் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைக்கும்போது கடவுளின் ஆட்சியில் பங்கேற்பார்கள். அவர்களது இதயத்தில் கடவுள் பற்றிய உணர்வு ஆழப்படும். தங்கள் இதயக் கதவுகளை அவர்கள் கடவுளுக்கும் பிறருக்கும் திறந்துவிடுவார்கள். பிறரது இன்பதுன்பங்களில் பங்கேற்பார்கள். இவ்வாறு கடவுளாட்சி என்பது எல்லா மக்களையும் ஒன்றுசேர்த்து, அவர்களிடையே நல்லுறவுகளை ஏற்படுத்தி அவற்றை உறுதிப்படுத்துகின்ற தன்மையது.

மன்றாட்டு:

இறைவா, மனித வாழ்வு சிறு தொடக்கமாயினும் நிறைவை நோக்கி நீர் எங்களை வழிநடத்துகிறீர் என நாங்கள் உணர்ந்து செயல்பட அருள்தாரும்.