யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 30வது வாரம் திங்கட்கிழமை
2020-10-26




முதல் வாசகம்

கிறிஸ்து அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 32 - 5: 8

சகோதரர் சகோதரிகளே, ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்தது போல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்பு கூர்ந்ததுபோல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள். பரத்தைமை, அனைத்து ஒழுக்கக் கேடுகள், பேராசை ஆகியவற்றின் பெயர்கூட உங்களிடையே சொல்லப்படலாகாது. இதுவே இறைமக்களுக்கு ஏற்ற நடத்தை. அவ்வாறே, வெட்கங்கெட்ட செயல், மடத்தனமான பேச்சு, பகடி பண்ணுதல் ஆகியவை தகாதவை; நன்றி சொல்லுதலே தகும். ஏனெனில் பரத்தைமையில் ஈடுபடுவோர், ஒழுக்கக் கேடாக நடப்போர், சிலை வழிபாடாகிய பேராசை கொண்டோர் போன்ற எவரும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமைப்பேறு அடையார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். வீண் வார்த்தைகளால் உங்களை யாரும் ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில் மேற்கூறிய செயல்களால்தான் கீழ்ப்படியாத மக்கள்மீது கடவுளின் சினம் வருகின்றது. எனவே அவர்களோடு நீங்கள் எதிலும் பங்குகொள்ள வேண்டாம். ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நீங்கள் கடவுளின் பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள்.
திருப்பாடல் 1: 1-2. 3. 4,6

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17

அக்காலத்தில் ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக் கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல் நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார். இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, ``அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்'' என்று கூறி, தம் கைகளை அவர்மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். இயேசு ஓய்வு நாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, ``வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக் கொள்ளுங்கள்; ஓய்வு நாளில் வேண்டாம்'' என்றார். ஆண்டவரோ அவரைப் பார்த்து, ``வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வு நாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவது இல்லையோ? பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?'' என்று கேட்டார். அவர் இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப்பட்டனர். திரண்டிருந்த மக்கள் எல்லாரும் அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்'' (மத்தேயு 22:34)

மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் எதிரிகளாகக் காட்டப்படுவோர் ''பரிசேயர்'', ''சதுசேயர்'' என்னும் இரு குழுக்களைச் சார்ந்தவர்கள். இவர்களுள் சதுசேயர் என்போர் பெரும்பாலும் எருசலேம் நகரில் வாழ்ந்தனர். அவர்கள் ஆளும் வர்க்கத்தினர். விவிலியத்தின் முதல் ஐந்து நூற்களை மட்டுமே அதிகாரப்பூர்வமான ஏடுகளாக இவர்கள் ஏற்றார்கள். அந்நூல்களில் கூறப்பட்டவற்றை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வாய்மொழி மரபாகவோ எழுத்து மரபாகவோ வழங்கப்பட்ட சட்ட விளக்கங்கள் விவிலியத்தின்; முதல் ஐந்து நூல் போதனையிலிருந்து மாறுபட்டால், அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் இவர்கள் கருதினார்கள்.எனவே, இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் கருத்து விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களில் காணப்படவில்லை என்பதால் அதை ஏற்க முடியாது என்பது இவர்களுடைய கருத்து. ஆனால் இயேசு விவிலியத்தின் முதல் நூலாகிய ''தொடக்கநூல்'' என்பதில் ''கடவுள் இறந்தோரின் கடவுளல்ல, மாறாக, ''உயிர்வாழ்வோரின் கடவுள்'' எனக் காணப்படும் உண்மையைச் சுட்டிக்காட்டி, ''சதுசேயரின் வாயை அடைத்துவிட்டார்'' (மத் 22:23). தங்களோடு கருத்து வேறுபட்ட சதுசேயரை இயேசு முறியடித்தார் என்பதைப் பரிசேயர்கள் கேள்விப்படுகின்றனர். அவர்களுக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சிதான். ஆனால் பரிசேயரும் இயேசுவைச் சோதிக்கும் நோக்கத்துடன் அவரை அணுகி வருகின்றனர். ''பரிசேயர் ஒன்றுகூடினர்'' (மத் 22:34) என மத்தேயு குறிப்பிடுவது கருதத்தக்கது. இயேசுவுக்கு எதிராகத் திட்டம் வகுத்து அவரை ஒழிக்கத் தேடிய பரிசேயரோ பிறரோ ''ஒன்றுகூடி'' சதித்திட்டம் போடுவதை மத்தேயு பல இடங்களில் குறிப்பிடுகிறார் (காண்க: மத் 22:41; 26:3; 27:17,27; 28:12).

இயேசுவைச் சோதிக்க வந்த பரிசேயருள் ஒருவர் திருச்சட்ட அறிஞர். அவர் இயேசுவிடம் ''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்னும் கேள்வியைக் கேட்கிறார் (மத் 22:36). பல நூற்றுக்கணக்கான கட்டளைகளை உள்ளடக்கிய திருநூலில் காணப்படுகின்ற முதன்மையான கட்டளை எது என்னும் கேள்விக்கு யூத அறிஞர் அக்காலத்தில் பதில் தேடியது உண்டு. எடுத்தக்காட்டாக, ஹில்லல் என்னும் அறிஞரைக் குறிப்பிடலாம். அவரைத் தேடி ஒரு பிற இனத்தவர் வருகிறார். ''நான் ஒற்றைக் காலில் நிற்கும் நேரத்தில் எனக்குத் திருச்சட்டம் முழுவதையும் கற்றுத் தர முடியும் என்றால் நான் யூத சமயத்தைத் தழுவுகிறேன்'' என்கிறார் அவர். இதைக் கேட்ட ஹில்லல் அப்பிற இன மனிதரைப் பார்த்து, ''உனக்குத் தீங்கு இழைக்க நீ விரும்பாததுபோல பிறருக்கும் தீங்கு இழைக்க விரும்பாதே. இதில் திருச்சட்டம் முழுவதும் அடங்கும். எஞ்சியது விளக்கவுரையே'' எனப் பதிலளித்தார். இயேவிடம் சென்று ''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது'' என்று கேட்டவருக்கு இயேசு அளித்த பதில் ''கடவுளை அன்புசெய்க; பிறரை அன்புசெய்க'' என்பதே. ''திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன'' (மத் 22:40) என்று இயேசு அளித்த பதிலுக்கு ஆதாரம் பழைய ஏற்பாட்டில் உள்ளது (காண்க: இச 6:5; லேவி 19:18). அன்புக் கட்டளையை இயேசு தம் வாழ்வில் முழுமையாகக் கடைப்பிடித்தார். கடவுளை முழுமையாக அன்புசெய்த அவர் நமக்காகச் சிலுவையில் உயிர் துறந்து நம்மை இறுதிவரை அன்புசெய்ததைச் செயல்முறையில் காட்டினார். அதே அன்பு நம்மில் துலங்கிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் சிந்தனை சொல் செயல் அனைத்தும் அன்பிலிருந்து பிறந்திட அருள்தாரும்.