யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 27வது வாரம் சனிக்கிழமை
2020-10-10




முதல் வாசகம்

கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 22-29

சகோதரர் சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்வோருக்கு வாக்களிக்கப் பட்டவை நம்பிக்கையால் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அனைத்தும் பாவத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளது என மறைநூல் கூறுகிறது. நாம் நம்பிக்கை கொள்வதற்கு முன் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தோம். வெளிப்பட இருந்த அந்த நம்பிக்கையை நாம் பெறும்வரை இந்நிலை நீடித்தது. இவ்வாறு, நம்பிக்கையின் அடிப்படையில் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவதற்காக நம்மைக் கிறிஸ்துவிடம் கூட்டிச்செல்லும் வழித்துணையாய்த் திருச்சட்டம் செயல்பட்டது. இப்பொழுது நாம் நம்பிக்கை கொண்டுள்ளதால் இனி நாம் வழித்துணைவரின் பொறுப்பில் இல்லை. ஏனெனில், கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித்தோன்றல்களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.
திருப்பாடல் 105: 2-3. 4-5. 6-7

2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! 3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! பல்லவி

4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! 5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்து கொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28

அக்காலத்தில் இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், ``உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்'' என்று குரலெழுப்பிக் கூறினார். அவரோ, ``இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்'' (லூக்கா 11:9)

கேட்டல், தேடல், தட்டுதல் ஆகிய செயல்களில் மனித ஈடுபாடு துலங்குவதைக் காணலாம். அந்த ஈடுபாடு தீவிரமாகும்போது அதன் விளைவாக மனிதர் கேட்டதைப் பெறுவார்கள்; தேடியதைக் கண்டடைவார்கள்; தட்டிய கதவு திறப்பதை உணர்வார்கள். கடவுளை நோக்கி நாம் வேண்டுதல் செய்யும்போது நமக்குத் தேவையானவற்றைக் கேட்கிறோம். எனவேதான் இறைவேண்டலுக்கு ''மன்றாட்டு'' என்னும் பெயரும் உண்டு. என்றாலும் இறைவேண்டலை இக்குறுகிய கண்ணோட்டத்தில் நாம் புரிதல் சரியல்ல. இங்கே நாம் இயேசுவின் முன்மாதிரியைக் கடைப்பிடிக்கலாம். அவர் தம் தந்தையாம் கடவுளை நோக்கி வேண்டினார். பல மணி நேரம் இறைவேண்டலில் செலவிட்டார். தந்தையின் விருப்பம் யாதென உணர்ந்து அதைக் கடைப்பிடித்தலே இயேசுவின் வாழ்க்கைத் திட்டமாக இருந்தது. தம்மைப் போலத் தம் சீடரும் இறைவேண்டலில் ஈடுபட வேண்டும் என இயேசு கேட்டார்.

நாம் கேட்டது கிடைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது இறைவேண்டலின் பண்பாக இருத்தலாகாது. நம் உள்ளத்தைக் கடவுளை நோக்கி எழுப்புதலே இறைவேண்டல். கடவுளின் முன்னிலையில் தாழ்ச்சியோடு நம்மை நிறுத்தும்போது அங்கே இறைவேண்டல் நிகழ்கிறது. நம் கவலைகளையும் கலக்கங்களையும் களைந்துவிட்டு, இறைப்பிரசன்னத்தின் அமைதியில் நாம் புகும்போது நம் இறைவேண்டல் அர்த்தமுள்ளதாகும். நம்மைக் கடவுளின் கைகளில் முழுமையாக ஒப்படைத்துவிட்டால் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதைச் செயலாக்க நாம் முன்வருவோம். தூய ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டு, அவருடைய உந்துதலுக்கு நம்மைப் பணிவுடன் கையளித்துச் செயல்பட நாம் அழைக்கப்படுகிறோம். நம் இதயத்தில் தூய ஆவியின் சக்தியை நாம் உணர்ந்து, கடவுளிடத்தில் முழுமையாக நம்பிக்கை வைத்து, அவருடைய பாதுகாப்பில் நம்மைக் கையளிப்பதே உண்மையான இறைவேண்டல், நிறைவான மன்றாட்டு. அப்போது நாம் கேட்பதும் தேடுவதும் கடவுளின் புகழாக இருக்கும்; நாம் கடவுளின் இதயக் கதவுகளைத் தட்டும்போது அவர் நம்மைத் தம் இல்லத்தில் ஏற்று நம்மை அன்பின் அரவணைப்பில் பிணைத்திடுவார்; நாமும் இறையன்பு என்னும் ஆழ்கடலில் மூழ்கித் திளைத்திடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம்மை நோக்கி மன்றாடும்போது எங்களை முழுமையாக உம்மிடம் கையளிக்க அருள்தாரும்.