யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 27வது வாரம் புதன்கிழமை
2020-10-07

திருச்செபமாலை அன்னை




முதல் வாசகம்

இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்;கொண்டிருந்தார்கள்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்1;12-14

12 பின்பு அவர்கள் ஒலிவமலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் உள்ளது. 13 பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள். 14 அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்;கொண்டிருந்தார்கள்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

"ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
லூக்கா 1;47-55

47 "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.பல்லவி

49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.51 அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.பல்லவி

52 வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.பல்லவி

54 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவி;ல் கொண்டுள்ளார்;55 தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார் ".பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்"

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்1;26-38

26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். 27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. 28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார். 29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். 30 வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். 31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். 32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். 33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார். 34 அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார். 35 வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். 36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். 37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார். 38 பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்'' (மத்தேயு 21:41)

கடவுளின் திராட்சைத் தோட்டம் பரந்து விரிந்த இப்பாருலகைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இத்தோட்டத்தின் பொறுப்பு மனிதரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தோட்டத்தைப் பண்படுத்தி, அதில் தரமான செடிகளை நட்டு, அவற்றிற்கு உரமிட்டு, நீர்ப்பாய்ச்சிக் கண்காணித்து, செழிப்பான விளைச்சலைக் கொணர்கின்ற பொறுப்பு நம்மிடம் தரப்பட்டுள்ளது. பொறுப்பற்ற விதத்தில் செயல்படுவோர் தண்டனைக்கு உள்ளாவர்; ஆனால் பொறுப்பாகச் செயல்படுவோர் கடவுளிடமிருந்து கைம்மாறு பெறுவர். உலகத்தின் பொறுப்பு மனிதரிடம் உள்ளது என்றால் அவ்வுலகத்தை அவர்கள் தங்கள் விருப்பம்போல, மனம்போன போக்கில் சுறண்டலாம் என்று பொருளாகாது. இவ்வுலகத்தின் வளங்கள் எல்லைக்கு உட்பட்டவையே. நிலத்தின் கீழ் உள்ள தாதுப்பொருள்களும், எண்ணெய் வளங்களும் தோண்டத் தோண்ட வந்துகொண்டே இருக்கும் என நாம் நினைத்தலாகாது. அதுபோலவே, சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்ற நச்சுப் பொருள்களை நாம் உற்பத்திசெய்துகொண்டே இருக்கலாம் என நினைப்பதும் பொறுப்பற்ற சிந்தனையே.

இயற்கையைப் பொறுப்போடு பராமரிக்க வேண்டும் என்பதோடு மனித சமுதாயத்தையும் நாம் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்பது தெளிவு. மனிதரிடையே நிலவ வேண்டிய உறவுகள் அன்பு, நீதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டுமே ஒழிய அதிகாரம் அடக்குமுறை போன்ற எதேச்சைப் போக்குக்கு அங்கே இடமில்லை. ''உரிய காலத்தில்'' கனி வழங்கும் பொறுப்பு நம்மிடம் தரப்பட்டுள்ளதால் அப்பொறுப்பைச் சரிவர நிறைவேற்றினால் நாம் திராட்சைத் தோட்ட உரிமையாளராகிய கடவுளின் ஆட்சியில் பங்கேற்கும் அருளைக் கடவுளே நமக்குத் தருவார் (மத் 21:43).

மன்றாட்டு:

இறைவா, உம் திருவுளத்தை மீறாமல் அதற்கு அமைந்து வாழ அருள்தாரும்.