யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் திங்கட்கிழமை
2020-09-21

0புனித மத்தேயு - திருத்தூதர், நற்செய்தியாளர் விழா




முதல் வாசகம்

இறைமக்களை ஆயத்தப்படுத்தவும் தம் மறையுடலைக் கட்டியெழுப்பவுமே கிறிஸ்து எங்களை ஏற்படுத்தினார்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-7, 11-13

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர். கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார். அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சி அடைவோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
திருப்பாடல் 19: 1-2. 3-4

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம். திருத்தூதர்களின் அருளணியும் ஆண்டவரே, உம்மைப் போற்றிடுமே.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13

அக்காலத்தில் மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், ``என்னைப் பின்பற்றி வா'' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்த போது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், ``உங்கள் போதகர் வரி தண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?'' என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், ``நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. `பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?'' (மத்தேயு 20:16)

திராட்சைத் தோட்டத்தில் வேலைக்கு அமர்த்த நிலக்கிழார் வேலையாள்களைத் தேடிச்செல்கிறார். விடியற்காலையிலிருந்தே தொடங்கி, கதிரவன் மறையும் வரை வேலை செய்தவர்களும், காலை ஒன்பது மணி, நண்பகல், மாலை ஐந்து மணி என வெவ்வேறு நேரங்களில் வேலைக்குச் சேர்ந்தவர்களும் ஒரே கூலியைப் பெறுகின்றனர். நாள் முழுதும் வேலை செய்தவர்களுக்கும் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்தவர்களுக்கும் சம கூலி வழங்குவது சரியா என்னும் கேள்வி எழுகிறது. அப்போது நிலக்கிழார் கேட்ட கேள்வி: ''நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?'' இயேசு கூறிய இந்த உவமையை வெவ்வேறு மட்டங்களில் விளக்கிப் பொருள் உரைக்கலாம். அக்காலத்தில் நிலவிய சமூக-பொருளாதார பழக்கவழக்கங்களின் பின்னணியில் இந்த உவமையைப் பார்க்கலாம். அன்றாடம் செய்கின்ற வேலைக்குக் கிடைக்கின்ற கூலியைக் கொண்டுதான் வேலையாள்கள் பிழைப்பு நடத்த வேண்டியிருந்தது. அதே நேரத்தில் பெரிய நிலங்களை உடைமையாகக் கொண்டவர்களும் இருந்தார்கள். கடவுளாட்சி பற்றி இயேசு இந்த உவமையைக் கூறியதால் அந்த ஆட்சியில் புகுவதற்கு அழைப்புப் பெற்றவர்கள் சிலர் முதலிலும் வேறு சிலர் வெகு நாள்கள் கடந்தும் நுழைந்திருக்கலாம். இஸ்ரயேலர் முதலில் வந்தனர், பிற இனத்தார் வந்துசேர நேரம் பிடித்தது. ஆனால், தம் ஆட்சியில் பங்கேற்போர் அனைவருக்கும் கடவுள் வழங்குகின்ற கொடை ஒரே தன்மையதுதான். காலையிலிருந்தே உழைத்த இஸ்ரயேலருக்கும், மாலை ஐந்து மணிக்கு வேலையில் சேர்ந்த பிற இனத்தாருக்கும் ஒரே கூலிதான். ஆனால், பின்னால் வந்தவர்களுக்கும் முன்னால் வந்தவர்களுக்கும் ஒரே சம ஊதியமே வழங்கும் கடவுள் நீதியின்றி செயல்படவில்லையா?

கடவுளின் நீதி மனித நீதியைப் போன்றதல்ல. மனிதர் வழங்கும் நீதி வரையறைக்கு உட்பட்டது. ஆனால் கடவுள் வழங்கும் நீதி தாராள அன்பின் அடிப்படையில் அமைந்தது. கடவுளின் அன்புதான் அவருடைய நீதிக்கு அடிப்படை. எனவே, கடவுள் அநீதியாகச் செயல்படுகிறார் என்பதைவிட, தாராள உள்ளத்தோடு நடந்துகொள்கிறார் என்பதே உண்மை. கடவுளின் தாராள அன்பைக் கண்டு குறைகூறுவோர் உண்டு. அதாவது, அளவுக்கு மிஞ்சிய தாராளத்தைக் கடவுள் காண்பிப்பதால் அவர் அநீதியாக நடக்கிறார் என்று சிலர் குற்றம் சாட்டுவர். கடவுளின் நீதி மனித கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என நாம் உணர வேண்டும். கடவுள் மக்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை; அதே நேரத்தில் அவருடைய கொடை எப்போதுமே தாராளமாக நமக்கு வழங்கப்படுகிறது. எனவே, கடவுளின் தாராளத்தைக் கண்டு நாம் பொறாமைப்படுதல் பொருத்தமாகாது.

மன்றாட்டு:

இறைவா, அன்பில் தோய்ந்த நீதிமுறையை நாங்கள் கடைப்பிடித்து வாழ அருள்தாரும்.