யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் வெள்ளிக்கிழமை
2020-09-11




முதல் வாசகம்

எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19,22-27

சகோதரர் சகோதரிகளே, நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவன் ஆனேன். எப்படியாவது ஒருசிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்குபெற வேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன். பந்தயத் திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. இது உங்களுக்குத் தெரியாதா? எனவே, பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள். பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றிவாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம். நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப் போல ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப் போலக் குத்துச்சண்டை இடமாட்டேன். பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!
திருப்பாடல் 84: 2. 3. 4-5. 11

என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. பல்லவி

3 படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. பல்லவி

4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். 5 உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர். அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. பல்லவி

11 கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 39-42

அக்காலத்தில் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: ``பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா? சீடர் குருவை விட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போல் இருப்பர். நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், `உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?' என்று எப்படிக் கேட்க முடியும்? வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும் !

இறைவன் மானிடருக்கு விவிலியம் வழியாக அளித்துள்ள வாக்குறுதிகளில் அழகானதும், ஆறுதல் தருவதுமான ஒன்று: கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும் என்பது. கொடுப்பது என்பது அடிப்படை மானிட நேயப் பண்புகளில் ஒன்று. ஆனாலும், நமது தன்னலம், பாதுகாப்பின்மை போன்றவை நம்மைக் கொடுக்க விடாதபடித் தடுக்கின்றன. அவற்றை மீறி, கொடுத்து, அதன் வழியாக இறைவனிடமிருந்து பன்மடங்கு அதிகமாக நாம் பெறும் அனுபவம் இனிய ஓர் அனுபவம். நாம் எவ்வளவு கொடுக்கிறோமோ, அதைவிட பன்மடங்கு அதிகமாக இறைவன் நமக்குத் தருவார் என்பது இயேசு இன்றைய வாசகம் மூலம் நமக்குத் தரும் வாக்குறுதி. அமுக்கிக் குலுக்கிச் சரிந்துவிழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள் என்று தெளிவாகப் போதிக்கின்றார் இயேசு.

எனவே, நமது நேரம், ஆற்றல்கள், திறமைகள், கொடைகள், அன்பு, ஆறுதல், ஊக்கம், செல்வம், பொருள்கள் இவற்றைப் பிறருக்குத் தாராளமாகக் கொடுப்போம். கொடுப்பதைவிட அதிகமாக இறைவனிடமிருந்து ஆசிகளைப் பெற்றுக்கொள்வோம்.

மன்றாட்டு:

கொடை வள்ளலான இறைவா, வேண்டுவதற்கும், விரும்புவதற்கும் மேலாகவே எங்கள்மீது உமது அருள்கொடைகளை வாரி வழங்குவதற்காக உம்மைப் போற்றுகிறோம். நன்றி கூறுகிறோம். உம்மிடமிருந்து இன்னும் ஏராளமான நன்மைகளை நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நாங்கள் பிறருக்குக் கொடுக்க வேண்டும், பகிர்வு செய்ய வேண்டும் என்று நீர் விடுக்கம் அழைப்புக்காக நன்றி. கொடுக்கின்ற, பகிர்கின்ற உள்ளத்தை எங்களுக்குத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.