யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 20வது வாரம் செவ்வாய்க்கிழமை
2020-08-18

புனித ஜோன் யுட்ஸ்




முதல் வாசகம்

நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே!
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 28: 1-10

அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: மானிடா! தீர் நகரின் மன்னனுக்குச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இதயத்தின் செருக்கில், `நானே கடவுள்; நான் கடல் நடுவே கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்' என்று சொல்கின்றாய். ஆனால் நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே! தானியேலைவிட நீ அறிவாளிதான்! மறைபொருள் எதுவும் உனக்கு மறைவாயில்லை! உன் ஞானத்தாலும் அறிவாலும் உனக்குச் செல்வம் சேர்த்தாய்; உன் கருவூலத்தில் பொன்னையும் வெள்ளியையும் குவித்தாய். உன் வாணிபத் திறமையால் உன் செல்வத்தைப் பெருக்கினாய்; உன் செல்வத்தினாலோ உன் இதயம் செருக்குற்றது. ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கடவுளைப் போல் அறிவாளி என உன்னைக் கருதிக் கொள்வதால், மக்களினங்களில் மிகவும் கொடியோரான அன்னியரை உனக்கெதிராய் எழும்பச் செய்வேன்; அவர்கள் உன் அழகுக்கும் ஞானத்திற்கும் எதிராக உருவிய வாளுடன் வருவர்; உன் பெருமையைக் குலைப்பர். படுகுழியில் தள்ளுவர் உன்னை; கடல் நடுவே மூழ்கிச் சாவோரெனச் சாவாய் நீயே! அப்போது உன்னைக் கொல்வோரின் நடுவில் `நானே கடவுள்' என்று சொல்வாயே? உன்னைக் குத்திக் கிழிப்போரின் கையில் நீ கடவுளாக அல்ல, மனிதனாகவே இருப்பாய். விருத்தசேதனம் செய்யப்படாதவனைப் போல் அன்னியர் கையால் நீ சாவாய். நானே உரைத்தேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே!
இணைச்சட்டம் 32: 26-27. 28,30. 35-36

6 நான் சொன்னேன்: அவர்களை எத்திக்கிலும் சிதறடிப்பேன்; அவர்களது நினைவு மனிதரிடமிருந்து அற்றுப் போகச் செய்வேன். 27 ஆயினும், `எங்கள் கைகள் வலிமையானவை! இதையெல்லாம் ஆண்டவர் செய்யவில்லை!' என்று அவர்களின் பகைவர் திரித்துப் பேசுவர் என்பதாலும் பகைவனின் பழிச் சொல்லுக்கு அஞ்சியும் வாளாவிருந்தேன். பல்லவி

28 அவர்கள் புத்தி கெட்ட மக்கள்; அவர்களிடம் விவேகம் சிறிதும் இல்லை. 30 ஒரே ஆள் ஆயிரம் பேரைத் துரத்துவதும் இரண்டு பேர் பதினாயிரம் பேரை விரட்டுவதும் அவர்களது பாறை அவர்களை விற்றுவிட்டதாலன்றோ? அவர்களின் கடவுள் அவர்களைக் கைவிட்டதாலன்றோ? பல்லவி

35உன அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது; அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன. 36யb அவர்கள் ஆற்றல் இழந்துவிட்டவர்கள் எனவும் அடிமையோ குடிமகனோ எவனுமில்லை எனவும் காணும்போது ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையான◌ார்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 23-30

அக்காலத்தில் இயேசு தம் சீடரிடம், ``செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது'' என்றார். சீடர்கள் இதைக் கேட்டு, ``அப்படியானால் யார்தாம் மீட்புப் பெற முடியும்?'' என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ``மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்'' என்றார். அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, ``நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?'' என்று கேட்டார். அதற்கு இயேசு, ``புதுப் படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நுறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர். ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்'' என்று அவர்களிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நம்பிக்கையின் வெற்றி !

ஒரு தாயின் விடாப்பிடியான வேண்டுதலையும், அதன் இறுதி வெற்றியையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம். தாய்மையின் மேன்மையை வெளிக்கொணரத்தான் ஒருவேளை இயேசு நாடகமாடினாரோ என்னவோ. கனானியப் பெண்ணின் நம்பிக்கையை இயேசு நன்றாகவே சோதித்துப் பார்த்துவிட்டார்.

பிள்ளைகளுக்குரிய உணவை நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல என்ற கடுமையான மறுமொழிகூட அந்தத் தாயின் நம்பிக்கையை, எதைச் செய்தாவது தன் மகளைக் குணப்படுத்திவிட வேண்டும் என்ற அன்பின் பிடிவாதத்தை, அன்பின் தளராத் தன்மையைத் தோற்கடிக்க முடியவில்லை. உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க் குட்டிகள் தின்னுமே என்று கூர்மதியுடனும், அன்புடனும் பதில் சொல்லி இயேசுவின் பாராட்டையும், மகளுக்கு நலத்தையும் பெற்றுக்கொண்டார்.

மன்றாட்டு:

அன்பின் இயேசுவே, கனானியப் பெண்ணின் நம்பிக்கையைப் பாராட்டிய உம்மைப் போற்றுகிறோம். மனந் தளராமல், நம்பிக்கையுடன் மன்றாட வேண்டும் என்பதற்கு மாதிரியாகத் தந்த அந்தத் தாய்க்காக நன்றி கூறுகிறோம். நாங்களும் எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை இழந்துவிடாமல் உம்மையே பற்றிக்கொள்ள வரம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.