யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2020-08-09

(இன்றைய வாசகங்கள்: அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 9, 11-13,திருப்பாடல் 85: 8- 9. 10-11. 12-13,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 9: 1-5 ,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 22-33)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

நல்லதையே ஆண்டவர் அருள்வார்: நல்விளைவை நம் நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்: அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.

அமைதிக்குரியவர்களே, பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன் போடு வரவேற்கிறோம். நம்மை அலைக்கழித்து அச்சத்தில் ஆழ்த்தும் இவ்வுலகின் நெருக் கடிகளில், ஆண்டவரைப் பற்றிக்கொண்டு அமைதி காண இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவரிடம் இருந்து நாம் விலகியிருக்கும்போது, அவரை பேய் எனக் கருதி பயந்து நடுங்க வாய்ப்புள்ளது. பேதுருவைப் போன்று துணிவோடு இயேசுவை நோக்கி முன்னேறும்போது, வியத்தகு செயல்களை செய்ய ஆற்றல் பெறுவோம் என்ற நம்பிக்கை தரப்படுகிறது. நம்பிக்கை பயணத்தில் நாம் தடுமாறும் நேரத்தில் நம் ஆண்ட வரை உதவிக்கு அழைத்து, அவரது கரங்களை உறுதியாய் பற்றிக்கொள்ள வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

மலைமேல் என் திருமுன் வந்து நில்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 9, 11-13

அந்நாள்களில் எலியா ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தபின் அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவர், �வெளியே வா; மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்ல இருக்கிறேன்� என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை. நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது. அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் பேரன்பையும் மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
திருப்பாடல் 85: 8- 9. 10-11. 12-13

8 ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; 9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். 11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். 13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி

இரண்டாம் வாசகம்

என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 9: 1-5

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவைச் சார்ந்த நான் சொல்வது உண்மை, பொய்யல்ல. தூய ஆவியால் தூண்டப்படும் என் மனச்சான்றே நான் சொல்வதற்குச் சாட்சி. உள்ளத்தில் எனக்குப் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு. என் சொந்த இனத்தைச் சேர்ந்த என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன். அவர்கள்தாம் இஸ்ரயேல் மக்கள்; அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக்கொண்டார். அவர்கள் நடுவில்தான் கடவுள் தம் மாட்சியை விளங்கச் செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. குலமுதல்வர்களின் வழிவந்தவர்கள் அவர்கள்; மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார். இவரே எல்லாவற்றுக்கும் மேலான கடவுள்; என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 22-33

அக்காலத்தில் இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின் மேல் ஏறினார். பொழுது சாய்ந்த பிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக் கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது. இரவின் நான்காம் காவல் வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, ``ஐயோ, பேய்'' என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ``துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்'' என்றார். பேதுரு அவருக்கு மறுமொழியாக, ``ஆண்டவரே, நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்'' என்றார். அவர், ``வா'' என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி, இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, ``ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்'' என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, ``நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?'' என்றார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, ``உண்மையாகவே நீர் இறைமகன்'' என்றனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அமைதியின் உருவே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது அமைதியின் கருவிகளாக செயல்பட்டு, பல்வேறு நிலைகளில் பிரிந்து வாழும் மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

நல்லதையே எமக்கு அருளும் தந்தையே!

நாங்கள் ஒவ்வொருவரும் ஆண்டவராம் இறைவன் நீர் உரைப்பதைக் கேட்டு, ஆண்டவராம் உமக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருந்து; உமது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருந்து. உமது வார்த்தைகளை எமது வாழ்வின் வார்த்தைகளாக்கி; வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உமது வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும் அனைவரையும் வாழ்வித்துக் கொண்டிருக்கும் தந்தையே இறைவா!

எமது இளைஞர்களை உமது வார்த்தையால் ஒளிர்வித்து, அவர்கள் நன்மையானதும், பயனளிப்பதுமான வாழ்வைக் கண்டடைந்து, உமக்குகந்தவர்களாக வாழ அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம் வாழ்க்கையின் கலங்கரைத் தீபமே இறைவா!

புதிய விடியலை நோக்கிக் காத்திருக்கும் உலக மக்களை, தொற்றுநோயிலிருந்து காத்து, அவர்களின் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைந்து உம்மைத் தொழுதிட, உம் இறைவேண்டல் இல்லத்திற்கு மீண்டும் வரவும், உம் பணியாற்றிடும் திருஅவைப் பணியாளர்கள் நற்சுகத்துடன் பாதுகாத்து எம்மை வழிநடத்திட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அமைதியின் நிறைவே இறைவா,

வறுமை, பசி, தனிமை, நோய், முதுமை போன்ற பல்வேறு துன்பங்களால் வாடும் மக் களை இரக்கத்துடன் கண்ணோக்கி, அவர்களது வேதனை நீங்கி அமைதி காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

பேரின்பப் பரம்பொருளே! எம் இறைவா!

எமது இளைஞர்கள் உமது அழைப்பைப் புரிந்து கொண்டு: ஞானத்தோடும், ஆற்றலோடும், தெய்வ பயத்தோடும் வாழ அருள் வழங்கி அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நலம் அளிக்கும் வல்லவரே! எம் இறைவா!

இந்தத் தொற்றுநோய்க்கு எதிராய் தன்னலம் கருதாமல் போராடுபவர்கள் அனைவரையும் காத்தருளும். அன்பும், பொறுமையும், கருசனையும் அளித்து உயிர்களைக் காத்திடும் பணியைச் செவ்வனே செய்திட அவர்களுக்குப் பக்கபலமாய் இருக்கவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞசி அவர் மூழ்கும்போது, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்' என்று கத்தினானார்'' (மத்தேயு 14:29-30)

இயேசு இயற்கை சக்திகளையும் அடக்குகின்ற வல்லமை கொண்டவர் என்பதை மத்தேயு ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார் (மத் 8:23-27). திடீரெனக் கடலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு அலைகள் படகைக் கவிழ்க்கவிருந்த வேளையில் இயேசு காற்றையும் கடலையும் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தார். பின்னர் ஒரு சில அப்பங்களையும் மீனையும் கொண்டு ஆயிரக் கணக்கான மக்களுக்கு உணவளித்தார் (மத் 14:13-21). இந்நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இயேசு கடல்மீது நடந்து சென்ற அதிசயத்தை மத்தேயு குறிப்பிடுகிறார் (மத் 14:22-33). மாற்குவில் வரும் பாடத்திற்கும் மத்தேயுவின் பாடத்திற்கும் இடையே உள்ள ஒரு பெரிய வேறுபாடு பேதுரு கடலில் நடக்கும் நிகழ்ச்சியாகும். மத்தேயு பொதுவாக இயேசுவின் சீடர்கள் ''நம்பிக்கை குறைந்தவர்கள்'' எனக் குறிப்பிடுவார். இங்கேயும் பேதுரு நம்பிக்கை குறைந்தவராக நடப்பதைக் காண்கிறோம். அதே நேரத்தில் பேதுரு துணிச்சல் மிக்கவர் கூட. கடலில் நடந்துசெல்ல இயேசு அனுமதி தர வேண்டும் எனக் கேட்கின்ற மன உறுதி அவரிடம் இருந்தது. ஆனால் அவர் தம்மை முழுவதுமாக இயேசுவிடம் கையளிக்கவில்லை. அதாவது, அவர் இயேசிடம் கொண்ட நம்பிக்கை ''குறைவுள்ளதாக'' இருந்தது. இந்த நம்பிக்கைக் குறைவின் காரணமாகப் பேதுரு கடலில் மூழ்கப் போனார். அவ்வாறு மூழ்கிக் கொண்டிருக்கும்போதே அவருடைய இதய ஆழத்திலிருந்து எழுகிறது ஒரு மன்றாட்டு: ''ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்'' என்பதே அம்மன்றாட்டு (மத் 14:30). இங்கே நாம் கருதத்தக்க கூறுகள் பல உண்டு. முதலில் பேதுருவின் கதை அவருடைய சொந்த வாழ்வில் நிகழ்ந்த ஒரு தனியார் சார்ந்த நிகழ்வு மட்டுமல்ல. பேதுரு இயேசுவின் சீடர்களின் பிரதிநிதியாக இவண் வருகின்றார். அவருடைய நம்பிக்கைக் குறைவு இயேசுவின் சீடர்களாகிய நம்மில் சில வேளைகளில் எழுகின்ற நம்பிக்கைக் குறைவைக் காட்டுகிறது. நாமும் இயேசுவிடத்தில் முழு நம்பிக்கை கொள்ளாத வேளைகளில் ஆபத்து நம்மை மூழ்கடிக்க முயல்வதுண்டு; துன்பங்கள் எழுந்து நம்மை அமிழ்த்திவிட முனைவதுண்டு. அந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாம் நம்பிக்கை இழக்காமல் கடவுளை நோக்கி உதவி நாடி நம் மன்றாட்டை எழுப்பிட வேண்டும். பேதுரு இயேசுவை ''ஆண்டவர்'' என அழைத்தது இயேசுவிடத்தில் அவர் கடவுளின் வல்லமை வெளிப்பட்டதைக் கண்டார் என்பதைக் காட்டுகிறது.

தம்மை நோக்கிக் கூக்குரல் எழுப்பிய பேதுருவை இயேசு ''உடனே தம் கையை நீட்டிப் பிடிக்கிறார்'' (காண்க: மத் 14:31). நோயாளிகளைத் தொட்டுக் குணமாக்கிய இயேசுவின் செயல் இது. இங்கே இயேசு பேதுருவின் நம்பிக்கையின்மையை ஒருவிதத்தில் ''குணப்படுத்துகிறார்''. ஆனால் நலம் கொணர்கின்ற இயேசு நமக்கு மீட்பு அளிக்கிறார் என்பதே இங்கே நாம் காண்கின்ற ஆழ்ந்த உண்மை. நம் உள்ளத்தில் ஐயம் எழுகின்ற வேளைகளில் நாம் நம்பிக்கையோடு கடவுளையும் அவர் நம்மை மீட்க அனுப்பிய இயேசுவையும் அணுகிச் சென்றால் தூய ஆவியின் அருளால் நமது நம்பிக்கை மீண்டும் உறுதியாகும். நாமும் நலம் பெற்று மீட்பில் பங்கேற்போம்.

மன்றாட்டு:

இறைவா, துன்பங்கள் எழுந்து எங்களை அழுத்துகின்ற வேளைகளில் எங்களைக் கைதூக்கி விடுபவர் நீரே என நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.