யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் சனிக்கிழமை
2020-08-08

திருச்சிலுவையின் புனித தெரேசா புனித பெனடிக்ரா




முதல் வாசகம்

நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.
இறைவாக்கினர் அபக்கூக்கு நூலிலிருந்து வாசகம் 1: 12 - 2: 4

ஆண்டவரே, என் கடவுளே, என் தூயவரே, தொன்றுதொட்டே இருப்பவர் நீர் அல்லவா? நீர் சாவைக் காண்பதில்லை; ஆண்டவரே, அவர்களை எங்கள் தண்டனைத் தீர்ப்பாய் ஏற்படுத்தியவர் நீரே; புகலிடமே, எங்களைச் சாடும் சாட்டையாய் அவர்களை ஆக்கியவரும் நீரே. தீமையைக் காண நாணும் தூய கண்களை உடையவரே, கொடுமையைப் பார்க்கத் தாங்காதவரே, கயவர்களை நீர் ஏன் பார்த்துக்கொண்டே இருக்கிறீர்? பொல்லாதவர் தம்மைவிட நேர்மையாளரை விழுங்கும்போது நீர் ஏன் மௌனமாய் இருக்கின்றீர்? நீர் மானிடரைக் கடல் மீன்கள் போலும் தலைமை இல்லா ஊர்வன போலும் நடத்துகின்றீர். கல்தேய இனத்தார் மற்றெல்லாரையும் தூண்டிலால் பிடிக்கின்றார்கள்; வலையால் வாரி இழுக்கின்றார்கள்; தங்கள் பறியிலே சேர்த்துக்கொண்டு அகமகிழ்ந்து களிப்புறுகின்றார்கள். ஆதலால், தங்கள் வலைக்குப் பலி செலுத்துகின்றார்கள்; பறிக்குத் தூபம் காட்டுகின்றார்கள்; ஏனெனில் அவற்றாலேயே இன்பமான வாழ்வை அடைகின்றார்கள்; அறுசுவை உணவைப் பெறுகின்றார்கள். அப்படியானால் அவர்கள் தங்கள் வலையில் இருப்பவற்றை ஓயாமல் வெளியே கொட்டி, மக்களினங்களை இரக்கமின்றி இடைவிடாமல் கொன்று குவிக்கவும் வேண்டுமோ? நான் காவல் மாடத்தில் நிற்பேன்; கோட்டைமேல் நின்று காவல் புரிவேன்; என் வாயிலாக ஆண்டவர் என்ன கூறப்போகின்றார் என்றும் என் முறையீட்டுக்கு என்ன விடையளிப்பார் என்றும் கண்டறிவதற்காகக் காத்திருப்பேன். ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: ``காட்சியை எழுதிவை; விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது. குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது; முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு; அது நிறைவேறியே தீரும்; காலம் தாழ்த்தாது. இதை நம்பாதவரோ உள்ளத்திலே நேர்மையற்றவராய் இருப்பர்; நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: உம்மை நாடி வருவோரை ஆண்டவரே, நீர் கைவிடமாட்டீர்.
திருப்பாடல்9: 7-8. 9-10. 11-12

ஆண்டவர் அரியணையில் என்றென்றும் வீற்றிருக்கின்றார்; நீதி வழங்குவதற்கென்று அவர் தம் அரியணையை அமைத்திருக்கின்றார். 8 உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்; மக்களினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார். பல்லவி

9 ஒடுக்கப்படுவோர்க்கு ஆண்டவரே அடைக்கலம்; நெருக்கடியான வேளைகளில் புகலிடம் அவரே. 10 உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கை கொள்வர்; ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை. பல்லவி

11 சீயோனில் தங்கியிருக்கும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய செயல்களை மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்; 12 ஏனெனில், இரத்தப் பழி வாங்கும் அவர் எளியோரை நினைவில் கொள்கின்றார்; அவர்களின் கதறலை அவர் கேட்க மறவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 14-20

அக்காலத்தில் இயேசுவும் சீடர்களும் மக்கள் கூட்டத்தினரிடம் வந்தபோது ஒருவர் இயேசுவை அணுகி அவர் முன் முழந்தாள்படியிட்டு, ``ஐயா, என் மகனுக்கு இரங்கும்; அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான். அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் விழுகிறான். உம் சீடர்களிடம் அவனைக் கொண்டு வந்தேன்; அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை'' என்றார். அதற்கு இயேசு, ``நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்'' என்று கூறினார். கொண்டு வந்ததும் இயேசு அப்பேயைக் கடிந்துகொள்ளவே, அது அவனை விட்டு வெளியேறியது. அந்நேரமே சிறுவன் குணமடைந்தான். பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து, ``அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?'' என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ``உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்கு கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து `இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ' எனக் கூறினால், அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நம்பிக்கையினால் வாழ்வு !

கி.மு. 600 ஆம் ஆண்டையொட்டி யூதா நாட்டில் வாழ்ந்த இறைவாக்கினர்தான் அபக்கூக்கு. வடக்கிலிருந்து பாபிலோனியர்கள் படையெடுத்து வந்து தாக்கும் ஆபத்து எப்போதும் சூழ்ந்திருந்தது. யூதாவிலோ நாட்டின் ஒற்றுமையும், நீதியும் குலைந்து, வலியோர் எளியோரை ஒடுக்கிக்கொண்டிருந்தனர். இத்தகைய சூழலில்தான் அபக்கூக்கு இறைவாக்குப் பணியில் ஈடுபடுகிறார். கயவர்களை ஏன் இறைவன் தண்டிக்காமல் விட்டுவைக்கிறார்? பொல்லாதவர்கள் நேர்மையாளர்களை விழுங்கும்போது இறைவன் ஏன் மௌனமாய் இருக்கிறார்? என்னும் கேள்விகளை அபக்கூக்கு எழுப்பி, அவற்றுக்கு விடை காண முயல்கிறார். பன்னெடுங்காலமாக மானிட இனத்தைத் தட்டி எழுப்பும் கேள்வி அல்லவா இது! ஏன் இந்த உலகில் தீமை? ஏன் தீயவர்கள் தழைக்கிறார்கள், நல்லவர்கள் துன்புறுகிறார்கள்? இக்கேள்விக்கு விடை காண முயலும் இறைவாக்கினருக்கு ஆண்டவர் தரும் பதில்: நம்பிக்கையோடிருங்கள். எனவேதான், மிகப் பிரபலமான இந்த வார்த்தைகளோடு இன்றைய முதல் வாசகம் நிறைவுக்கு வருகிறது: “நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்”.

மன்றாட்டு:

நம்பிக்கையின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நேர்மையுடையவர்கள் தம் நம்பிக்கையினால் வாழ்வடையவர் என்னும் உம் வார்த்தைகளுக்காக நன்றி. என்ன நேர்ந்தாலும் நன்றி கூறவும், உமது திருவுளத்தின்படி வாழவும் எங்களுக்கு ஆழமான நம்பிக்கையைத் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.