யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - A
2020-08-02

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 1-3,திருப்பாடல் 145: 8-9. 15-16. 17-18,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 35, 37-39 ,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 13-21)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்: கேளுங்கள்: அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள்.

விருந்துக்குரியவர்களே, பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். ஆண்டவர் தரும் விருந்தில் பங்கேற்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. தம்மை பின்தொடர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, இயேசு உணவளித்த நிகழ்வை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோருக்கு எந்த நன்மையும் குறைவுபடாது என்பதை உணர அழைக்கப்படுகிறோம். காண்கிறோம். இயேசு பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவு கொண்டார் என்று வாசிக்கிறோம். சீடர்கள் அளித்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு, இயேசு ஆயிரக்கணக்கானோரின் பசியைப் போக்குகிறார். நம் தேவைகளை அறிந்திருக்கிற ஆண்டவரை எப்பொழுதும் விடாது பின்தொடர வரம் வேண்டி, இத்திருப் பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

"தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்;
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 1-3

இறைவன் கூறுவதாவது: "தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள். வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்; நல்லுணவை உண்ணுங்கள்; கொழுத்ததை உண்டு மகிழுங்கள். எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன்."

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்
திருப்பாடல் 145: 8-9. 15-16. 17-18

8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

15 எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். 16 நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். பல்லவி

17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி

இரண்டாம் வாசகம்

எந்தப் படைப்புப் பொருளும் கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 35, 37-39

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம். ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்போ நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 13-21

அக்காலத்தில் இயேசு புறப்பட்டுப் படகிலேறிப் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவு கொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார். மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, ``இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்'' என்றனர். இயேசு அவர்களிடம், ``அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்'' என்றார். ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, ``எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை'' என்றார்கள். அவர், ``அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்'' என்றார். மக்களைப் புல் தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்; அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக உணவு உண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உணவளிப்பவரே இறைவா,

விண்ணக அப்பமாகிய நற்கருணையை பகிர்ந்தளிக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மக்களின் ஆன்மீகப் பசியைப் போக்குபவர்களாக திகழ வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

வாழ்வளிப்பவரே இறைவா,

பல்வேறு கவலைகளில் மூழ்கியிருக்கும் உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், மக்களின் நல்வாழ்வுக்கு தேவையானவற்றைச் செய்வதிலும் ஆர்வங்காட்ட தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

உமது வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும் அனைவரையும் வாழ்வித்துக் கொண்டிருக்கும் தந்தையே இறைவா!

எமது இளைஞர்களை உமது வார்த்தையால் ஒளிர்வித்து, அவர்கள் நன்மையானதும், பயனளிப்பதுமான வாழ்வைக் கண்டடைந்து, உமக்குகந்தவர்களாக வாழ அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம் வாழ்க்கையின் கலங்கரைத் தீபமே இறைவா!

புதிய விடியலை நோக்கிக் காத்திருக்கும் உலக மக்களை, தொற்றுநோயிலிருந்து காத்து, அவர்களின் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைந்து உம்மைத் தொழுதிட, உம் இறைவேண்டல் இல்லத்திற்கு மீண்டும் வரவும், உம் பணியாற்றிடும் திருஅவைப் பணியாளர்கள் நற்சுகத்துடன் பாதுகாத்து எம்மை வழிநடத்திட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குடும்பங்களின் தலைவரே எம் இறைவா!

இன்றைய நவீன வாழ்விலொன்றுக் கூடிச் செபிக்கவும், உரையாடவும், உறவுகளை மேம்படுத்தவும், மதிக்கவும் நாங்கள் மறந்திருக்கின்றோம். நீர் கொடுத்த இந்த உறவுகள் உண்மையான, மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை வழங்கிடவும், குடும்பங்களில் கூடிச் செபிக்கவும், இறை அழைத்தலை அதிகமாக ஊக்குவிக்கவும், எம் குடும்பங்கள் திருக்குடும்பங்களாக மாறிடவும், தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து அனைவரையும் காத்திடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்..

பேரின்பப் பரம்பொருளே! எம் இறைவா!

இவ்வுலகம் உம் இறைவெளிப்பாடு என்பதனை நாங்கள் அனைவரும் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவிப் புரியவும், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழவும், அன்பு, மகிழ்ச்சி. பரிவு இவை இன்று மனிதசமுதாயத்தில் நலிவடையாமல் பிறருக்கு உதவிபுரியவும் எடுத்துக்காட்டான வாழ்வு இத்தொற்று நோய் காலத்தில் வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

நலம் அளிக்கும் வல்லவரே! எம் இறைவா!

இந்தத் தொற்றுநோய்க்கு எதிராய் தன்னலம் கருதாமல் போராடுபவர்கள் அனைவரையும் காத்தருளும். அன்பும், பொறுமையும், கருசனையும் அளித்து உயிர்களைக் காத்திடும் பணியைச் செவ்வனே செய்திட அவர்களுக்குப் பக்கபலமாய் இருக்கவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்!

பாலை நிலத்தில் திரளாகக் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் என்று ஆலோசனை கூறிய சீடருக்கு இயேசு தந்த இந்தப் பதில் மொழி அவர்களுக்கு நிச்சயம் வியப்பைத் தந்தது. எனவேதான், எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை என்று பதில் கொடுத்தனர்.

நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்னும் இயேசுவின் கட்டளை சீடருக்கும், நமக்கும் இரண்டு பாடங்களைக் கற்றுத் தருகிறது;

பரிவின் வெளிப்பாடாக பகிர்வு அமைய வேண்டும். இயேசு திரளாகக் கூடியிருந்த மக்கள்மீது பரிவு கொண்டார். நோயுற்றோரைக் குணமாக்கினார், ஆறுதல் நிறைந்த வார்த்தைகளைப் போதித்தார். அத்துடன் அவரது பரிவு நிறைவுபெற்றுவிடவில்லை. அவர்களின் வயிற்றுப் பசியையும் போக்கவேண்டும் என்று விரும்பினார். இந்த மனநிலையைத் தம் சீடருக்கும் கற்றுக்கொடுக்கிறார். உங்கள் பரிவு சொற்களில் மட்டுமல்ல, செயலிலும் இருக்கட்டும். குறிப்பாக, உணவு, உடை, உறைவிடம் இன்றித் தவிப்போருக்கு உதவுங்கள். அதுவும் உங்கள் பணியே என்று அறிவுறுத்துகிறார்.

உங்களிடம் என்ன இல்லை என்று பார்ப்பதைவிட என்ன இருக்கிறது என்று பார்க்கப் பணிக்கின்றார் இயேசு. என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு அற்புதங்களைச் செய்ய வல்லவர் இறைவன் என்று கற்றுத் தருகிறார். எனவே, என்ன செய்யலாம் என்று மலைக்காமல், என்ன இருக்கிறதோ அதை இறைவன் கையில் தந்தால், அவர் வியப்புக்குரிய வகையில் அதைப் பலுகச் செய்வார்.

மன்றாட்டு:

அன்பின்; திருவுருவே இயேசுவே, நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்னும் உமது கட்டளைக்காக இன்று நன்றி செலுத்துகிறோம். எங்களோடு வாழும் இல்லாதவர்களுக்கு உணவும், மாண்பும் வழங்கும் பொறுப்பை நீர் எங்களுக்கே தந்திருக்கிறீர். இந்தப் பொறுப்பை உணர்ந்து எங்களிடம் என்ன உள்ளதோ - செல்வம், ஆற்றல்கள், திறமைகள், நேரம் - அதை உமது பாதங்களில் ஒப்புக்கொடுக்கும் தாராள மனத்தை எங்களுக்குத் தாரும். அவ்வாறு நாங்கள் செய்தால், நீர்; அற்புதங்களைச் செய்ய வல்லவர் என்ற விசுவாசத்தையும் எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.