யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2020-07-12

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11,திருப்பாடல் 65: 9-10. 11-12. 13,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 18-23,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-23)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்: உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன.

வார்த்தைக்குரியவர்களே, பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரை யும் அன்புடன் அழைக்கிறோம். இறைவனின் வார்த்தையை நம் உள்ளத்தில் ஏற்று பலன் தருபவர்களாய் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது உள் ளத்தை கடவுளுக்கு உகந்த நல்ல நிலமாக மாற்ற நாம் அழைக்கப்படுகிறோம். நம் கண்கள் பேறுபெற்றவை; ஏனெனில் நற்கருணையில் வாழும் ஆண்டவரை அவை காண்கின்றன. நம் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் விவிலியத்தில் உள்ள ஆண்டவரின் வார்த்தைகளை அவை கேட்கின்றன. அதேநேரத்தில், நம்மை ஆண்டவருக்கு ஏற்ற பலன் தரவிடாமல் தடுக்கும் உலகு சார்ந்த கவர்ச்சிகள் மற்றும் கவலைகளில் இருந்து விலகி வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

மழை நிலத்தை நனைத்து, விளையச் செய்கிறது.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11

ஆண்டவர் கூறுவது: மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ விளைச்சலைக் கொடுத்தன.
திருப்பாடல் 65: 9-10. 11-12. 13

மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது. பல்லவி

9ன நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். 10 அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். பல்லவி

11 ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. 12 பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. பல்லவி

13 புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன; அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை! பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 18-23

சகோதரர் சகோதரிகளே, இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது. ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை. அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது. இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக்கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையே விதை, அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாரும் என்றென்றும் நிலைத்திருப்பார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-23

அக்காலத்தில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: ``விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்'' என்றார். சீடர்கள் அவர் அருகே வந்து, ``ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?'' என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: ``விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: `நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.' உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை. எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்வான். பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வார்த்தையை அனுப்புபவரே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது உண்மையின் வார்த்தையை உலகுக்கு எடுத்துரைத்து, உமக்கு உகந்த பிள்ளைகளாக மக்களைத் தயார் செய்ய உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

வார்த்தையை விதைப்பவரே இறைவா,

உலகெங்கும் பரவியுள்ள தீமை மற்றும் அழிவின் நடுவே வாழும் மக்கள் அனைவரின் உள்ளத்திலும், உமது நன்மையின் வார்த்தையை விதைத்து உமக்கேற்ற பலன் தருபவர் களாய் உருவாக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மருத்துவருக்கெல்லாம் மருத்துவராம் எம் இறைவா!

கொரோனா தொற்று நோய்க்கு எதிராய் போராடும் இன்றைய மருத்துவ உலகம் அதில் வெற்றிப் பெறவும், தன்னலம் பாராமல் பணிச் செய்யும் அனைவரையும் நலமுடன் பாதுகாத்திடவும், நோயாளிகள் விரைவில் நலமடைந்துத் தம் இல்லங்களில் இயல்பு வாழ்க்கைத் தொடங்கிடவும் தேவையான அருள் வளங்களைப் பொழ்ந்து உம் வல்லக்கரத்தால் காத்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

வார்த்தையை விளைவிப்பவரே இறைவா,

எம் நாட்டில் உமது வார்த்தை விதிக்கப்படும் இடங்கள் பாறைகளாகவும், முட்புதர்க ளாகவும் இல்லாமல், நல்ல நிலங்களாக பலன் தரவும், கிறிஸ்துவின் நற்செய்தி விரைந்து பரவவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கும்! தந்தையே!

இன்று உம்மால் படைக்கப்பட்ட இவ்வுலகை பொறுப்புணர்வற்ற விதத்திலே மாற்றியமைத்து அழிவுக்குட்படுத்தும் அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் மனிதர்கள் மாற்றம் பெற்று வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டும் அன்புத் தந்தையே இறைவா!

எமது இளைஞர்களை ஆசீர்வதித்து அவர்களை உமது அருள் நலன்களால் நிரப்பி, அவர்கள் மகிழ்வோடும் மன நிறைவோடும் உமக்குகந்த பிள்ளைகளைக வாழ அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மருத்துவருக்கெல்லாம் மருத்துவராம் எம் இறைவா!

விரைவில் இந்த தொற்று நோய் முழுமையாக நீங்கிட வேண்டிய மருத்துவத்தை எமக்கு தந்து, அனைவரும் விரைவில் குணமடையவும், மரணம் அடைந்தவர்களின் குடும்பங்கள் ஆறுதலடையவும், நோயிக்கு எதிராகப் போராடும் மருத்துவ உலகம் அதில் வெற்றிபெறவும் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

"சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன" (மத்தேயு 13:8)

விதைப்பவர் உவமை என்னும் கதைக்கு விளக்கம் இயேசுவே அளித்தார் என மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தியாளர்கள் குறித்துள்ளனர். அந்த விளக்கத்தின்படி நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் "இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வோருக்கு" ஒப்பாகும் (காண்க; மத் 13:23). இறைவார்த்தையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதைக் கேட்டால் மட்டும் போதாது. நமது உள்ளம் பண்படுத்தப்பட்ட நிலத்தைப்போலப் பக்குவப்பட்டிருக்க வேண்டும். அப்போது அந்த நன்னிலத்தில் விழுகின்ற இறைவார்த்தை என்னும் விதை நன்றாக வேரூயஅp;ன்றி, தளிர்த்து, கதிர்விட்டுப் பன்மடங்காகப் பலன் தரும். இறைவார்த்தை என்னும் விதை நம்மில் வேரூயஅp;ன்றி வளர்ந்தால் என்ன பலன் தோன்றும்? இறைவார்த்தை மனிதராக உருவெடுத்தார் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. அந்த இறைவார்த்தை கடவுளோடு இருந்தார் எனவும் கடவுளாகவும் இருந்தார் எனவும் யோவான் நற்செய்தி தெளிவுபடுத்துகிறது (யோவான் 1:1-14). எனவே, நம்மில் இறைவார்த்தை பலன் தரவேண்டும் என்றால் நாம் இறைவார்த்தையின் உச்ச வெளிப்பாடான இயேசுவைப் போல வாழ வேண்டும். அவருடைய மதிப்பீடுகள் நம் மதிப்பீடுகளாக வேண்டும். அவர்தம் ஆவியால் நாம் இயக்கப்பட வேண்டும். அப்போது நம் இதயத்தில் தூவப்பட்ட கடவுளின் வார்த்தை என்னும் விதை நற்பயன் நல்கும்.

மன்றாட்டு:

இறைவா, உம் வார்த்தை எங்கள் உள்ளத்தில் பதிந்து, வேர்விட்டு எங்கள் வாழ்வில் நற்கனிகளைத் தாராளமாக ஈந்திட அருள்தாரும்.