யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2020-06-28

(இன்றைய வாசகங்கள்: 2அரசர் நூலிலிருந்து வாசகம்: 4:8-11, 14-16a,திருப்பாடல்: 89: 1-2, 15-16, 17-18 ,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்: 6:3-4,8-11,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 10:37-42)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

“இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்”.

பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறைக் கொண்டாட திருஅவை அழைக்கும் இவ்வேளையில் ஆலயத்தில் ஒருமனதோராய் குழுமியிருக்கும் இறைமக்களாகிய உங்களை அன்புடன் அழைக்கிறோம். இயேசுவின் போதனைகளை நாம் கேட்கிறபோது, நம்மால் அவரைப் பின்தொடரமுடியுமா? அவருடைய போதனையில் நிலைத்து நிற்க முடியுமா? என்கிற சிந்தனைகள் நமது உள்ளத்தில் ஓட ஆரம்பிக்கிறது. நிச்சயம் இயேசுவின் போதனைகளை நமது வாழ்வில் ஏற்று, வாழ முயற்சிப்பது சவாலான ஒன்றுதான். ஆனாலும், நாம் அனைவரும் அப்படிப்பட்ட வாழ்வை வாழ வேண்டும், கடவுளுக்கு ஏற்புடையதாக நமது வாழ்வு அமைய வேண்டும் என்று இன்றைய நற்செய்தி நமக்கு கற்றுக்கொடுக்கிறது. கடவுளின் வார்த்தை நமக்குத் தரப்படுகிறபோது, அதை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக வாழ்வோம். அது எவரிடமிருந்து வந்தாலும், கடவுள் நமக்கு உணர்த்த விரும்புவதாக அதனை ஏற்றுக்கொள்வோம். தொடரும் இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

ஆண்டவரின் புனிதர் வரும்பொழுதெல்லாம், இங்கே தங்கிச் செல்லட்டும்.
2அரசர் நூலிலிருந்து வாசகம்: 4:8-11, 14-16a

ஒரு நாள் எலிசா சூனேமுக்குச் சென்றார். அங்கேயிருந்த பணக்காரப் பெண் ஒருவர் அவரை உணவருந்தும்படி வற்புறுத்தினார். அதன்பின் அவர் அவ்வழியே சென்ற போதெல்லாம் அங்கே உணவருந்திவிட்டுச் செல்வார். அவர் தம் கணவனை நோக்கி, நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் என்று நான் கருதுகிறேன். ஆதலால் வீட்டு மேல் தளத்தில் சிறு அறை ஒன்றை அவருக்காகக் கட்டி, அதில் படுக்கை, மேசை, நாற்காலி, விளக்கு முதலியன தயார்படுத்தி வைப்போம். அவர் வரும் பொழுதெல்லாம் அங்கே தங்கிச் செல்லட்டும் என்றார். ஒரு நாள் எலிசா அங்கு வந்து மாடி அறையில் தங்கி ஓய்வுஎடுத்துக் கொண்டிருந்தார். மீண்டும் எலிசா, வேறு எந்த விதத்தில் அவருக்கு உதவி செய்யலாம்? என்று கேட்டார். அதற்குக் கேகசி, அவருக்குக் குறையேதும் இல்லை. ஆனால், அவருக்குப் பிள்ளையில்லை. அவருடைய கணவருக்கும் வயதாகி விட்டது என்றான். எலிசா, அவளை இங்கு வரச் சொல் என்றார். அவ்வாறே அவன் அவரை அழைக்க, அவரும் கதவருகில் வந்து நின்றார். எலிசா அவரை நோக்கி, அடுத்த ஆண்டு இதே பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான் என்றார். அதற்கு அவர், என் தலைவரே, கடவுளின் அடியவரே! உம் அடியவளை ஏமாற்ற வேண்டாம் என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
திருப்பாடல்: 89: 1-2, 15-16, 17-18

ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. -பல்லவி

விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள். அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். -பல்லவி

ஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை; உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது. நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது; நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர். -பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்: 6:3-4,8-11

அன்புக்குரியவரே, திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்: இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம். அவர் இறந்தார்: பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்: அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார். அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்: கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்: உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 10:37-42

அக்காலத்தில் இயேசு கூறியதாவது “என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர். உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார். இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

மகத்துவமிக்க இறைவா!

இன்றைய உலகில் உமது திரு அவை எதிர்க்கொள்ளும் எல்லா எதிர்ப்புகளையும், சவால்களையும் சந்திக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இயேசுவின் விழுமியங்களையும், இறைசார்பு தன்மைகளையும் பின்பற்றி வாழ்ந்திடத் தேவையான மனவலிமையும், துன்பங்களை வெல்லும் உறுதியும் பெற்று வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் ஒளியும் மீட்புமான இறைவா!

திகிலான இவ்வுலகில் தினமும் அஞ்சாதீர்கள் என்று எங்களைத் திடப்படுத்தி, எங்கள் குடும்பங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் அருள்கொடைகளால் நிலைத்து நின்று சவால்களை வென்று வெற்றி வீரர்களாய், இயேசுவின் அன்புச் சீடர்களாய் இவ்வுலகில் வலம்வர எமக்கு உம் ஆற்றலைத் தர வேண்டும்மென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

மருத்துவருக்கெல்லாம் மருத்துவராம் எம் இறைவா!

கொரோனா தொற்று நோய்க்கு எதிராய் போராடும் இன்றைய மருத்துவ உலகம் அதில் வெற்றிப் பெறவும், தன்னலம் பாராமல் பணிச் செய்யும் அனைவரையும் நலமுடன் பாதுகாத்திடவும், நோயாளிகள் விரைவில் நலமடைந்துத் தம் இல்லங்களில் இயல்பு வாழ்க்கைத் தொடங்கிடவும் தேவையான அருள் வளங்களைப் பொழ்ந்து உம் வல்லக்கரத்தால் காத்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

“வாழும் தந்தை என்னை அனுப்பினார் நானும் அவரால் வாழ்கிறேன் அதுபோல் என்னை உன்போரும் என்னால் வாழ்வர்” என்று மொழிந்தவரே!

எம்பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர் இளையோர் பல்வேறு குழுப்பொறுப்பாளர்கள்; அனைவரும் உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள, அனுப்பப்பட்டவர்கள் என்பதனை உணர்ந்தவர்களாக படிப்பிலும், நல்லொழுக்கத்திலும், விசுவாசத்திலும் உதவி புரிபவர்களாகவும் தங்கள் பணிகளிலே பொறுப்பு மிக்கவர்களாகவும் வாழ்ந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நலம் அளிப்பவராம் இறைவா,

பணம், பதவி, புகழ் போன்ற ஆசைகளில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும், தங் களிடம் மிகுதியாக இருப்பதைப் பிறரோடு பகிர்ந்து வாழும் நல்ல உள்ளத்தை அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

கொடைகளின் ஊற்றான இறைவா!

சிறார் முதல் எம் இளையோர் வரையுள்ள அனைவரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்களுக்கு தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பையும், நல்ல ஞானத்தையும், ஞாபக சக்தியையும், இறையச்சத்தையும் அளித்து, சிறந்த படைப்பாக இவ்வுலகில் வலம் வர உம் அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மருத்துவருக்கெல்லாம் மருத்துவராம் எம் இறைவா!

விரைவில் இந்த தொற்று நோய் முழுமையாக நீங்கிட வேண்டிய மருத்துவத்தை எமக்கு தந்து, அனைவரும் விரைவில் குணமடையவும், மரணம் அடைந்தவர்களின் குடும்பங்கள் ஆறுதலடையவும், நோயிக்கு எதிராகப் போராடும் மருத்துவ உலகம் அதில் வெற்றிபெறவும் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

"உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்"(மத்தேயு 10:40)

இயேசுவின் சீடருக்கும் இயேசுவை நம் மீட்பராக அனுப்பிய கடவுளுக்கும் இடையே பாலமாக அமைபவர் இயேசுவே. கடவுள் இயேசுவை அனுப்பியதும் இயேசு சீடரை அனுப்பியதும் நெருங்கிய தொடர்புடைய நிகழ்வுகள். செய்தியைக் கொண்டுவருகின்ற தூதரை ஏற்போர் தூது அனுப்பியவரை ஏற்கிறார் என்பது தெளிவு. எனவே, இயேசுவின் தூதர் இயேசுவின் சாயலாக, இயேசுவை மக்களுக்கு அறிவிப்பவராக மாற வேண்டும். அப்போது, கடவுள் - இயேசு - சீடர் - உலக மக்கள் ஆகிய நால்வருக்கும் இடையே நிலவுகின்ற, நிலவ வேண்டிய ஆழமான உறவு கண்கூடும் வகையில் வெளிப்படும்.

மன்றாட்டு:

இறைவா, நீர் அனுப்பிய உம் மகன் இயேசுவை நாங்கள் ஏற்கவும், அவர் அறிவித்த செய்தியைத் தொடர்ந்து மக்களுக்கு அறிவிக்கவும் எங்களுக்கு அருள்தாரும்.