யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 12வது வாரம் வெள்ளிக்கிழமை
2020-06-26




முதல் வாசகம்

2 அரசர்கள் 25:1-12
அவனது படை முழுவதும் அவனை விட்டுச் சிதறி ஓடிற்று

செதேக்கியாவினது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு பத்தாம் மாதம் பத்தாம் நாளில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் தன் எல்லாப் படைகளோடு எருசலேமுக்கு எதிராக வந்து, பாளையம் இறங்கி அதைச் சுற்றிலும் முற்றுகைத் தளம் எழுப்பினான். இவ்வாறு, அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டுவரை, நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது. அவ்வாண்டு நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் நகரில் பஞ்சம் கடுமை ஆயிற்று. நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை. அப்பொழுது, நகர் மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது. போர்வீரர் அனைவரும் அரசர் பூங்காவின் இரு மதில்களுக்கு இடையே அமைந்த வாயில் வழியாக அராபாவை நோக்கி இரவில் ஓடினர். கல்தேயரோ நகரைச் சுற்றி முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். கல்தேயப் படையினர் அரசனைப் பின் தொடர்ந்து சென்று, எரிகோ சமவெளியில் அவனைப் பிடித்தனர்; அவனது படை முழுவதும் அவனை விட்டுச் சிதறி ஓடிற்று. அவர்கள் அரசனைப் பிடித்து, இரிபலாவில் இருந்து பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றார்கள். மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான். பாபிலோனிய மன்னன் செதேக்கியாவின் புதல்வர்களை அவனது கண்முன்னே கொன்றான். மேலும், அவனுடைய கண்களைப் பிடுங்கியபின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச் சென்றான்.பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற பத்தொன்பதாம் ஆண்டு ஐந்தாம் மாதம் ஏழாம் நாளன்று, அவன் பணியாளனும், மெய்க்காப்பாளர் தலைவனுமாகிய நெபுசரதான் எருசலேமிற்குள் நுழைந்தான். அவன் ஆண்டவரின் இல்லத்தையும், அரசனது அரண்மனையையும், எருசலேமில் இருந்த எல்லா வீடுகளையும் தீக்கிரையாக்கினான்; பெரிய வீடுகளை எல்லாம் தீயிட்டுப் பொசுக்கினான். மெய்க்காப்பாளர் தலைவனுடன் இருந்த கல்தேயரின் படையினர் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களைத் தகர்த்தெறிந்தனர். மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் நகரில் எஞ்சியிருந்த மக்களையும், பாபிலோனிய மன்னனிடம் சரணடைந்திருந்தவர்களையும், விடப்பட்டிருந்த கைவினைஞரோடு சேர்ந்து நாடுகடத்தினான். மெய்க்காப்பாளர் தலைவன் திராட்சைத் தோட்டங்களையும், வயல்களையும் கவனிக்கும் பொருட்டு நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவைத்தான்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உன்னை நான் நினையாவிடில்,என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!
திருப்பாடல்கள் 137:1-6

பாபிலோனின் ஆறுகளருகேஅமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம். அங்கிருந்த அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்.

ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். ‛சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்’ என்றனர்.

ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்? எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக!

உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!


நற்செய்திக்கு முன் வசனம்

"இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8;1-4

1 இயேசு மலையிலிருந்து இறங்கிய பின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். 2 அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, "ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்றார். 3 இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு, "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது. 4 இயேசு அவரிடம், "இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையை;ச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்' என்றார்'' (மத்தேயு 7:24)

இயேசு வழங்கிய ''மலைப் பொழிவின்'' இறுதிச் சொற்கள் இருவிதமான வீடுகள் பற்றி விவரிக்கின்றன. பாறைமேல் கட்டப்பட்ட வீடு நிலைத்துநிற்கும்; மணல்மீது கட்டப்பட்ட வீடு நிலைத்துநிற்காது. இந்த இரு வகை வீடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இயேசு வேறு உருவகங்கள் வழியாகவும் எடுத்துரைத்தார். இடுக்கமான வாயில், அகன்ற வாயில் (மத் 7:12-14); நல்ல மரம், கெட்ட மரம் (மத் 7:17); ஆண்டவரே ஆண்டவரே என்போர், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவோர் (மத் 7:21) என்னும் வெவ்வேறு உருவகங்களும் குறித்து நிற்பது ஒரே அடிப்படை உண்மைதான். அதாவது, இயேசுவைப் பின்செல்ல விரும்புவோர் உறுதியான உள்ளத்தோடு, முழுமையான ஈடுபாட்டோடு அவரைப் பின்செல்ல வேண்டும். மேலெழுந்த வாரியான போக்கு இயேசுவின் சீடருக்கு ஒவ்வாத ஒன்று. பாறை என்னும் உருவகம் பழைய ஏற்பாட்டில் கடவுளுக்கு உருவகமாக வருகிறது (காண்க: இச 32:4; 18:31; திபா 18:2; 28:1; எசா 17:10). மலைப் பொழிவில் ''பாறைமீது வீடுகட்டுவது'' இயேசு என்னும் உறுதியான அடித்தளத்தில் நம் வாழ்க்கை ஊன்றியிருப்பதைக் குறிக்கிறது. பின்னர் இயேசு ''பாறை'' என பேதுருவைக் குறிப்பிடுவார் (காண்க: மத் 16:18).

நம் வாழ்க்கை இயேசு என்னும் பாறையில் கட்டப்பட வேண்டும் என்றால் பொருள் என்ன? முதன்முதலில், இயேசு நம் வாழ்க்கை முறையை நமக்கு நிர்ணயித்துத் தருகிறார் என்பதை நாம் நம்பிக்கையோடு ஏற்க வேண்டும். அவர் தம் சொற்களாலும் செயல்களாலும் நமக்குக் கற்பித்ததை நாம் உளமார ஏற்று, முழுமையாகக் கடைப்பிடிக்கும்போது நம் வாழ்க்கை அவரில் வேரூயஅp;ன்றியதாக அமையும். இயேசுவின் போதனையோடு அவருடைய உடனிருப்பும் நமக்கு உறுதியான அடித்தளமாகிறது. துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த இயேசு வரலாற்றில் வாழ்ந்த பிற மனிதர்களைப் போல வெறும் ''நினைவு'' என மங்கலாக மட்டுமே நமக்குத் தெரிவதில்லை. மாறாக, இயேசு நம்மோடு எந்நாளும் இருப்பதாக வாக்களித்துள்ளார். அவருடைய ஆவியின் துணை நமக்கு உள்ளது. எனவே, நம் வாழ்க்கையானது இயேசுவின் மன நிலையைப் பிரதிபலிக்கின்ற போது பாறைமேல் கட்டப்பட்ட வீடு போல நிலைத்து நிற்கும் பண்பு கொண்டிருக்கும். ஆக, இயேசுவின் போதனை, செயல்பாடு, உடனிருப்பு ஆகியவை நம் வாழ்க்கைக்கு அடித்தளம் ஆகும்போது நாம் உறுதியான உள்ளத்தோடு கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவோம். ''ஆண்டவரே, ஆண்டவரே'' என்று வெளிப்படுகின்ற வெற்றுச் சொற்களாக இல்லாமல், கடவுளின் திருவுளத்தை நடைமுறையில் செயல்படுத்துகின்ற விதத்தில் நமது வாழ்க்கை அமையும். இந்த உறுதியான அடித்தளம் இல்லாதபோது நம் வாழ்க்கை மணல்மீது கட்டப்பட்ட வீடுபோல எளிதில் விழுந்துவிடும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசு என்னும் அடித்தளத்தில் கட்டப்பட்ட வீடாக எங்கள் வாழ்க்கை அமைந்திட அருள்தாரும்.