யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 12வது வாரம் வியாழக்கிழமை
2020-06-25




முதல் வாசகம்

யோயாக்கினையும் வலிமை வாய்ந்த அனைவரையும் சிறைப்படுத்திப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றான்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 8-17

யோயாக்கின் அரசனான போது அவனுக்கு வயது பதினெட்டு. எருசலேமில் மூன்று மாதமே அவன் அரசாண்டான். எருசலேமைச் சார்ந்த எல்நாத்தானின் மகள் நெகுஸ்தா என்பவளே அவனுடைய தாய். யோயாக்கின் தன் தந்தை செய்த அனைத்தின்படியே ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். அக்காலத்தில் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் படைவீரர் எருசலேமின் மீது படையெடுத்து வந்து நகரை முற்றுகையிட்டனர். அப்பொழுது பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரும் வந்து நகரை முற்றுகையிட்டிருந்த வீரர்களோடு சேர்ந்து கொண்டான். எனவே யூதாவின் அரசன் யோயாக்கினும் அவன் தாயும் அவன் அலுவலர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் பாபிலோன் மன்னனிடம் சரணடைந்தனர். அவனைப் பாபிலோன் மன்னன் தான் ஆட்சியேற்ற எட்டாம் ஆண்டில் சிறைப்படுத்தினான். பின்பு அவன் ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனையிலும் இருந்த செல்வங்களை எல்லாம் எடுத்துச் சென்றான். ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, ஆண்டவரின் இல்லத்தில் இஸ்ரயேலின் அரசர் சாலமோன் செய்து வைத்திருந்த எல்லாப் பொன்கலன்களையும் துண்டு துண்டாக்கினான். மேலும் அவன் எருசலேம் முழுவதையும், தலைவர்கள் அனைவரையும், ஆற்றல் வாய்ந்த பதினாயிரம் படை வீரர்களையும் சிற்பக் கலைஞர்களையும், கொல்லர்களையும் நாடு கடத்தினான். நாட்டில் ஏழை மக்களைத் தவிர எவரையும் விட்டுவைக்கவில்லை. மேலும் அவன் யோயாக்கினையும், அரசனின் தாயையும், மனைவியரையும், அவனுடைய அதிகாரிகளையும், நாட்டின் தலைவர்களையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தினான். மேலும் வலிமை வாய்ந்த ஏழாயிரம் பேர்களைக் கொண்ட முழுப்படையையும், போர்த் திறனும் உடல் ஆற்றலும் கொண்ட ஆயிரம் தச்சர்களையும், கொத்தர்களையும் அவன் சிறைப்படுத்திப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றான். யோயாக்கினுக்குப் பதிலாக அவனுடைய சிறிய தந்தை மத்தனியாவை அரசனாக்கி, அவனது பெயரைச் �செதேக்கியா� என்று மாற்றினான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களை விடுவியும் ஆண்டவரே.
திருப்பாடல் 79: 1-2. 3-5. 8-9

1 கடவுளே, வேற்று நாட்டினர் உமது உரிமைச் சொத்தினுள் புகுந்துள்ளனர்; உமது திருக்கோவிலைத் தீட்டுப்படுத்தியுள்ளனர்; எருசலேமைப் பாழடையச் செய்தனர். 2 உம் ஊழியரின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாகவும் உம் பற்றுமிகு அடியாரின் உடல்களைக் காட்டு விலங்குகளுக்கு உணவாகவும் அவர்கள் அளித்துள்ளார்கள். பல்லவி

3 அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென எருசலேமைச் சுற்றிலும் அள்ளி இறைத்தார்கள்; அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை. 4 எங்களை அடுத்து வாழ்வோரின் பழிச்சொல்லுக்கு இலக்கானோம்; எங்களைச் சூழ்ந்துள்ளோரின் நகைப்புக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிவிட்டோம். 5 ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம் நீர் சினம் கொண்டிருப்பீர்? என்றென்றுமா? உமது வெஞ்சினம் நெருப்பாக எரியுமோ? பல்லவி

8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். 9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-29

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?' என்பர். அதற்கு நான் அவர்களிடம், `உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்' என வெளிப்படையாக அறிவிப்பேன். ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.'' இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்' என்றார்'' (மத்தேயு 7:24)

இயேசு வழங்கிய ''மலைப் பொழிவின்'' இறுதிச் சொற்கள் இருவிதமான வீடுகள் பற்றி விவரிக்கின்றன. பாறைமேல் கட்டப்பட்ட வீடு நிலைத்துநிற்கும்; மணல்மீது கட்டப்பட்ட வீடு நிலைத்துநிற்காது. இந்த இரு வகை வீடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இயேசு வேறு உருவகங்கள் வழியாகவும் எடுத்துரைத்தார். இடுக்கமான வாயில், அகன்ற வாயில் (மத் 7:12-14); நல்ல மரம், கெட்ட மரம் (மத் 7:17); ஆண்டவரே ஆண்டவரே என்போர், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவோர் (மத் 7:21) என்னும் வெவ்வேறு உருவகங்களும் குறித்து நிற்பது ஒரே அடிப்படை உண்மைதான். அதாவது, இயேசுவைப் பின்செல்ல விரும்புவோர் உறுதியான உள்ளத்தோடு, முழுமையான ஈடுபாட்டோடு அவரைப் பின்செல்ல வேண்டும். மேலெழுந்த வாரியான போக்கு இயேசுவின் சீடருக்கு ஒவ்வாத ஒன்று. பாறை என்னும் உருவகம் பழைய ஏற்பாட்டில் கடவுளுக்கு உருவகமாக வருகிறது (காண்க: இச 32:4; 18:31; திபா 18:2; 28:1; எசா 17:10). மலைப் பொழிவில் ''பாறைமீது வீடுகட்டுவது'' இயேசு என்னும் உறுதியான அடித்தளத்தில் நம் வாழ்க்கை ஊன்றியிருப்பதைக் குறிக்கிறது. பின்னர் இயேசு ''பாறை'' என பேதுருவைக் குறிப்பிடுவார் (காண்க: மத் 16:18).

நம் வாழ்க்கை இயேசு என்னும் பாறையில் கட்டப்பட வேண்டும் என்றால் பொருள் என்ன? முதன்முதலில், இயேசு நம் வாழ்க்கை முறையை நமக்கு நிர்ணயித்துத் தருகிறார் என்பதை நாம் நம்பிக்கையோடு ஏற்க வேண்டும். அவர் தம் சொற்களாலும் செயல்களாலும் நமக்குக் கற்பித்ததை நாம் உளமார ஏற்று, முழுமையாகக் கடைப்பிடிக்கும்போது நம் வாழ்க்கை அவரில் வேரூயஅp;ன்றியதாக அமையும். இயேசுவின் போதனையோடு அவருடைய உடனிருப்பும் நமக்கு உறுதியான அடித்தளமாகிறது. துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த இயேசு வரலாற்றில் வாழ்ந்த பிற மனிதர்களைப் போல வெறும் ''நினைவு'' என மங்கலாக மட்டுமே நமக்குத் தெரிவதில்லை. மாறாக, இயேசு நம்மோடு எந்நாளும் இருப்பதாக வாக்களித்துள்ளார். அவருடைய ஆவியின் துணை நமக்கு உள்ளது. எனவே, நம் வாழ்க்கையானது இயேசுவின் மன நிலையைப் பிரதிபலிக்கின்ற போது பாறைமேல் கட்டப்பட்ட வீடு போல நிலைத்து நிற்கும் பண்பு கொண்டிருக்கும். ஆக, இயேசுவின் போதனை, செயல்பாடு, உடனிருப்பு ஆகியவை நம் வாழ்க்கைக்கு அடித்தளம் ஆகும்போது நாம் உறுதியான உள்ளத்தோடு கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவோம். ''ஆண்டவரே, ஆண்டவரே'' என்று வெளிப்படுகின்ற வெற்றுச் சொற்களாக இல்லாமல், கடவுளின் திருவுளத்தை நடைமுறையில் செயல்படுத்துகின்ற விதத்தில் நமது வாழ்க்கை அமையும். இந்த உறுதியான அடித்தளம் இல்லாதபோது நம் வாழ்க்கை மணல்மீது கட்டப்பட்ட வீடுபோல எளிதில் விழுந்துவிடும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசு என்னும் அடித்தளத்தில் கட்டப்பட்ட வீடாக எங்கள் வாழ்க்கை அமைந்திட அருள்தாரும்.