யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 10வது வாரம் திங்கட்கிழமை
2020-06-08

புனித எபிரேம்




முதல் வாசகம்

இஸ்ரயேலின் கடவுளை எலியா வழிபடுகிறார்
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 1-6

அந்நாள்களில் கிலயாதில் குடியிருந்த திஸ்பே ஊரைச் சார்ந்த எலியா ஆகாபு அரசனிடம், �நான் பணியும் இஸ்ரயேலின் கடவுளான வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் வாக்கினாலன்றி, வரும் ஆண்டுகளில் பனியோ மழையோ பெய்யாது� என்றார். பின்னர் ஆண்டவரின் வாக்கு எலியாவுக்கு வந்தது: �இங்கிருந்து ஓடிவிடு; கிழக்கு முகமாகப் போய் யோர்தானுக்கு அப்பாலுள்ள கெரீத்து ஓடையருகில் ஒளிந்து கொள். அந்த ஓடையில் தண்ணீர் குடித்துக்கொள். அங்கே உனக்கு உணவளிக்குமாறு காகங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்�. அவ்வாறே அவர் போய் ஆண்டவரது வாக்கின்படி செய்தார். அவர் சென்று யோர்தானுக்கு அப்பாலிருந்த கெரீத்து ஓடையருகில் தங்கியிருந்தார். காகங்கள் காலையிலும் மாலையிலும் அப்பமும் இறைச்சியும் அவருக்குக் கொண்டு வந்தன. ஓடையில் தண்ணீர் குடித்துக் கொண்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவர் எனக்கு உதவிடுவார்
திருப்பாடல் 121: 1-2. 3-4. 5-6. 7-8

1 மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? 2 விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். பல்லவி

3 அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். 4 இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதும் இல்லை; உறங்குவதும் இல்லை. பல்லவி

5 ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப் பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்! 6 பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. பல்லவி

7 ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார். 8 நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: ``ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்'' (யோவான் 3:20-21)

யோவான் நற்செய்தியில் ஆழ்ந்த இறையியல் சிந்தனைகள் உண்டு. குறிப்பாக, இயேசு தம்மை மக்களுக்கு வெளிப்படுத்தும்போது தமக்கும் தந்தை இறைவனுக்கும் இடையே நிலவுகின்ற உறவினைப் பல பொருள்செறிந்த உருவகங்கள் வழியாக எடுத்துரைக்கிறார். குறிப்பாக இயேசு, ''வழியும் உண்மையும் வாழ்வும் நானே'' என்று தம்மை அடையாளம் காட்டுகிறார் (காண்க: யோவா 14:6). மேலும் இயேசு தம்மை ''ஒளி'' என அழைக்கிறார் (''இயேசு 'உலகின் ஒளி நானே' என்றார்'' - யோவா 8:12). வழி, உண்மை, வாழ்வு, ஒளி என்று பலவிதமாக வருகின்ற இவ்வுருவகங்கள் இயேசுவை நாம் ஓரளவு புரிந்துகொள்ள நமக்குத் துணையாகின்றன. இயேசுவை அணுகிச் செல்வோர் ''ஒளி''யை வெறுக்கமாட்டார்கள். ஏனென்றால் இயேசு கடவுளை நமக்கு வெளிப்படுத்துகின்ற ஒளியாக இவ்வுலகிற்கு வந்தார். அதுபோல, ''உண்மை''யைத் தங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டு வாழ்வோர் இயேசுவைப் பின்பற்றத் தயங்கமாட்டார்கள். ஏனென்றால் இயேசுவே கடவுள் என்றால் யார் என்னும் உண்மையை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே, நற்செயல்களும் உண்மையும் நம் வாழ்வில் துலங்கினால் நாம் இயேசுவின் சீடர்களாக வாழ்கிறோம் எனலாம். அப்போது நம் வாழ்வு ஒளி நிறைந்ததாக இருக்கும். அங்கே இருளுக்கு இடமில்லை. இயேசுவை ஒளியாக நாம் ஏற்கும்போது பாவம் என்னும் இருளை நாம் நம் அகத்திலிருந்து அகற்றிவிடுவோம். இயேசுவின் அருள் என்னும் ஒளி அங்கே பரவி நம் இதயத்தை மிளிரச் செய்யும். இயேசுவின் காலத்தில் ஒருசிலர் அவருடைய போதனையை ஏற்க மறுத்தனர். அவர்கள் உண்மையைக் கண்டுகொள்ள முன்வரவில்லை; ஒளியை அணுகிட முனையவில்லை. இன்று இயேசுவைப் பின்செல்லும் நாம் வாழ்வுக்கு வழிகாட்டும் இயேசுவை ஒளியாகக் கொண்டு அவர் காட்டுகின்ற உண்மையைக் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறோம். அப்போது இயேசு வாக்களிக்கின்ற ''நிலைவாழ்வு'' நமதாகும் (காண்க: யோவா 3:16)

மன்றாட்டு:

இறைவா, ஒளியாக விளங்கும் உம்மை எங்கள் உள்ளத்தில் ஏற்று, இருளகற்றி வாழ்ந்திட அருள்தாரும்.