யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 7வது வாரம் புதன்கிழமை
2020-05-27




முதல் வாசகம்

வளர்ச்சியையும் உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்ல கடவுளிடம் ஒப்படைக்கிறேன்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20: 28-38

அந்நாள்களில் பவுல் எபேசு சபையின் மூப்பர்களிடம் கூறியது: ``தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக்கொண்ட கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்குத் தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள். உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியும். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்பும் அளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். எனவே விழிப்பாயிருங்கள்; மூன்று ஆண்டு காலமாக அல்லும் பகலும் இடைவிடாது கண்ணீரோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தி வந்ததை நீங்கள் நினைவிற் கொள்ளுங்கள். இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்; அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக! அவ்வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்கும் உரிய உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தர வல்லது. எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை. என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடு இருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்கவேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன். அதோடு, பெற்றுக்கொள்வதைவிடக் கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவுகூருங்கள் என்றும் கூறினேன்.'' இவற்றைச் சொன்னபின் அவர் முழந்தாள்படியிட்டு, அவர்கள் எல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டினார். பின் எல்லாரும் பவுலைக் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கதறி அழுதனர். `இனிமேல் நீங்கள் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை' என்று அவர் கூறியது அவர்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது. பிறகு அவர்கள் கப்பல்வரைக்கும் சென்று அவரை வழியனுப்பிவைத்தனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்
திருப்பாடல் 68: 28-29. 32-35

28 கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்; என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்! 29 எருசலேமில் உமது கோவில் உள்ளது; எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர். பல்லவி

32 உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். 33 வானங்களின் மேல், தொன்மைமிகு வானங்களின் மேல், ஏறிவரும் அவரைப் புகழுங்கள்; இதோ! அவர் தம் குரலில், தம் வலிமைமிகு குரலில், முழங்குகின்றார். 34ய கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள். பல்லவி

34b அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது; அவரது வலிமை மேக மண்டலங்களில் உள்ளது. 35உ கடவுள் போற்றி! போற்றி! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19

இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ``தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும். நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான். இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன். உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாததுபோல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது. அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை. நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன். அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'தூய தந்தையே,...நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்' என்றார்'' (யோவான் 17:18)

யோவான் நற்செய்தியில் இயேசு கடவுளை நோக்கி எழுப்பிய நீண்டதொரு மன்றாட்டு உள்ளது (யோவா 17:1-28). அதில் இயேசு கடவுளைப் போற்றுகிறார்; சிறப்பாகத் தம் சீடர்களுக்காக இறைவனை மன்றாடுகிறார். தந்தையோடு தமக்கு இருக்கின்ற ஒன்றிப்பு சீடர்கள் நடுவிலும் நிலவிட வேண்டும் என இயேசு வேண்டுகிறார் (யோவா 17:11ஆ). உலகை விட்டுப் பிரிந்து செல்கின்ற வேளையிலும் இயேசு உலகின் மீட்புக்காக வேண்டுகிறார். உலகத்தை மீட்பதற்காகவே அவர் இவ்வுலகிற்குத் தந்தையால் அனுப்பப்பட்டார். தம் பணியை நிறைவேற்றிவிட்டுத் தந்தையிடம் செல்கின்ற இயேசு அப்பணியைத் தொடர்வதற்கான பொறுப்பைத் தம் சீடர்களிடம் ஒப்படைக்கிறார். இயேசு இவ்வுலகில் இருந்து நற்செய்தியை அறிவித்ததுபோல அவருடைய சீடர்களும் நற்செய்தியைத் தொடர்ந்து அறிவிக்க வேண்டும். அப்பணியை ஆற்றும்போது அவர்களுக்குத் துணையாக இயேசுவும் அவர் வழங்குகின்ற தூய ஆவியும் இருப்பார்கள். சீடர்கள் ஆற்ற வேண்டிய பணி இயேசு ஆற்றிய பணியே என்பதை வலியுறுத்தும் விதத்தில் இயேசு, ''தந்தையே, நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்'' என்று கூறி மன்றாடுகின்றார்.

இந்த மன்றாட்டில் துலங்குகின்ற முக்கிய கருத்துக்கள் இரண்டு. முதலில் இயேசு தந்தையால் அனுப்பப்படுகிறார். கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கிறது என்னும் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, அவர்களை இறைவாழ்வில் பங்குகொள்ளச் செய்வதே இயேசு ஆற்றவந்த பணியின் நோக்கம். இரண்டாவது, இயேசு தம் சீடர்களை அனுப்புகிறார். இந்த இரு ''அனுப்புதல்களும்'' ஒன்றோடொன்று இணைபிரியாமல் பிணைந்துள்ளதை நாம் கருத வேண்டும். இயேசுவில் நம்பிக்கை வைத்து வாழ்கின்ற சீடர் குழு தன் சொந்தப் பெயரால் பணி செய்வதில்லை; மாறாக, தன்னை உருவாக்கிய இயேசுவின் பெயராலேயே பணி செய்கிறது. திருச்சபை வழியாக இயேசுவே அப்பணியை ஆற்றுகிறார். எனவே, நாம் ஆற்றுகின்ற நற்செய்திப் பணி வெற்றியடைவதற்கு வழிகாட்டுபவர் இயேசுவே. நாம் கடவுளின் கைகளில் அவருடைய கருவிகளாக இருந்து பணியாற்றிட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, நீர் உம் திருமகன் வழியாக எங்களுக்கு அளித்த பணியை நாங்கள் மகிழ்ச்சியோடு ஆற்றிட அருள்தாரும்.