யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 2வது வாரம் திங்கட்கிழமை
2020-04-20




முதல் வாசகம்

அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 23-31

அந்நாள்களில் விடுதலை பெற்ற சீடர்கள், தங்களைச் சேர்ந்தவர்களிடம் வந்து, தலைமைக் குருக்களும் மூப்பர்களும் தங்களுக்குக் கூறிய யாவற்றையும் அறிவித்தார்கள். இவற்றைக் கேட்ட யாவரும் ஒரே மனத்துடன் தங்கள் குரலைக் கடவுள்பால் எழுப்பி, பின்வருமாறு மன்றாடினர்: ``ஆண்டவரே, `விண்ணுலகையும் மண்ணுலகையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே'. எங்கள் தந்தையும் உம் ஊழியருமாகிய தாவீது வாயிலாகத் தூய ஆவி மூலம் `வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்? பூவுலகின் அரசர்களும் தலைவர்களும் ஆண்டவருக்கும் அவர்தம் மெசியாவுக்கும் எதிராக அணிவகுத்து நின்றனர்' என்று உரைத்தீர். அதன்படியே இந்நகரில் உம்மால் அருள்பொழிவு பெற்ற உம் தூய ஊழியராகிய இயேசுவுக்கு எதிராக ஏரோதும் பொந்தியு பிலாத்தும் பிற இனத்தவரோடும் இஸ்ரயேல் மக்களோடும் ஒன்றுதிரண்டனர். உமது கைவன்மையும் உமது திட்டமும் முன்குறித்த அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தனர். இப்போது கூட ஆண்டவரே, அவர்கள் அச்சுறுத்துவதைப் பாரும். உம் அடியார் முழுத் துணிவுடன் உமது வார்த்தைகளை எடுத்துக் கூற அருள் தாரும். உமது தூய ஊழியர் இயேசுவின் பெயரால் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும்; அடையாளங்களும் அருஞ்செயல்களும் நடைபெறச் செய்யும். '' இவ்வாறு மன்றாடியவுடன் அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர்.
திருப்பாடல் 2: 1-3. 4-6. 7-9

1 வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்? 2 ஆண்டவர்க்கும் அவர்தம் அருள்பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப் பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்; ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்; 3 `அவர்கள் பூட்டிய தளைகளைத் தகர்ப்போம்; அவர்கள் வைத்த கண்ணிகளை நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்' என்கின்றார்கள். பல்லவி

4 விண்ணுலகில் வீற்றிருப்பவர் எள்ளி நகைக்கின்றார்; என் தலைவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார். 5 அவர் சினமுற்று அவர்களை மிரட்டுகின்றார்; கடுஞ்சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்; 6 `என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தினேன். பல்லவி

7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்: `நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். 8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன். 9 இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்'. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-8

அக்காலத்தில் பரிசேயர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர். அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, ``ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது'' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ``மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதி யாக உமக்குச் சொல்கிறேன்'' என்றார். நிக்கதேம் அவரை நோக்கி, ``வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?'' என்று கேட்டார். இயேசு அவரைப் பார்த்து, ``ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இயேசுவின் உயிர்ப்பு அழுகையைப் போக்குகிறது !

இயேசுவின் உயிர்ப்பு மாந்த உணர்வுகளில் ஒன்றான துயரத்தை, அழுகையைப் போக்குகிறது என்னும் நற்செய்தியை இன்றைய வாசகத்தில் காண்கிறோம்.

இயேசுவின் இறப்பினால் பெரிதும் துயருற்ற மகதலேன் மரியா "கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்". வெண்ணாடை அணிந்த தூதர்கள் அவரிடம் " அம்மா, ஏன் அழுகிறீர்?" எனக் கேட்டு, அவருக்கு ஆறுதல் அளிக்க முன்வருகின்றனர். பின்னர், இயேசுவும் அவருக்குத் தோன்றி, "ஏன் அம்மா அழுகிறாய்?" எனக் கேட்கிறார். மரியா தமது துயரத்தை எடுத்துரைத்ததும், இயேசு அவரை நோக்கி, "மரியா" என்று சொல்ல, மரியா திரும்பிப் பார்த்து, அவரை இயேசு எனக் கண்டுணர்ந்து, "ரபூனி", "போதகரே" என்கிறார். இந்த நொடியில் அவரது துயரம், அழுகை அனைத்தும் களையப்பட்டு, பெருமகிழ்வு உண்டாகிறது. அவரை இயேசு உயிர்ப்பின் செய்தியாளராகத் தமது சீடர்களிடம் அனுப்புகிறார்.

நமது வாழ்வின் துயரங்கள், அழுகை அனைத்தையும் போக்கும் ஆற்றல் இயேசுவின் உயிர்ப்புக்கு உண்டு. "நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள், அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள். ஆனால், உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்" (யோவா 16: 20) என்று தமது இறப்புக்கு முன்னால் இயேசு வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதி அவரது உயிர்ப்பிலே நிறைவேறுகிறது. எனவே, சாவு, நோய்கள், தனிமை, மன அழுத்தம், கடன் தொல்லைகள், குடும்ப சமாதானமின்மை... போன்றவற்றால் கண்ணீர் விட்டு, அழுது புலம்பும் அனைவரும் உயிர்ப்பின் நாயகனாம் இயேசுவைத் தேடி வரட்டும். அவர் கண்ணீரைக் களிநடமாக மாற்றுவார்.

மன்றாட்டு:

சாவை வென்று உயிர்த்த மாட்சி மிகுந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் அழுதையையும், துயரத்தையும் போக்கி, நீர் மட்டுமே அருளுகின்ற மகிழ்ச்சியை, ஆறுதலை உமது ஆவியினால் எங்களுக்குத் தந்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.