யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா எண்கிழமையில் சனிக்கிழமை
2020-04-18




முதல் வாசகம்

நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 13-21

அந்நாள்களில் பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப் படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்துகொண்டனர். நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை. எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தை விட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள். ``நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால் குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது. ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக்கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்'' என்று கூறினார்கள். அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, ``இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது'' என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர். அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, ``உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது'' என்றனர். அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் நன்றி செலுத்துகின்றேன்.
திருப்பாடல் 118: 1,14-15. 16,18. 19-21

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 14 ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. 15 நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றி உள்ளது. பல்லவி

16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 18 கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. பல்லவி

19 நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். 20 ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர். 21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்

நற்செய்தி வாசகம்

+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை. அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை. இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார். இயேசு அவர்களை நோக்கி, ``உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'' என்றுரைத்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இயேசுவின் உயிர்ப்பு அழுகையைப் போக்குகிறது !

இயேசுவின் உயிர்ப்பு மாந்த உணர்வுகளில் ஒன்றான துயரத்தை, அழுகையைப் போக்குகிறது என்னும் நற்செய்தியை இன்றைய வாசகத்தில் காண்கிறோம்.

இயேசுவின் இறப்பினால் பெரிதும் துயருற்ற மகதலேன் மரியா "கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்". வெண்ணாடை அணிந்த தூதர்கள் அவரிடம் " அம்மா, ஏன் அழுகிறீர்?" எனக் கேட்டு, அவருக்கு ஆறுதல் அளிக்க முன்வருகின்றனர். பின்னர், இயேசுவும் அவருக்குத் தோன்றி, "ஏன் அம்மா அழுகிறாய்?" எனக் கேட்கிறார். மரியா தமது துயரத்தை எடுத்துரைத்ததும், இயேசு அவரை நோக்கி, "மரியா" என்று சொல்ல, மரியா திரும்பிப் பார்த்து, அவரை இயேசு எனக் கண்டுணர்ந்து, "ரபூனி", "போதகரே" என்கிறார். இந்த நொடியில் அவரது துயரம், அழுகை அனைத்தும் களையப்பட்டு, பெருமகிழ்வு உண்டாகிறது. அவரை இயேசு உயிர்ப்பின் செய்தியாளராகத் தமது சீடர்களிடம் அனுப்புகிறார்.

நமது வாழ்வின் துயரங்கள், அழுகை அனைத்தையும் போக்கும் ஆற்றல் இயேசுவின் உயிர்ப்புக்கு உண்டு. "நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள், அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள். ஆனால், உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்" (யோவா 16: 20) என்று தமது இறப்புக்கு முன்னால் இயேசு வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதி அவரது உயிர்ப்பிலே நிறைவேறுகிறது. எனவே, சாவு, நோய்கள், தனிமை, மன அழுத்தம், கடன் தொல்லைகள், குடும்ப சமாதானமின்மை... போன்றவற்றால் கண்ணீர் விட்டு, அழுது புலம்பும் அனைவரும் உயிர்ப்பின் நாயகனாம் இயேசுவைத் தேடி வரட்டும். அவர் கண்ணீரைக் களிநடமாக மாற்றுவார்.

மன்றாட்டு:

சாவை வென்று உயிர்த்த மாட்சி மிகுந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் அழுதையையும், துயரத்தையும் போக்கி, நீர் மட்டுமே அருளுகின்ற மகிழ்ச்சியை, ஆறுதலை உமது ஆவியினால் எங்களுக்குத் தந்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.