யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - A
2020-03-29

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 12-14,திருப்பாடல் 130: 1-2. 3-4. 5-6. 7-8 ,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 8-11,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-45 )
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது: மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!

உயிர்ப்புக்குரியவர்களே, உயிரும், உயிர்ப்புமான ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறை சிறப்பிக்கிறோம். நம் ஆண்டவர் உயிர்த்தெழுதலும், வாழ்வுமாய் இருக்கிறார் என்ற உண்மையை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நண்பரின் இறப்புக்காக, ஆண்டவர் இயேசு கண்ணீர் விட்டு அழுததை இன்றைய நற்செய்தி சுட்டிக் காட்டுகிறது. பாவத்தினால் நாம் கடவுளின் அருள் உயிரை இழக்கும் போதெல்லாம் ஆண்டவர் நமக்காக கண்ணீர் வடிக்கிறார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இறந்த லாசரை, இயேசு மீண்டும் உயிர்த்தெழச் செய்ததையும் நாம் காண்கிறோம். நாம் பாவத்தினால் அருள் வாழ்வில் இறந்தாலும், நம்மை உயிர்ப்பிக்க ஆண்டவர் தயாராக இருக்கிறார் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து இயேசுவின் வல்லமையால் பாவத்தில் இருந்து உயிர்த்தெழுந்து புது வாழ்வு வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.முதல் வாசகம்

என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 12-14

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக் கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். `ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்' என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரிடமே பேரன்பும் மீட்பும் உள்ளது.
திருப்பாடல் 130: 1-2. 3-4. 5-6. 7-8

1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி

3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? 4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். பல்லவி

5 ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். 6 விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. பல்லவி

7 பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. 8 எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! பல்லவி

இரண்டாம் வாசகம்

இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருக்கிறார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 8-11

சகோதரர் சகோதரிகளே, ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்,'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-45

அக்காலத்தில் பெத்தானியாவில் வாழ்ந்துவந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்து வந்தனர். இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத் தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர். இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆள் அனுப்பி, ``ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்'' என்று தெரிவித்தார்கள். அவர் இதைக் கேட்டு, ``இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்'' என்றார். மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார். இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார். பின்னர் தம் சீடரிடம், ``மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்'' என்று கூறினார். அவருடைய சீடர்கள் அவரிடம், ``ரபி, இப்போதுதானே யூதர்கள் உம் மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, ``பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது. ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் அப்போது ஒளி இல்லை'' என்றார். இவ்வாறு கூறியபின், ``நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்'' என்றார். அவருடைய சீடர் அவரிடம், ``ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்'' என்றனர். இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். அப்போது இயேசு அவர்களிடம், ``இலாசர் இறந்துவிட்டான்'' என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டு, ``நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்'' என்றார். திதிம் என்னும் தோமா தம் உடன்சீடரிடம், ``நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்'' என்றார். இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது. பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது. சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். மார்த்தா இயேசுவை நோக்கி, ``ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்'' என்றார். இயேசு அவரிடம், ``உன் சகோதரன் உயிர்த்தெழுவான்'' என்றார். மார்த்தா அவரிடம், ``இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்'' என்றார். இயேசு அவரிடம், ``உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?'' என்று கேட்டார். மார்த்தா அவரிடம், ``ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்'' என்றார். இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், ``போதகர் வந்துவிட்டார்; உன்னை அழைக்கிறார்'' என்று காதோடு காதாய்ச் சொன்னார். இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார். இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார். வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள். இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, ``ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்'' என்றார். மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, ``அவனை எங்கே வைத்தீர்கள்?'' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ``ஆண்டவரே, வந்து பாரும்'' என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். அதைக் கண்ட யூதர்கள், ``பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!'' என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் அவர்களுள் சிலர், ``பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?'' என்று கேட்டனர். இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. ``கல்லை அகற்றிவிடுங்கள்'' என்றார் இயேசு. இறந்துபோனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், ``ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!'' என்றார். இயேசு அவரிடம், ``நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?'' என்று கேட்டார். அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, ``தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும்பொருட்டே இப்படிச் சொன்னேன்'' என்று கூறினார். இவ்வாறு சொன்னபின் இயேசு உரத்த குரலில், ``இலாசரே, வெளியே வா'' என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. ``கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்'' என்று இயேசு அவர்களிடம் கூறினார். மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உயிரளித்து காப்பவரே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் விசுவாச வாழ்வில் புத்துயிர் பெற்று, உலக மக்கள் முன்னிலையில் உமது சாட்சிகளாகத் திகழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

வாழ்வளித்து வழிநடத்துபவரே இறைவா,

உம் மீது நம்பிக்கை இல்லாமலும், உம்மைப் பற்றிய தவறான எண்ணங்களாலும், ஆன்மீக வாழ்வில் இறந்தவர்களாய் வாழும் மக்களிடையே விசுவாசத்தின் ஒளியை ஏற்ற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

சுகம் கொடுப்பவரே இறைவா,

உடல், உள்ள, ஆன்மீக பார்வையிழந்து தவிக்கும் மக்கள் அனைவரையும் குணப்படுத்தி, உமது ஒளியால் இந்த உலகத்தின் முகத்தைப் புதுப்பிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மருத்துவருக்கு எல்லாம் மருத்துவராகிய எம் இறைவா!

உலகமெங்கும் பரவி வரும் தொற்று நோயின் கொடுமைகளிலிருந்து எம் மக்களைக் காப்பாற்றும். நோயைக் கட்டுபடுத்தவும், அவர்களுக்குப் பணிவிடைச் செய்யும் அனைவரையும் அந்த நோயின் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்து, உழைக்க நல்ல ஆரோக்கியத்தையும், மன உறுதியையும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இளைஞனே எழு! எழுந்து ஒளிவீசு என்ற எம் இறைவா!

சிற்றின்பமான உல்லாசமான வாழ்கையில் தங்களின் ஆற்றலையும், திறமைகளையும் வீணாக்குகின்ற இளைஞர்கள் இயேசுவின் அன்பினால் ஈர்க்கப்படவும், தங்களின் வாழ்வை புனிதமான வழிகளில் நடத்தவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குணமளிக்கும் வள்ளலே எம் இறைவா,

உம் மக்கள் இன்றைய சூழலில் வயது முதிர்ந்தவர்களை பேணி காக்கும் நிலைமாறி, முதியோர் இல்லங்கள் பெறுகிவரும் நிலையில் அவர்களுக்கு நீர் தந்தையாகவும், தாயாகவும் நின்று, தாங்கள் கடந்து வந்த பாதையைக் குறித்து அவர்கள் துன்புறும் வேளையில் அவர்களுக்கு அன்பினை பொழிந்து அரவணைத்தும் நல்ஆயனாக இருந்து வழி நடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

பாதுகாப்பின் நாயகனே!

எம் பங்கில் இருக்கின்ற நோயாளிகள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை உமது அன்பில் திளைக்கவைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

கடவுளின் வல்லமை வெளிப்பட பொறுத்திருப்போம்.

இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தல் என்பது இயேசுவுக்குப் புதிதல்ல. ஏற்கெனவே தொழுகைக்கூடத்தலைவரின் மகளுக்கும், நயீன் நகர் கைம்பெண்ணின் மகனுக்கும் உயிர் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த நிகழ்வுகளுக்கும், இலாசரை உயிர்ப்பிக்கும் நிகழ்வுகளுக்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது. இலாசர் நோயுற்றிருக்கிறார் என்பது இயேசுவுக்குத் தெரியவந்தாலும், அவர் அங்கு செல்வதற்கு தாமதிக்கிறார். இலாசர் இறந்து நான்கு நாட்கள் கழித்துதான் கல்லறைக்குச்செல்கிறார். ஏனென்றால், இயேசு கல்லறையைத்திறக்கச்சொன்னபோது, மார்த்தா அவரிடம், ‘ ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று. நாற்றம் அடிக்குமே’ என்கிறார். யூதர்களின் நம்பிக்கைப்படி, ஒரு மனிதனுடைய ஆவி தன்னுடைய உடலில் மீண்டும் நுழைவதற்காக, கல்லறையைச்சுற்றி, சுற்றி வருமாம். கல்லறை வாயில் அகற்றப்பட்டால் மீண்டும் அந்த உடலில் நுழைந்துவிட வாய்ப்பு தேடிக்கொண்டிருக்குமாம். நான்கு நாள்கள் ஆனபின், உடல் அழுகிவிடுவதால், தன்னுடைய உடலை அதற்கு அடையாளம் காணமுடியாமல், அங்கிருந்து சென்றுவிடுமாம். இதன் அடிப்படையில் தான் மார்த்தா இப்படிச்சொல்கிறார்.

இந்தப்புதுமையை நன்றாக ஆராய்ந்து பார்த்தால், நமது வாழ்வில் நடக்கக்கூடிய நிகழ்வுகள் கடவுளின் மகிமையை வெளிப்படுத்துவதற்காகக்கூட இருக்கலாம் என்கிற சிந்தனையைத்தருகிறது. இயேசு அவராகவே தாமதிக்கிறார். அவர் நினைத்திருந்தால், இலாசர் சுகமில்லாமல் இருக்கிறபோதே, அவரது இல்லம் சென்று ஆறுதல் மொழி சொல்லி, காப்பாற்றியிருக்கலாம். ஏனென்றால், இலாசரையும், அவரது சகோதரிகளையும் அதிகமாக அன்பு செய்தார். அவரது அன்பின் வெளிப்பாடு தான் அவரது அழுகை. ஆனாலும், இங்கே கடவுளின் வல்லமை வெளிப்படுவதற்காக, இயேசு பொறுமையோடு தன்னுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அந்தத்தருணத்திற்காக காத்திருக்கிறார். கடவுளின் வல்லமை நம்மில் செயல்பட நாம் பொறுமையோடு காத்திருக்க வேண்டும். வாழ்வில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கு நம்மால் உறுதியான பதில் சொல்ல முடியாது. ஆனாலும், கடவுளின் வல்லமை வெளிப்பட நமது வாழ்வு ஒரு ஊன்றுகோலாக இருந்தால், அதற்காக எத்தனை ஆண்டுகளானாலும் காத்திருப்பது கடினமல்ல. அது ஒரு சுகமான சுமை. அதை இலாசரின் குடும்பம் அனுபவிக்கிறது. நமது வாழ்விலும் துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், கண்ணீர் வருகிறபோது கடவுளின் வல்லமை நமது வாழ்வில் வெளிப்பட இது ஒரு வாய்ப்பு என்கிற நம்பிக்கை நமக்கு வரவேண்டும். அந்த வல்லமை வெளிப்படுவதற்கு நாம் பொறுமைகாக்க வேண்டும். கடவுளால் இந்த உலகத்தில் ஆகாதது ஒன்றுமில்லை என்கிற விசுவாசம், வாழ்வை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள நமக்கு வழிவகுக்கும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிமடுத்து, அவர் காட்டும் வழியில் நடக்க அருள்தாரும்.