யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 4வது வாரம் சனிக்கிழமை
2020-03-28

புனித வின்சென்ற் பெரர்




முதல் வாசகம்

வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20

`ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்; நானும் புரிந்து கொண்டேன். பின்னர் நீர் அவர்களின் செயல்களை எனக்குக் காட்டினீர். வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்; அவர்கள் எனக்கு எதிராய், `மரத்தைப் பழத்தோடு அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்; அவன் பெயர் மறக்கப்படட்டும்' என்று சொல்லிச் சதித் திட்டம் தீட்டியதை நான் அறியாதிருந்தேன். படைகளின் ஆண்டவரே, நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்; உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் சோதித்தறிபவர்; நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும். ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.
திருப்பாடல் 7: 1-2. 8-9. 10-11

1 என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்; என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றித் தப்புவியும். 2 இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்; விடுவிப்போர் எவரும் இரார். பல்லவி

8bஉ ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும். 9 பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்; நல்லாரை நிலைநிறுத்தும்; நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்; நீதி அருளும் கடவுள். பல்லவி

10 கடவுளே என் கேடயம்; நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார். 11 கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி; நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக்கொள்ளாத இறைவன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 40-53

அக்காலத்தில் யூதர்களின் திருவிழா கூட்டத்தில் சிலர் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, ``வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே'' என்றனர். வேறு சிலர், ``மெசியா இவரே'' என்றனர். மற்றும் சிலர், ``கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்? தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?'' என்றனர். இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது. சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை. தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், ``ஏன் அவனைப் பிடித்துக் கொண்டு வரவில்லை?'' என்று கேட்டார்கள். காவலர் மறுமொழியாக, ``அவரைப்போல எவரும் என்றுமே பேசியதில்லை'' என்றனர். பரிசேயர் அவர்களைப் பார்த்து, ``நீங்களும் ஏமாந்து போனீர்களோ? தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா? இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்'' என்றனர். அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம், ``ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?'' என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக, ``நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்'' என்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"எங்களுக்குக் கண் தெரிகிறது.. .. நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்"

கண் இருந்தால் மட்டும் போதாது. பார்வை பெற கண்ணில் ஒளி இருக்க வேண்டும். பார்க்கும் பொருளிலும் ஒளி பட்டு பிரதிபலிக்க வேண்டும். இயேசு என்னும் ஒளி, கண்ணின் ஒளியாகவும் பார்க்கும் பொருளின் ஒளியாகவும் இருக்கவேண்டும்.அப்பொழுது, பார்க்கும் பொருளின் உண்மைப் பொருளை உணர முடியும். அந்த பரிசேயர்களுக்கு கண் இருந்தது. கண்ணில் ஒளி இருந்தது. ஆனால் இயேசு என்னும் உன்னத ஒளி அவர்களில் இல்லை.எனவேதான், பார்த்தார்கள். ஆனால் தவறாகப் பார்த்தார்கள். பார்வையற்றிருந்த ஒருவர் இன்று பார்வையோடு இருப்பதை ஏற்றுக்கொள்ளம் பார்வை அவர்களுக்கு இல்லை. "உங்கள் மகன் இவன்தானா?" என்று கேட்கும் அளவுக்கு அவர்களின் பார்வை தடை பெற்றிருந்தது. பாவத்தில் இருக்கும் மனிதனின் பார்வையும் தடைபடுகிறது. தீய சிந்தனை, தீய செயல்பாடுகள் உள்ள மனிதனின் பார்வை மங்கிவிடுகிறது. இதயம் சுருங்கி, உண்மையையும் எதார்த்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் அகக்கண் புறையுற்று, பார்வையைப் பாதித்துவிடுகிறது. பார்வைக்கும் பாவத்திற்கும் நெருக்கம் அதிகம். புனித பார்வையில் சரியானதை, உண்மையை காண்போம். அங்கு கடவுளின் மாட்சியைக் காணலாம். கண்டு இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிமடுத்து, அவர் காட்டும் வழியில் நடக்க அருள்தாரும்.