யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 4வது வாரம் செவ்வாய்க்கிழமை
2020-03-24

புனித பற்றிக்




முதல் வாசகம்

கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன்
எசேக்கியல் நூலிலிருந்து வாசகம் 47:1-9,12

1 அம்மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது.2 அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்து கொண்டிருந்தது.3 அம்மனிதர் கையில் ஓர் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்று, ஆயிர முழம் அளந்தார். பின்னர் கணுக்காலளவு ஆழமுள்ள அத்தண்ணீர் வழியாய் என்னை அழைத்துச் சென்றார்.4 அவர் மேலும் ஆயிர முழம் அளந்து என்னை முழங்காலளவு ஆழமுள்ள தண்ணீர்pல் அழைத்துச் சென்றார். மேலும் ஆயிர முழம் அளந்து இடுப்பளவு தண்ணீரில் என்னை நடத்திச் சென்றார்.5 அவர் மேலும் ஆயிர முழம் அளந்தார். ஆனால் இப்போது அது ஆறாக ஓடியது. எனவே என்னால் அதைக் கடக்க இயலவில்லை. ஏனெனில் தண்ணீர் உயர்ந்து நீந்திப்போகுமளவுக்கு ஆழமுடையதாய், யாராலும் நடந்து கடக்க முடியாத ஆறாய் ஓடியது.6 அவர் என்னிடம் மானிடா! இதைப் பார்த்தாயா? என்றார். பின்னர் அவர் என்னை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார்.7 நான் அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக் கண்டேன்.8 அவர் என்னிடம் உரைத்தது: இத் தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும்.9 இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.12 பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்: அவற்றின் இலைகள் உதிரா: அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்: ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே
திருப்பாடல்கள் 46:1-2, 4-5, 7 -8

1 கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே.2 ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும்,3 கடலின் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும், அவற்றின் பெருக்கால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை.

4 ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.5 அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு.

7 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். (சேலா)8 வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்!


நற்செய்திக்கு முன் வசனம்

நலம்பெற விரும்புகிறீரா?

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5:1-3, 5-16

1 யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார்.2 எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர்.3 இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக்கிடப்பர். (இவர்கள் குளத்து நீர் கலங்குவதற்காகக் காத்திருப்பார்கள்.5 முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார்.6 இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, ' நலம்பெற விரும்புகிறீரா? ' என்று அவரிடம் கேட்டார்.7 ' ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார் ' என்று உடல் நலமற்றவர் அவரிடம் கூறினார்.8 இயேசு அவரிடம், ' எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும் ' என்றார்.9 உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார்.10 அன்று ஓய்வு நாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், ' ஓய்வு நாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல் ' என்றார்கள்.11 அவர் மறுமொழியாக ' என்னை நலமாக்கியவரே, ' உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துசெல்லும் ' என்று என்னிடம் கூறினார் ' என்றார்.12 ' படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும் ' என்று உம்மிடம் கூறியவர் யார்? ' என்று அவர்கள் கேட்டார்கள்.13 ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்டார்.14 பின்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, ' இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர் ' என்றார்.15 அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார்.16 ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"எங்களுக்குக் கண் தெரிகிறது.. .. நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்"

கண் இருந்தால் மட்டும் போதாது. பார்வை பெற கண்ணில் ஒளி இருக்க வேண்டும். பார்க்கும் பொருளிலும் ஒளி பட்டு பிரதிபலிக்க வேண்டும். இயேசு என்னும் ஒளி, கண்ணின் ஒளியாகவும் பார்க்கும் பொருளின் ஒளியாகவும் இருக்கவேண்டும்.அப்பொழுது, பார்க்கும் பொருளின் உண்மைப் பொருளை உணர முடியும். அந்த பரிசேயர்களுக்கு கண் இருந்தது. கண்ணில் ஒளி இருந்தது. ஆனால் இயேசு என்னும் உன்னத ஒளி அவர்களில் இல்லை.எனவேதான், பார்த்தார்கள். ஆனால் தவறாகப் பார்த்தார்கள். பார்வையற்றிருந்த ஒருவர் இன்று பார்வையோடு இருப்பதை ஏற்றுக்கொள்ளம் பார்வை அவர்களுக்கு இல்லை. "உங்கள் மகன் இவன்தானா?" என்று கேட்கும் அளவுக்கு அவர்களின் பார்வை தடை பெற்றிருந்தது. பாவத்தில் இருக்கும் மனிதனின் பார்வையும் தடைபடுகிறது. தீய சிந்தனை, தீய செயல்பாடுகள் உள்ள மனிதனின் பார்வை மங்கிவிடுகிறது. இதயம் சுருங்கி, உண்மையையும் எதார்த்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் அகக்கண் புறையுற்று, பார்வையைப் பாதித்துவிடுகிறது. பார்வைக்கும் பாவத்திற்கும் நெருக்கம் அதிகம். புனித பார்வையில் சரியானதை, உண்மையை காண்போம். அங்கு கடவுளின் மாட்சியைக் காணலாம். கண்டு இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிமடுத்து, அவர் காட்டும் வழியில் நடக்க அருள்தாரும்.