யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 2வது வாரம் புதன்கிழமை
2020-03-11




முதல் வாசகம்

வாருங்கள், எரேமியா மீது குற்றம் சாட்டுவோம்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 18-20

யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் ``வாருங்கள், எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். குருக்களிடமிருந்து சட்டமும், ஞானிகளிடமிருந்து அறிவுரையும், இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கும் எடுபடாது. எனவே அவர்மீது குற்றம் சாட்டுவோம். அவர் சொல்வதைக் கேட்கவேண்டாம்'' என்றனர். ஆண்டவரே, என்னைக் கவனியும்; என் எதிரிகள் சொல்வதைக் கேளும். நன்மைக்குக் கைம்மாறு தீமையா? என் உயிரைப் போக்கக் குழி பறித்திருக்கின்றார்கள்; அவர்கள்மேல் உமக்கிருந்த சினத்தைப் போக்குவதற்காக அவர்களைக் குறித்து நல்லதை எடுத்துச் சொல்வதற்கு நான் உம்முன் வந்து நின்றதை நினைவுகூரும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.
திருப்பாடல் 31: 4-5. 13. 14-15

அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம். 5 உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர். பல்லவி

13 பலர் என்மீது பழிசுமத்தியது என் காதில் விழுந்தது; எப்பக்கமும் பேரச்சம் சூழ்ந்தது. அவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்; என் உயிரைப் பறிக்கத் திட்டம் தீட்டினார்கள். பல்லவி

14 ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; `நீரே என் கடவுள்' என்று சொன்னேன். 15 என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும், என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்,' என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 17-28

அக்காலத்தில் இயேசு எருசலேமை நோக்கிச் செல்லும் வழியில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து, ``இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிடமகன் தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள். அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள். ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்'' என்று அவர்களிடம் கூறினார். பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார். ``உமக்கு என்ன வேண்டும்?'' என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர், ``நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்'' என்று வேண்டினார். அதற்கு இயேசு, ``நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?'' என்று கேட்டார். அவர்கள் ``எங்களால் இயலும்'' என்றார்கள். அவர் அவர்களை நோக்கி, ``ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்'' என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர்மீதும் கோபங் கொண்டனர். இயேசு அவர்களை வரவழைத்து, ``பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடிமக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்'' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்"

தண்ணீர் இன்று பெரிய பிரச்சனை. வீராணம் திட்டம், கூட்டுக் குடி நீர் திட்டம் என்றெல்லாம் தண்ணீர் பிரச்சனை நீழ்கிறது. என்ன திருப்பலிக்கு லேட் என்று கேட்டால், பெண்களின் பதில், "தண்ணீர் வந்தது அல்லவா" என்பது. ஒரு லிட்டர் பால் விலை ரூயஅp;பாய் 12. இருந்தாலும் 13 ரூயஅp;பாய் கொடுத்து ஒரு லிட்டர் மினரல் வாட்டர் வாங்கத் தயார்.தண்ணீர் தாகத்தின் அவசியம், அவசரம்.

நம் சார்பில் அந்த சமாரியப் பெண் வெளிப்படுத்தும் சில தாகங்கள் இவைகள்:

- "நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?" (யோவா 4:9) ஏற்றத்தாழ்வு என்ற தாகம், உயர்ந்தவள் தாழ்ந்தவள் என்ற தாகம், அருள் பெற்றவள் பெறாதவள் என்ற தாகம். - பெண் என்ற தாழ்வு மனப்பான்மைத் தாகம். ஆண் என்ற ஆதிக்க வெறியின் தாகம். - "எனக்குக் கணவர் இல்லையே" (யோவா 4:17) தனக்குக் குடும்பம் இல்லை என்ற தாகம். முறையான குடும்ப வாழ்க்கை இல்லையே என்ற தாகம்.அறநெறி கூறும் வாழ்க்கை வாழ முடியவில்லையே என்ற தாகம். - "எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ?" (யோவா 4:12) சம்பிரதாயம், பாரம்;பரியம், மூதாதையர் பரம்பரை என்ற தாகம். - "எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே" (யோவா 4:20) ஆன்மீக தாகம். உண்மை இறைவனை வணங்கி வழிபட வேட்கை. வழிபட முடியாத தாகம். எல்லா தாகங்களையும் தணித்து நிறைவான வாழ்வைத் தரும் நம் தேவன் இயேசு ஒருவரே.

"நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்"(யோவா4:14) எதைக்கொடுத்தாயினும், எதை இழந்தாயினும், என்ன முயற்சி செய்தாயினும், என்ன விலை கொடுத்தாயினும் அத்தண்ணீரை வாங்கிப் பருகுவோம்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிமடுத்து, அவர் காட்டும் வழியில் நடக்க அருள்தாரும்.