யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2020-03-08

(இன்றைய வாசகங்கள்: தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-4,திருப்பாடல் 33: 4-5. 18-19. 20,22 ,திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 8b-10,+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-9)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

முதல் தவக்கால இரண்டாம் ஞாயிறைச் சிறப்பிக்க மனமாற்றங்களைத் தேடி தெய்வத்தின் திருவடி நோக்கி வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

மாட்சிக்குரியவர்களே, நாம் விசுவாச வாழ்வில் நிலைத்து நின்று வான்வீட்டில் தயார்நிலையில் இருக்கின்ற மணிமுடியை பெறவேண்டும் என்பதை புரியவைக்கும் விழாவாக இயேசுவின் தோற்றமாற்ற விழா அமைவுறுகிறது. நமது பாவங்களுக்காக இறந்து, உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவின் மாட்சியில் பங்கு பெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைத்தந்தையின் அன்பு மைந்தர் இயேசுவுக்கு செவிசாய்க்க கடவுள் நம்மை அழைக்கிறார். திருச்சட்டத்தையும், இறைவாக்குகளையும் நிறைவேற்றிய இயேசுவைப் போன்று, இறைத்திட்டத்தை அறிந்து வாழ்வில் செயல்படுத்த நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். இயேசுவின் பாடுகள் வழியாக, அவரது உயிர்ப்பின் மாட்சியில் பங்குபெற வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்''
தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-4

அந்நாள்களில் ஆண்டவர் ஆபிராமை நோக்கி, ``உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்'' என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
திருப்பாடல் 33: 4-5. 18-19. 20,22

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. -பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! -பல்லவி

இரண்டாம் வாசகம்

அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 8b-10

அன்பிற்குரியவரே, கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள். அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்; நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார். நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன் மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.'' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-9

அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளி போன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து, ``ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்'' என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, ``எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்'' என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, ``மானிடமகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது'' என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நம்பிக்கைக் கொள்வோரைச் சூழந்து நிற்கும் பேரன்பு தெய்வமே!

இத்தவக்காலத்தில் துன்புறும் உம் திருச்சபைக்காக வேண்டுகிறோம். உலகெங்கும் நற்செய்தியின் பொருட்டுத் துன்பங்களையும், தீவிரவாத்தையும் எதிர்கொள்ளும் திருச்சபையின் பணியாளர்கள் அனைவருக்கும் துன்பத்தால் துவண்டுபோய் விடாதபடியும், மனவிரக்தியில் வெந்துப் போகாதபடி இருக்கும்படியும் இருக்கவும், ஆபிரகாம் போல் தளராத நம்பிக்கையில் வாழவும் வேண்டிய அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

நம்பிக்கைக் கொள்வோரைச் சூழந்து நிற்கும் பேரன்பு தெய்வமே!

நீர் வாக்களித்த நாட்டையும் வாழ்வையும் அடைய ஆபிரகாம் கொண்ட பொறுமையும், நம்பிக்கையும் எங்கள் குடும்பத்தார் அனைவரும் உணர்ந்து, துன்பத்தின் முடிவில் வெற்றியையும், மகிழ்ச்சியையும் பெற இத்தவக்காலத்தை நன்கு பயன்படுத்தி இறைமகன் இயேசுவைப்போல் பிறருக்காக உழைத்திடத் தேவையான நல்ல மனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நம்பிக்கை கொள்வோரை சூழந்து நிற்கும் பேரன்பு தெய்வமே!

பாடுகள், துன்பம், சாவு வழியாகவே மாட்சிமை மிகுந்த உமது விண்ணக மகிழ்ச்சியில் பங்கேற்க முடியுமெனும் உண்மையை உய்த்துணர்ந்து நாங்கள் அதற்கு தகுதியுள்ளவர்களாக எம்மை உருமாற்ற வரமளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மருத்துவருக்கு எல்லாம் மருத்துவராகிய எம் இறைவா!

உலகமெங்கும் பரவி வரும் தொற்று நோயின் கொடுமைகளிலிருந்து எம் மக்களைக் காப்பாற்றும். நோயைக் கட்டுபடுத்தவும், அவர்களுக்குப் பணிவிடைச் செய்யும் அனைவரையும் அந்த நோயின் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்து, உழைக்க நல்ல ஆரோக்கியத்தையும், மன உறுதியையும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஆற்றல் மிகு தந்தையே இறைவா!

எம் இளையோர் அனைவரும் உம் தெய்வீக அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு உலகத்தின் பிழையான ஈர்ப்பினாலே தடம் புரண்டு செல்லாது நல்வாழ்வு வாழ்ந்து வளர அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய எம் இறைவா!

எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை, நாங்களும் கடைபிடித்து, எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்கு சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பாதுகாப்பின் நாயகனே!

எம் பங்கில் இருக்கின்ற நோயாளிகள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை உமது அன்பில் திளைக்கவைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது'' (மத்தேயு 17:1-2)

இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சியை மாற்கு, மத்தேயு, லூக்கா ஆகிய மூவரும் விவரிக்கின்றனர். இந்நிகழ்ச்சியை விவரிப்பதில் பழைய ஏற்பாட்டு உருவகங்கள் பல பயன்படுத்தப்பட்டுள்ளன. மலை, கதிரவனைப்போல் ஒளிரும் முகம், ஒளிமயமான மேகம், மேகத்திலிருந்து வரும் குரல், மோசேயும் எலியாவும் தோன்றுதல் போன்ற உருவகங்கள் ஆழ்ந்த பொருளை உணர்த்துகின்றன. அதாவது மோசே சீனாய் மலையில் ஏறிய போது கடவுள் அவரோடு பேசிய நிகழ்ச்சியின் எதிரொலிப்பு இங்கே உள்ளது. மேகம் என்பது கடவுளின் உடனிருப்பைக் குறிக்கும் அடையாளம். மோசே திருச்சட்டத்தையும் எலியா இறைவாக்கையும் குறிக்கின்றார்கள். இயேசு ''திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் அழிக்கவல்ல, அவற்றை நிறைவேற்றவே வந்தார்'' என்னும் செய்தியை மத்தேயு ஏற்கெனவே அறிவித்தார் (காண்க: மத் 5:17). வானிலிருந்து வந்த குரல் இயேசுவைக் கடவுளின் மகன் என அடையாளம் காட்டுகிறது (மத் 17:6). இயேசு வானகத் தந்தையின் ''அன்பார்ந்த மகன்''. நாம் அவருக்குச் செவிசாய்க்க வேண்டும் (மத் 17:6).

இயேசுவின் தோற்றம் மாறியதையும் வானிலிருந்து குரல் எழுந்து இயேசுவைக் கடவுளின் மகன் என அடையாளம் காட்டியதையும் கண்டு, கேட்டு அனுபவித்த சீடர்கள் அதன் விளைவாக முகங்குப்புற விழுகிறார்கள். அவர்களை அச்சம் மேற்கொள்கிறது. அப்போது ''இயேசு அவர்களிடம் வந்து, அவர்களைத் தொட்டு, 'எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்' என்றார்'' (மத் 17:7). கடவுள் நம்மைத் தம்மிடம் ஈர்க்கின்ற சக்தி கொண்டவர்; நம் உள்ளம் அவரை நாடித் தேடுகிறது. அதே நேரத்தில் கடவுளின் பிரசன்னத்தில் நாம் அஞ்சி நடுங்குகிறோம். ஆனால் இயேசு நாம் அஞ்சவேண்டியதில்லை என நமக்கு உறுதியளிக்கிறார். அவரோடு நாம் இருக்கும்போது நம் வாழ்வில் அச்சம் நீங்கும்; நம் உள்ளத்தில் உறுதி பிறக்கும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிமடுத்து, அவர் காட்டும் வழியில் நடக்க அருள்தாரும்.