யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
2020-02-26

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 12-18 ,திருப்பாடல் 51: 1-2. 3-4. 10-11. 12,15,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 20-6: 2,+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6,16-18)




எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். 
உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். 
உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.


திருப்பலி முன்னுரை

ஆண்டவரே! இரக்கமாயிரும்: ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.

அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! அருளும், இரக்கமும், நீடிய பொறுமையும், பேரன்பும் நிறைந்த இயேசுவின் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள்.

ஒப்பில்லா ஆன்ம மீட்பிற்கு நம்மை ஏற்புடையவர்களாக மாற்றுவதும், உன்னதத் தேவனோடு ஒன்றித்து உறவாட நம்மைத் தூண்டுவதுமானத் தவக்காலத்தின் தொடக்க நாள் இன்று. இன்று திருநீற்றுப் புதன். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள் என்னும் ஆசீரோடும், மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள் என்னும் அறிவுறுத்தலோடும் நாம் தவக்காலத்திற்குள் அடியெடுத்து வைக்கின்றோம். இயேசுவோடு சேர்ந்து பயணிக்கவும், பாலைவன அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவும், நம்முடைய வாழ்வைப் பசுமைப் படுத்திக் கொள்ளவும் நமக்கு ஒரு உயரிய வாய்ப்பை இத் தவக்காலம் வழங்குகின்றது.

ஓவ்வொரு கிறிஸ்தவருடைய வாழ்விலும் தவக்காலம் ஒரு வசந்த காலமாகவே அமைகின்றது. தீமைகளைக் களைந்து நம்மை புதிய திசைநோக்கி நடக்கவும், சிந்திக்கவும், செயற்படவும் வைக்கின்றது இத் தவக்காலம். எனவே வெறும் சடங்குகளுக்குள் நமது வாழ்க்கையை முடக்காது உண்மைப் பொருளுணர்ந்து இத் தவக்காலத்தை பயன்படுத்த வரம் கேட்டுச் செபிப்போம். இந்தத் திருப்பலியை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.



முதல் வாசகம்

நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள்.
இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 12-18

ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்; நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர். ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்? சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள். மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்; புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்; முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்; மணமகள் தன் மஞ்சத்தை விட்டுப் புறப்படட்டும். ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், ``ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்; உமது உரிமைச் சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர்'' எனச் சொல்வார்களாக! `அவர்களுடைய கடவுள் எங்கே?' என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ? அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது கருணை காட்டினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
திருப்பாடல் 51: 1-2. 3-4. 10-11. 12,15

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி

3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. 4ய உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி

12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். 15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுளோடு ஒப்புரவாகுங்கள்; இதுவே தகுந்த காலம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 20-6: 2

சகோதரர் சகோதரிகளே, நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார். நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ``தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்'' எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள்; மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தந்துள்ள வசனத்திற்குப் பதிலாக, தவக்காலம் ஐந்தாம் வாரத்திற்குப் பின் வரும் வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6,16-18

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது. நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்கவேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப் படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

பரம தந்தையே - எம் இறைவா!

பொதுநிலையினரான எங்களுக்கு ஆன்ம வழிகாட்டலைச் செய்து, ஞான நல்லுணர்வை ஊட்டவும், ஆலயத்திருப்பணி உள்ளிட்ட ஆன்மீகச் செயல்பாடுகளை அர்ப்பணிப்போடு ஆற்றவும், உம்மால் முன் குறிக்கப்பட்ட எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்கன்னியர்கள் மற்றுமுள்ள துறவியர்களின் ஆன்ம, உடல் உள்ள நலன்கள் ஆசீர்வதிக்கப்பட நாங்கள் ஆசிக்கின்றோம். ஞானம் மற்றும் நல்லறிவுடன் கூடிய விழிப்புணர்வு இவர்களுக்கு அருளப்படவும், இவர் தம் இறை உறவும், உடன்படிக்கையும் வலுப்பெறவும், இவர்கள் எதிர்கொள்ளும் தீமைகள், இன்னல்கள், இக்கட்டுகள், இடையூறுகள் வலுவிழந்து உடைபடவும் வரம் தந்திட இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

அருளும், இரக்கமும், நீடிய பொறுமையும், பேரன்பும் நிறைந்த தந்தையே!

எங்களுடையவும், எங்களுடைய உறவுகளுடைய பாவங்களுக்காகவும் உம்மிடம் மன்னிப்புக் கேட்கின்றோம். தொடர்ந்து வரும் காலங்களில் நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் பாவ வாழ்வை வெறுத்து ஒதுக்கிவிட்டு உமக்குகந்த இறைமக்கள் சமுதாயமாக வாழவும், சாட்சியம் பகரவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தகுந்த வேளையில்; எமக்குப் பதிலளித்து: விடுதலை நாளில் எமக்குத் துணையாய் இருக்கும் தெய்வமே இறைவா!

இத்தவக்காலத்தை எமக்குக் கொடுத்ததற்காக உமக்கு நன்றி சொல்லுகின்றோம். இக்காலத்தில் நாங்கள் மேற்கொள்ளும் தவமுயற்சிகள் அர்த்தமுள்ளவையாக அமையவும், இத் தவக்காலத்தை நாம் புனிதமாகக் கடைப்பிடிக்கவும், உம்மோடு சேர்ந்து நாம் பயணிக்கவும் எமக்கு அருள் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பரம தந்தையே - எம் இறைவா!

தாம் செய்தது போல நாங்களும் செயல்படுமாறு உம் திருமகனும், எங்கள் மீட்பருமான கிறிஸ்து இயேசு பல்வேறு முன்மாதிரிகைகளை எங்களுக்கு தந்துள்ளார். அவற்றைக் கடைபிடித்து எங்கள் வாழ்வில் நாங்கள் கிறிஸ்துவை பிரதிபலிக்க வேண்டுமென்று பெரிதும் ஆசிக்கின்றோம். பாலைவெளியில் தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களின் பசியைப் போக்கிய இயேசுவின் பரிவு - கல்லெறிந்து கொல்லப்படயிருந்த பெண்ணை காப்பாற்றி மன்னித்த இயேசுவின் கருணை சீடர்களின் பாதங்களைக் கழுவுவதற்காகத் தம்மை தரை மட்டும் தாழ்த்திய அவரின் தாழ்ச்சி - சிறைபடவும், வதையுறவும் தம்மை முழுமையாய் அரிப்பணித்த தியாகம் - சிலுவைச் சாவிற்கு காரணமான அத்தனை பேர்களையும் மன்னித்த மாண்பு - அவர்கள் பொருட்டு பரமதந்தையிடம் சமர்ப்பித்த மன்றாட்டு. இயேசுவின் இத்தகு அரிய பண்புகளை நித்தமும் தியானிப்பவர்களாய் நாம் வாழ்ந்து, அதன் பயனாய் உண்மையும், உத்தமுமான கிறிஸ்தவனாக, கிறிஸ்தவளாக வாழும் வரம் கேட்டு, இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கத்தின் தந்தையே இறைவா!

நோயினாலும், இயலாமையினாலும், கவலையினாலும் இன்னும் பல்வேறு காரணங்களாலும்; இன்றைய இத்திருப்பலியில் கலந்து கொள்ள முடியாமல் இருக்கும் ஒவ்வொருவர் மீதும் உமது அருள் பிரசன்னத்தைப் பொழிந்து, அவர்களையும் நிறைவாக ஆசீர்வதித்து, எல்லாவித சுமைகளிலிருந்தும் அவர்களை விடுவித்து, நீர் அளிக்கும் மகிழ்ச்சியை அவர்களும் நிறைவாகப் பெற்றிட அருள் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய எம் இறைவா!

எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை, நாங்களும் கடைபிடித்து, எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்கு சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பாதுகாப்பின் நாயகனே!

எம் பங்கில் இருக்கின்ற நோயாளிகள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை உமது அன்பில் திளைக்கவைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு, 'நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர்' என்றார்'' (மத்தேயு 6:2)

மத்தேயு நற்செய்தியில் இயேசு வழங்கிய ''மலைப் பொழிவு'' மைய இடம் பெறுகிறது (மத் 5:1-7:29). முற்காலத்தில் மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுளின் திருச்சட்டத்தை அறிவித்ததுபோல, இயேசு உலக மக்கள் அனைவருக்கும் இறையாட்சி பற்றிய நற்செய்தியை ''அதிகாரத்தோடு'' அறிவித்தார் (மத் 7:29). இயேசுவை நம்பி ஏற்போரிடத்தில் துலங்க வேண்டிய பண்புகள் யாவை? யூத சமயத்தில் முக்கியமான அறநெறியாகக் கருதப்பட்ட நோன்பு, இறைவேண்டல், ஈகை ஆகியவை எத்தகைய மனநிலையோடு செய்யப்பட வேண்டும்? இக்கேள்விகளுக்கு இயேசு ''மலைப் பொழிவின்'' போது பதில் வழங்கினார். இயேசு வாழ்ந்த காலத்தில் ஏழை மக்கள் பலர் இருந்தார்கள். ஆனால் அவர்களது தேவையை நிறைவேற்ற அரசு திட்டங்கள் இருக்கவில்லை; இலவச மருத்துவ வசதி, சத்துணவுத் திட்டம், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை நடைமுறையில் இல்லை. நிலைமை இவ்வாறிருந்ததால் பல மக்கள் பிறரிடம் கையேந்தி உதவிபெற்றுத்தான் வாழ வேண்டியிருந்தது. எனவே, தர்மம் செய்வது உயர்ந்த பண்பு எனவும், தர்மம் செய்யாதிருப்பது தவறு எனவும் திருச்சட்டம் இஸ்ரயேலருக்கு உணர்த்தியது.

இப்பின்னணியில்தான் இயேசு மக்கள் எவ்வாறு தர்மம் செய்ய வேண்டும் என எடுத்துக் கூறுகிறார். பிறருக்கு நான் தாராள உள்ளத்தோடு உதவினாலும் அதனால் பிறர் என்னைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என நான் விரும்பி அவ்வாறு செய்தால் எனக்குக் கைம்மாறு ஏற்கெனவே கிடைத்துவிட்டது. அவ்வாறு நான் செய்யும் உதவி வெறும் ''வெளிவேடம்'' என இயேசு கூறுகிறார். தர்மம் செய்வது தன்னிலேயே நல்ல செயல்தான். ஆனால் எந்த நோக்கத்தோடு அதைச் செய்கிறோம் என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிறர் நம்மைப் புகழ வேண்டும் என்பது நமது நோக்கமாக இராமல் கடவுள் நம் செயலைப் பார்க்கிறார், அதுவே நமக்குப் போதும் என நாம் செயல்பட வேண்டும். அப்போது கடவுள் நமக்குக் கைம்மாறு வழங்குவார். அவரது கைம்மாறு கிடைக்கும் என்பதற்காகவன்றி, நாம் செய்யும் தர்மம் கடவுளுக்கு உகந்தது எனவும் பிறருக்கு நலம் பயப்பது எனவும் நமக்குத் தெரிந்தால் அதுவே போதும் என இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.

மன்றாட்டு:

இறைவா, பிறருக்கு உதவும் வேளையில் நாங்கள் தன்னலம் நாடாது செயல்பட அருள்தாரும்.