யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 7வது வாரம் செவ்வாய்க்கிழமை
2020-02-25
முதல் வாசகம்

நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; எனவே நீங்கள் கேட்டாலும் அடைவதில்லை
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-10

சகோதரர் சகோதரிகளே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணம் என்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; பேராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெற முடிவதில்லை? நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள். விபசாரர் போல செயல்படுவோரே, உலகத்தோடு நட்புக் கொள்வது கடவுளைப் பகைப்பது என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகுக்கு நண்பராக விரும்பும் எவரும் கடவுளைப் பகைப்பவர் ஆவார். அல்லது ``மனித உள்ளத்திற்காகக் கடவுள் பேராவலோடு ஏங்குகிறார். அதற்கு அவர் அளிக்கும் அருளோ மேலானது'' என மறைநூல் சொல்வது வீண் என நினைக்கிறீர்களா? ஆகவே, ``செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குகிறார். தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்'' என்று மறைநூல் உரைக்கிறது. எனவே கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்; அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும். கடவுளை அணுகிச் செல்லுங்கள்; அவரும் உங்களை அணுகி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள். இருமனத்தோரே, உங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துங்கள். உங்கள் நிலையை அறிந்து, துயருற்றுப் புலம்பி அழுங்கள். உங்கள் சிரிப்பு புலம்பலாகவும், மகிழ்ச்சி ஆழ் துயரமாகவும் மாறட்டும். ஆண்டவர்முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

கவலையை ஆண்டவர்மேல் போட்டுவிடு; அவரே உனக்கு ஆதரவு
திருப்பாடல் 55: 6-7. 8-9. 9-10. 22

6 நான் சொல்கின்றேன்: `புறாவுக்கு உள்ளது போன்ற சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்? நான் பறந்து சென்று இளைப்பாறுவேனே! 7 இதோ! நெடுந்தொலை சென்று, பாலை நிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பேனே! பல்லவி

8 பெருங் காற்றினின்றும் புயலினின்றும் தப்பிக்கப் புகலிடம் தேட விரைந்திருப்பேனே! 9ய என் தலைவரே! அவர்களின் திட்டங்களைக் குலைத்துவிடும்; அவர்களது பேச்சில் குழப்பத்தை உண்டாக்கும். பல்லவி

9b ஏனெனில், நகரில் வன்முறையையும் கலகத்தையும் காண்கின்றேன்.' 10ய இரவும் பகலும் அவர்கள் அதன் மதில்கள் மேல் ஏறி அதைச் சுற்றி வருகின்றனர். பல்லவி

22 ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்டமாட்டேன். அதன் வழியாகவே, உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 30-37

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் மலையை விட்டுப் புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், ``மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்'' என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்தபொழுது இயேசு, ``வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?'' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், ``ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்'' என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, ``இத்தகைய சிறு பிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

எதைப் பற்றி வாதாடிக்கொண்டிருந்தீர்கள் ?

குடும்பங்களில், குழுக்களில், பணித்தளங்களில், ஏன் எங்கெல்லாம் மனிதர்கள் ஒன்று கூடுகிறார்களோ, அங்கெல்லாம் உரையாடல்கள் நடைபெறுகின்றன. அவற்றில் சில முறைகள் வாதாட்டமும், சொற்போரும் நிகழுகின்றன. இது இயல்புதான். ஆனால், இந்த வாதாடுதலும், சொற்போர்களும் எதை மையம் கொண்டிருக்கின்றன என்பதுதான் அந்தக் குழுமங்களின், குடும்பங்களின், கூட்டங்களின் தராதரத்தை எடுத்துக்காட்டுகின்றன. வருத்தமூட்டும் வகையில், இயேசுவின் சீடர்கள் வாதாடிக்கொண்டு வந்தது தங்களுக்குள் யார் பெரியவர்? என்பது பற்றி. அவர்களின் தாழ்வான மனநிலையை வெள்ளிடை மலையாகக் காட்டிவிடுகிறது இந்த நிகழ்வு. இயேசு அவர்களின் தவறைச் சுட்டிக்காட்டுகிறார், திருத்துகிறார். உண்மையிலே பெரியவர் யார் என்பது பற்றிய புதிய விளக்கத்தை அளிக்கின்றார்.

நமது உரையாடல்களைச் சற்றே ஆய்வு செய்வோமா? நாம் உணவு உண்ணும் நேரங்களில், பொழுதுபோக்காகப் பேசிக்கொண்டிருக்கும் வேளைகளில் எதைப் பற்றி வாதாடுகிறோம் என்பதைப் பற்றித் தன்னுணர்வு கொள்ளவும், வாதாட்டு மையப் பொருள்களை மாற்றி அமைக்கவும் இன்றைய நற்செய்தி வாசகம் அழைப்பு விடுக்கிறது. இனிமேலாவது, தனி நபர்களின் நிறை,குறைகள் பற்றியோ, பதவி, பெருமைகள் பற்றியோ வாதாடுவதைத் தவிர்ப்போம். வாதாடுதல் பல வேளைகளில் உறவு முறிவுக்கே இட்டுச்செல்கிறது என்பதையும் மனதில் கொள்வோம். தேவையிருந்தால், மனித மாண்பை, உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும் வகையில் நம் சொற்போர்கள் அமையட்டும். இல்லாவிட்டால், அமைதி காப்பதே நலம்.

மன்றாட்டு:

தாழ்ச்சியின் நாயகனே இயேசுவே, யார் பெரியவர் என்று வாதாடிக்கொண்டு வந்த சீடர்களுக்கு உண்மையை உணர்த்தியதற்காக உம்மைப் போற்றுகிறோம். எங்கள் உரையாடல்களில் எங்கள் பெருமையை, உயர்வைத் தேடாமல், பிறருக்குத் தொண்டாற்றும் மனநிலையை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.