யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 7வது வாரம் திங்கட்கிழமை
2020-02-24
முதல் வாசகம்

உங்கள் உள்ளத்தில் கட்சி மனப்பான்மை இருந்தால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 13-18

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 13-18 அன்புக்குரியவர்களே, உங்களிடையே ஞானமும் அறிவாற்றலும் உடையவர் யாராவது இருந்தால், ஞானம் தரும் பணிவாலும் நன்னடத்தையாலும் அவற்றைக் காட்டட்டும். உங்கள் உள்ளத்தில் பொறாமையும் மனக்கசப்பும் கட்சி மனப்பான்மையும் இருக்குமானால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம். உண்மையை எதிர்த்துப் பொய் பேசவேண்டாம். இத்தகைய ஞானம் விண்ணிலிருந்து வருவது அல்ல; மாறாக, மண்ணுலகைச் சார்ந்தது. அது மனித இயல்பு சார்ந்தது; பேய்த் தன்மை வாய்ந்தது. பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ் செயல்களும் நடக்கும். விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல் களும் நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.
திருப்பாடல் 19: 7. 8. 9. 14

7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. பல்லவி

8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. பல்லவி

9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி

14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-29

அக்காலத்தில் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரும் மற்ற சீடரிடம் வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் மறை நூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர். மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்தினர். அவர் அவர்களை நோக்கி, ``நீங்கள் இவர்களோடு எதைப் பற்றி வாதாடுகிறீர்கள்?'' என்று கேட்டார். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, ``போதகரே, தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப் போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை'' என்று கூறினார். அதற்கு அவர் அவர்களிடம், ``நம்பிக்கையற்ற தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார். அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது. அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, ``இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?'' என்று கேட்டார். அதற்கு அவர், ``குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்து வருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பல முறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்'' என்றார். இயேசு அவரை நோக்கி, ``இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்'' என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, ``நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்'' என்று கதறினார். அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, ``ஊமைச் செவிட்டு ஆவியே, உனக்குக் கட்டளையிடுகிறேன்: இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே'' என்றார். அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர், ``அவன் இறந்துவிட்டான்'' என்றனர். இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான். அவர் வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, ``அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?'' என்று கேட்டனர். அதற்கு அவர், ``இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு, 'தீமை செய்வோரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்' என்றார்'' (மத்தேயு 5:39)

நமக்கு எதிராக அநீதியான முறையில் செயல்பட்டு நம்மை வன்முறையாகத் தாக்குவோரை நாம் என்ன செய்வது? இயேசுவின் போதனைப்படி, வன்முறையை வன்முறையால் எதிர்ப்பது சரியா அல்லது வன்முறைக்கு முன் நாம் பணிந்து செல்ல வேண்டுமா? அநீதிகளை நாம் எதிர்க்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் போதனை. ஆனால் அநீதியை நாம் வன்முறையால் எதிர்ப்பது சரியல்ல என்று இயேசு கற்பிக்கிறார். தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பிறரை வன்முறையால் தாக்குவோரை நாம் எவ்வாறு நடத்துவதது என்பதற்கு இயேசு மூன்று எடுத்துக்காட்டுகள் தருகிறார். வலது கையின் பின்புறத்தைக் கொண்டு பிறருடைய கன்னத்தில் அறைவது அவர்களை இழிவுபடுத்தும் செயலாகக் கருதப்பட்டது. அச்சூழ்நிலையில் பழிக்குப் பழி என்று எண்ணாமல், நாம் இடது கன்னத்தைக் காட்டினால் நம்மைத் தாக்குவோர் வலது கையின் பின்புறத்தைக் கொண்டு நம்மை இன்னொரு முறை அறைய இயலாது. இதனால் அவர் வெட்கமுற்றுத் தம் நடத்தையைத் திருத்தலாம் (மத் 5:39). இரண்டாம் எடுத்துக்காட்டு அக்கால மனிதர் உடுத்துகின்ற ஆடைகளைப் பற்றியது. கடன் கொடுத்த ''ஒருவர் உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள்'' என இயேசு கூறுகிறார் (மத் 5:40). அக்காலத்தில் மக்கள் உள்ளாடை (அங்கி), மேலாடை என இரண்டு ஆடைகளை அணிவது வழக்கம். பெற்ற கடனைத் திருப்பிக் கொடுக்க இயலா நிலையில் உள்ள ஏழை மனிதரிம் சென்று, அவருடைய உள்ளாடையைப் பறிக்க வருபவரிடம் தம் மேலாடையையும் கொடுத்துவிட்டால் அம்மனிதர் அம்மணமாகத்தான் நிற்பார். இதைக் கண்டாவது கடன் கொடுத்த மனிதர் வெட்கமுற்று, தம் செயல் முறையற்றது என உணர்ந்து மனம் மாறலாம் என்பது எதிர்பார்ப்பு. இங்கே அக்காலத்தில் நிலவிய அநீதியான பொருளாதார அமைப்பை இயேசு கடிந்துகொள்கிறார். மேலும் கடன் கொடுத்தவரும் கடன் பெற்றவரும் கடவுள் முன் அம்மணமாகவே உள்ளனர் என்பதால் அவர்களுடைய மனித மாண்பு மீறத் தகாதது எனவும் இயேசு குறிப்பாக உணர்த்துகிறார்.

மூன்றாம் எடுத்துக்காட்டு உரோமைப் படைவீரர்களின் செயல் பற்றியது. தமக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி படைவீரர்கள் சாதாரண மக்களைக் கட்டாயப்படுத்தித் தம் பொருள்களைச் சுமந்து வழிநடக்க வற்புறுத்தும் பழக்கம் இருந்தது. இவ்வாறு ஒரு கல் தொலை செல்லக் கட்டாயப்படுத்தினால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இரண்டு கல் தொலை செல்வதாக இருந்தால் அந்தப் படைவீரருக்கு அவருடைய மேலதிகாரிகளிடமிருந்து தண்டனை கிடைக்கும் (மத் 5:41). இவ்வாறு ''இன்னா செய்தாருக்கும் இனியவே செய்யும்போது'' (குறள் 987) அவர்கள் வெட்கமுற்று மனம் திரும்பலாம் என்பது எதிர்பார்ப்பு. இயேசு கூறிய இந்த மூன்று எடுத்துக்காட்டுகளிலும் பிற்காலத்தில் மகாத்மா காந்தி வழங்கிய அகிம்சைக் கொள்கை துலங்குவதை நாம் காணலாம். வள்ளுவர் ''இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு?'' எனக் கூறும் செய்தியும் இயேசுவின் போதனையை எதிரொலிப்பதை இங்கே நாம் காணலாம்.

மன்றாட்டு:

இறைவா, பழி வாங்கும் மனப்பான்மையை நாங்கள் களைந்திட அருள்தாரும்.