யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 5வது வாரம் செவ்வாய்க்கிழமை
2020-02-11

தூய லூர்துஅன்னை பெருவிழா
முதல் வாசகம்

`மக்களின் மன்றாட்டைக் கேட்டருளும்படி என் பெயர் இக்கோவிலில் விளங்கும்.�'
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 22-23, 27-30

அந்நாள்களில் சாலமோன் ஆண்டவரின் பலிபீடத்தை நோக்கி நின்றுகொண்டு, இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையில் வானத்திற்கு நேரே தம் கைகளை உயர்த்தி மன்றாடியது: �இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் உம்மைப் போன்ற வேறு கடவுள் யாரும் இல்லை. உமது முன்னிலையில் முழு உள்ளத்தோடு உமக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் உம்முடைய அடியார்க்கு உமது உடன்படிக்கையின்படி தவறாது பேரன்பு காட்டி வருகிறீர். கடவுள் உண்மையில் இந்த மண்ணுலகில் தங்கியிருப்பாரா? வானமும் வான மண்டலங்களும் உம்மைக் கொள்ள இயலாதிருக்க, நான் கட்டியுள்ள இக்கோவில் எப்படி உம்மைக் கொள்ளும்? என் கடவுளாகிய ஆண்டவரே! உம் அடியான் செய்கிற வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டருளும்; உம் அடியான் இன்று உம் முன்னிலையில் எழுப்பும் கூக்குரலுக்கும் செய்யும் வேண்டுதலுக்கும் செவிசாய்த்தருளும்! �என் பெயர் இவ்விடத்தில் விளங்கும்� என்று இக்கோவிலைப்பற்றி நீர் சொல்லியிருக்கிறீர்! இவ்விடத்தில் உம் அடியான் செய்யும் வேண்டுதலைக் கேட்டருள்வதற்காக, இரவும் பகலும் உமது கண்கள் இதனை நோக்கி இருப்பனவாக! உம் அடியானின் விண்ணப்பத்திற்கும் இவ்விடத்தை நோக்கிச் செய்கிற உம் மக்கள் இஸ்ரயேலர் வேண்டுதலுக்கும் செவிசாய்ப்பீராக! உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டு அருள்வீராக! கேட்டு மன்னிப்பு அருள்வீராக!''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!
திருப்பாடல்84: 2-3. 4,9. 10. 11

2 என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. 3 படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. பல்லவி

4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். 9 எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும்! பல்லவி

10 வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது; பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது. பல்லவி

11 ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவரே, நீர் உம் நியமங்களைத் தந்தீர்; உம் ஒழுங்கு முறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-13

ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன. ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, ``உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?'' என்று கேட்டனர். அதற்கு அவர், ``வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். `இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்' என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்'' என்று அவர்களிடம் கூறினார். மேலும் அவர், ``உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்துவிட்டீர்கள். `உன் தந்தையையும் தாயையும் மதித்து நட' என்றும் `தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்' என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, `நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது `கொர்பான்' ஆயிற்று; அதாவது `கடவுளுக்குக் காணிக்கையாயிற்று' என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்'' என்று அவர்களிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு, 'இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்' என்று எசாயா எழுதியுள்ளார் என்றார்'' (மாற்கு 7:6-7)

எசாயா இறைவாக்கினரின் கூற்றை (காண்க: எசா 29:13) மேற்கோள் காட்டி இயேசு ஓர் அடிப்படையான உண்மையைப் போதிக்கின்றார். நம் வாயிலிருந்து பிறக்கின்ற சொற்கள் நம் உள்ளத்தில் மறைந்திருக்கின்ற எண்ணத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது சரியல்ல. அதுபோலவே, சொற்களால் கடவுளைப் போற்றிவிட்டு, செயல்களால் அவரைப் பழித்தால் அதுவும் ஒரு பெரிய முரண்பாட்டைத்தான் காட்டுகிறது. யூத சமய வழக்கங்களை நன்கு அறிந்திருந்த பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொண்டதை இயேசு கண்டிக்கிறார். கடவுளிடமிருந்து வந்த கட்டளைகளைக் கருத்தாகக் கடைப்பிடிப்பதற்கு மாறாக, அவர்கள் ''மனித கட்டளைகளை'' (''மூதாதையர் மரபு'') உயர்த்திப்பிடித்தனர். இத்தகைய மரபுகளின் நோக்கம் கடவுளின் கட்டளைகளை மக்கள் கடைப்பிடிக்க உதவுவதுதான். ஆனால் நடைமுறையிலோ ''மூதாதையர் மரபு'' மக்கள்மேல் தாங்கவியலா பாரத்தைச் சுமத்தியது; உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற உறுதியோடு கடவுளைப் பற்றிக்கொண்டு, அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப நடப்பதற்கு மாறாக, கடவுளின் சட்டத்தைப் புறக்கணிக்க வழியாக மாறிவிட்டிருந்தது அந்த ''மரபு''.

நேர்மையான நடத்தை இல்லாத இடத்தில் வெளிவேடம்தான் மிஞ்சும். இதை இயேசு இரண்டு எடுத்துக்காட்டுகள் தந்து விளக்குகின்றார். கை கழுவுவதும் கிண்ணங்களைக் கழுவுவதும் மூதாதையர் மரபு மக்கள் மேல் திணித்த சட்டம். பெற்றோருக்கு உதவுவது பிள்ளைகளின் கடமை என்பது கடவுள் தந்த சட்டம். ஆனால் மூதாதையர் மரபுப்படி பெற்றோருக்குச் சேரவேண்டியதைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தாயிற்று என்று கூறிவிட்டு சிலர் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்தார்கள். இவ்வாறு கடவுளின் சட்டம் புறக்கணிக்கப்பட்டது சரியல்ல என இயேசு உணர்த்துகிறார். சட்டம் நம்மை நல்வழியில் இட்டுச் செல்கின்ற வழிகாட்டியாக இருக்க வேண்டுமே ஒழிய நம்மை அடிமைப்படுத்துகின்ற சக்தியாக, வெளிவேடத்திற்குத் தூண்டுதலாக அமைந்துவிடலாகாது.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் உம்மை ஏற்று, செயல்முறையில் உம்மைப் போற்றிட எங்களுக்கு அருள்தாரும்.