யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 5வது வாரம் திங்கட்கிழமை
2020-02-10

புனித கொலஸ்ரிக்கா
முதல் வாசகம்

உடன்படிக்கைப் பேழையைத் திருத்தூயகத்தில் வைத்தனர்; ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 1-7, 9-13

அந்நாள்களில் சாலமோன் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் தாவீதின் நகர் சீயோனினின்று கொண்டுவர விரும்பினார். அதற்காக அவர் இஸ்ரயேலின் பெரியோரையும் எல்லாக் குலத்தலைவர்களையும் இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களையும் எருசலேமிற்குத் தம்மிடம் வரும்படி அழைத்தார். அதற்கிணங்க, அவர்கள் அனைவரும் ஏழாம் மாதமாகிய �ஏத்தானிம்� மாதத்தின் பண்டிகையின்போது, அரசர் சாலமோன் முன் கூடினர். இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் வந்தனர். குருக்கள் பேழையைத் தூக்கிக் கொண்டனர். ஆண்டவரின் பேழை, சந்திப்புக் கூடாரம், கூடாரத்தின் தூய கலன்கள் அனைத்தையும் குருக்களும் லேவியரும் சுமந்துசென்றனர். அரசர் சாலமோனும், அவரிடம் வந்து குழுமிய இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும், எண்ணவோ கணக்கிடவோ முடியாத அளவு திரளான ஆடுகளையும் மாடுகளையும் பேழைக்கு முன்னால் பலியிட்டனர். பின்னர், குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைக் கோவில் கருவறையாகிய திருத்தூயகத்தில் அதற்குரிய இடத்தில் கெருபுகளின் இறக்கைகளின் கீழே கொண்டு வந்து வைத்தனர். அக்கெருபுகள் பேழை இருக்கும் இடத்தில் தங்கள் இரண்டு இறக்கைகளையும் விரித்து, பேழையையும், அதன் தண்டுகளையும் மூடியவாறு இருந்தன. இரு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் பேழைக்குள் இல்லை. இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய பொழுது அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்ட ஓரேபு மலையில் மோசே அதற்குள் வைத்தவை அவை. குருக்கள் தூயகத்தினின்று வெளியே வருகையில் ஒரு மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிரப்பிற்று. அம்மேகத் தின் பொருட்டு குருக்கள் திருப்பணி புரிய அங்கு நிற்க இயலவில்லை. ஏனெனில் ஆண்டவரின் மாட்சி அவர் இல்லத்தை நிரப்பிற்று. அப்பொழுது சாலமோன், �ஆண்டவரே! நீர் கரிய மேகத்தில் உறைவதாகக் கூறினீர். நீர் என்றென்றும் தங்கி வாழ உயர் இல்லம் ஒன்றை உமக்காக நான் கட்டியுள்ளேன்� என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே! உம் உறைவிடத்திற்கு வல்லமையோடு எழுந்தருளும்.
திருப்பாடல் 132: 6-7. 8-10

6 திருப்பேழை எப்ராத்தாவில் இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்; வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம். 7 ``அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்! வாருங்கள்; அவரது திருவடிதாங்கிமுன் வீழ்ந்து பணிவோம்!'' பல்லவி

8 ஆண்டவரே! நீர் உமது வல்லமை விளங்கும் பேழையுடன் உமது உறைவிடத்திற்கு எழுந்தருள்வீராக! 9 உம் குருக்கள் நீதியை ஆடையென அணிவார்களாக! உம் அன்பர்கள் அக்களிப்பார்களாக! 10 நீர் திருப்பொழிவு செய்த அரசரை, உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப் புறக்கணியாதேயும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 53-56

இயேசுவும் அவருடைய சீடர்களும் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்து படகைக் கட்டி நிறுத்தினார்கள். அவர்கள் படகை விட்டு இறங்கிய உடனே, மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுணர்ந்து, அச்சுற்றுப்பகுதி எங்கும் ஓடிச் சென்று, அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நோயாளர்களைப் படுக்கையில் கொண்டு வரத் தொடங்கினார்கள். மேலும் அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொது இடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி'' (லூக்கா 2:32)

இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிக்க அவருடைய பெற்றோர் கொண்டு செல்கின்றனர். அவ்வேளையில் சிமியோன் என்னும் இறையடியார் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிய பாடலை லூக்கா தருகிறார் (லூக் 2:28-32). இப்பாடல் கடவுளின் வல்லமை மிக்க செயல்களைப் போற்றுவதோடு அவரிடமிருந்து வருகின்ற ''ஒளி'' பற்றியும் பறைசாற்றுகிறது. கடவுளை ஒளியாகப் பாhக்கின்ற முறை விவிலியத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது. இயேசு இவ்வுலகில் ஒளியாக வந்தார் என யோவான் விவரிக்கிறார் (யோவா 1:9-10). ஒளி இருளை அகற்றுகிறது; நமக்கு வெளிச்சம் தருகிறது. வெறும் பொருண்மையளவிலான ஒளிக்கு இந்த சக்தி உண்டு என்றால் கடவுள் உள்ளொளியாக வரும்போது நம் அக இருள் அகல்வதை நாம் உள்ளத்தில் உணரலாம்.

இருள் நம்மைவிட்டு அகலும்போது நம் பார்வை தெளிவுபெறும். நம் வாழ்விலும் நம்மைச் சூழ்ந்திருப்போர் வாழ்விலும் கடவுளின் செயல் துலங்குவதை நாம் காண்போம். அப்போது நம் குறுகிய பார்வை விரிவுபெறும். கடவுளின் பார்வை நமதாக மாறும். அனைத்துமே ஒரு புதிய ஒளியில் தோன்றும்போது நமது பழைய கண்ணோட்டங்களும் மதிப்பீடுகளும் மறைந்துபோய் புதியதொரு நிலைக்கு நாம் ஏறிச் செல்ல முடியும். பிற இனத்தைச் சார்ந்த நாம் இனி கடவுளின் குடும்ப உறுப்பினராக மாறிவிட்டதால் நம்மில் அவருடைய ஒளி பளிச்சிட்டு விளங்கிட நம்மையே அவரிடம் கையளிப்பது தேவை. அங்கே கடவுள் என்னும் வெளிப்பாடு தோன்றும். அது நம்மை உள்ளத்தையும் வாழ்வையும் ஒளிர்விக்கும். இவ்வாறு ஒளிபெற்ற நாம் ஒருவர் ஒருவருக்கு ஒளியாகிட அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து என்னும் ஒளியில் ஒளிர்கின்ற மனிதர் இருளை அகற்றும் கருவிகளாக மாறுவர். மெழுகுதிரி ஏற்றப்பட்டு, பிற திரிகளையும் ஏற்றுகின்ற திறம் பெறுவதுபோல நம் வாழ்வு அமைய வேண்டும். அப்போது கிறிஸ்துவின் ஒளி எங்கும் பரவும்; மனிதரும் கடவுளின் வெளிப்பாட்டினைத் தம் உள்ளத்திலும் இல்லத்திலும் சமூக வாழ்விலும் அனுபவித்து அறிவர்.

மன்றாட்டு:

இறைவா, உம் ஒளியில் நாங்கள் வழிநடக்க அருள்தாரும்.