யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 4வது வாரம் புதன்கிழமை
2020-02-05

புனித ஆகத்தா




முதல் வாசகம்

பாவம் செய்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது?
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 2,9-17

அந்நாள்களில் தாவீது அரசர் யோவாபையும் அவரோடிருந்த படைத்தலைவர்களையும் அழைத்து, �மக்கள் தொகை என்னவென்று நான் அறிய வேண்டும். நீங்கள் தாண் முதல் பெயேர்செபா வரை அனைத்து இஸ்ரயேல் குலங்களிடையே சென்று வீரர்கள் தொகையைக் கணக்கிடுங்கள்� என்றார். யோவாபு, வீரர்களின் தொகைக் கணக்கை அரசரிடம் தந்தார். வாளை ஏந்தும் வீரர்கள் எண்ணூறு ஆயிரம் பேர் இஸ்ரயேலிலும், ஐந்நூறு ஆயிரம் பேர் யூதாவிலும் இருந்தனர். வீரர்களின் தொகையைக் கணக்கெடுத்த பிறகு தாவீது மனம் வருந்தினார். �நான் மாபெரும் பாவம் செய்தேன்! ஆண்டவரே! உம் அடியானின் குற்றத்தை மன்னித்தருளும்! ஏனெனில் நான் பெரும் மதியீனனாய் நடந்து கொண்டேன்� என்று தாவீது ஆண்டவரிடம் மன்றாடினார். தாவீது காலையில் எழுந்தார். தாவீதின் திருக்காட்சியாளராகிய இறைவாக்கினர் காதிற்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது: �நீ சென்று இவ்வாறு ஆண்டவர் கூறுவதாகத் தாவீதிடம் சொல்: �நான் உன்மீது மூன்று தண்டனைகளைக் குறிப்பிடுகிறேன். நீ ஒன்றைத் தேர்ந்தெடு. அதன்படி நான் செய்வேன்� �. காது தாவீதிடம் வந்து அவரிடம் பேசி வெளிப்படுத்தியது: �உனது நாட்டில் ஏழு ஆண்டுகள் பஞ்சம் வரட்டுமா? உன் எதிரிகள் உன்னைப் பின்தொடர, மூன்று மாதங்கள் நீ தப்பியோட வேண்டுமா? அல்லது உன் நாட்டில் மூன்று நாள்கள் கொள்ளை நோய் ஏற்படலாமா? என்னை அனுப்பியவருக்கு நான் என்ன மறுமொழி சொல்ல வேண்டும் என்று சிந்தித்து முடிவுசெய்�. �நான் மிகவும் மனவேதனையுற்றுள்ளேன். ஆண்டவரது கையில் நாம் விழுவோம்; ஏனெனில் அவரது இரக்கம் பெரிது! மனிதரின் கையில் விழ வேண்டாம்� என்று தாவீது கூறினார். ஆண்டவர் காலைமுதல் குறித்த நேரம்வரை இஸ்ரயேலின் மீது கொள்ளைநோய் அனுப்பினார். தாண் முதல் பெயேர்செபாவரை எழுபதாயிரம் மக்கள் மாண்டனர். வானதூதர் எருசலேமை அழிப்பதற்காக அதன்மீது தம் கையை ஓங்கினார். ஆண்டவர் அத்தீமையைக் குறித்து மனம் வருந்தி மக்களை அழித்துக்கொண்டிருந்த வானதூதரை நோக்கி, �போதும்! உன் கையைக் கீழே போடு� என்றார். அப்போது ஆண்டவரின் தூதர், எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்தருகே இருந்தார். மக்களை அழித்துக்கொண்டிருந்த ஆண்டவரின் தூதரைத் தாவீது கண்டபோது, அவர் ஆண்டவரை நோக்கி, �பாவம் செய்தவன் நானல்லவோ? தீச்செயல் புரிந்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது? இப்போது உம் கை என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் வதைப்பதாக!� என்று கூறினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.
திருப்பாடல் 32: 1-2. 5. 6. 7

1 எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர். 2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். பல்லவி

5 `என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். பல்லவி

6 ஆகவே, துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்; பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது. பல்லவி

7 நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

சொந்த ஊரிலும் சுற்றத்திலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், ``இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?'' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், ``சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி'' (லூக்கா 2:32)

இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிக்க அவருடைய பெற்றோர் கொண்டு செல்கின்றனர். அவ்வேளையில் சிமியோன் என்னும் இறையடியார் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிய பாடலை லூக்கா தருகிறார் (லூக் 2:28-32). இப்பாடல் கடவுளின் வல்லமை மிக்க செயல்களைப் போற்றுவதோடு அவரிடமிருந்து வருகின்ற ''ஒளி'' பற்றியும் பறைசாற்றுகிறது. கடவுளை ஒளியாகப் பாhக்கின்ற முறை விவிலியத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது. இயேசு இவ்வுலகில் ஒளியாக வந்தார் என யோவான் விவரிக்கிறார் (யோவா 1:9-10). ஒளி இருளை அகற்றுகிறது; நமக்கு வெளிச்சம் தருகிறது. வெறும் பொருண்மையளவிலான ஒளிக்கு இந்த சக்தி உண்டு என்றால் கடவுள் உள்ளொளியாக வரும்போது நம் அக இருள் அகல்வதை நாம் உள்ளத்தில் உணரலாம்.

இருள் நம்மைவிட்டு அகலும்போது நம் பார்வை தெளிவுபெறும். நம் வாழ்விலும் நம்மைச் சூழ்ந்திருப்போர் வாழ்விலும் கடவுளின் செயல் துலங்குவதை நாம் காண்போம். அப்போது நம் குறுகிய பார்வை விரிவுபெறும். கடவுளின் பார்வை நமதாக மாறும். அனைத்துமே ஒரு புதிய ஒளியில் தோன்றும்போது நமது பழைய கண்ணோட்டங்களும் மதிப்பீடுகளும் மறைந்துபோய் புதியதொரு நிலைக்கு நாம் ஏறிச் செல்ல முடியும். பிற இனத்தைச் சார்ந்த நாம் இனி கடவுளின் குடும்ப உறுப்பினராக மாறிவிட்டதால் நம்மில் அவருடைய ஒளி பளிச்சிட்டு விளங்கிட நம்மையே அவரிடம் கையளிப்பது தேவை. அங்கே கடவுள் என்னும் வெளிப்பாடு தோன்றும். அது நம்மை உள்ளத்தையும் வாழ்வையும் ஒளிர்விக்கும். இவ்வாறு ஒளிபெற்ற நாம் ஒருவர் ஒருவருக்கு ஒளியாகிட அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து என்னும் ஒளியில் ஒளிர்கின்ற மனிதர் இருளை அகற்றும் கருவிகளாக மாறுவர். மெழுகுதிரி ஏற்றப்பட்டு, பிற திரிகளையும் ஏற்றுகின்ற திறம் பெறுவதுபோல நம் வாழ்வு அமைய வேண்டும். அப்போது கிறிஸ்துவின் ஒளி எங்கும் பரவும்; மனிதரும் கடவுளின் வெளிப்பாட்டினைத் தம் உள்ளத்திலும் இல்லத்திலும் சமூக வாழ்விலும் அனுபவித்து அறிவர்.

மன்றாட்டு:

இறைவா, உம் ஒளியில் நாங்கள் வழிநடக்க அருள்தாரும்.