யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 3வது வாரம் செவ்வாய்
2020-01-28




முதல் வாசகம்

தாவீதும் இஸ்ரயேல் வீட்டாரும் ஆரவாரத்தோடு ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 6: 12b-15.17-19

அந்நாள்களில் தாவீது புறப்பட்டுச் சென்று கடவுளின் பேழையை ஓபேது - ஏதோமின் இல்லத்திலிருந்து தாவீதின் நகருக்கு அக்களிப்போடு கொண்டு வந்தார். ஆண்டவரின் பேழையை ஏந்தியவர்கள் ஆறு அடிகள் எடுத்து வைத்ததும் ஒரு காளையையும் ஓர் ஆட்டுக் கிடாயையும் பலியிட்டார். நார்ப் பட்டால் நெய்யப்பட்ட ஏபோத்தை அணிந்துகொண்டு, தாவீது தம் முழு வலிமையோடு ஆண்டவர் முன்பாக நடனமாடிக் கொண்டிருந்தார். தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள். ஆண்டவரின் பேழையைக் கொணர்ந்து, அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள். தாவீது ஆண்டவர் முன்பு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினார். எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தியபின் தாவீது படைகளின் ஆண்டவர் பெயரால் மக்களுக்கு ஆசி வழங்கினார். பிறகு தாவீது ஆண் முதல் பெண் வரை மக்கள் அனைவருக்கும் இஸ்ரயேல் கூட்டம் முழுவதற்கும் ஆளுக்கொரு அப்பத்தையும், பொரித்த இறைச்சியையும், திராட்சைப் பழ அடையையும் கொடுத்தார். மக்கள் அனைவரும் தம் இல்லங்களுக்குச் சென்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? ஆண்டவர் இவரே.
திபா 24: 7. 8. 9. 10

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். பல்லவி

8 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர். பல்லவி

9 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள். மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். பல்லவி

10 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-35

அக்காலத்தில் இயேசுவின் தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. ``அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்'' என்று அவரிடம் சொன்னார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ``என் தாயும் என் சகோதரர்களும் யார்?'' என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, ``இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்...' என்றார்'' (யோவான் 1:29)

இயேசு தன் பணிவாழ்வைத் தொடங்கிய செய்தியை இன்றைய நற்செய்தி வாசகம் தருகிறது. மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் பணி வாழ்வின் தொடக்கத்தை இறைவாக்கினர் எசாயாவின் அறைகூவலின் நிறைவேறுதலாகப் பார்க்கிறார். “காரிருளில் வாழ்ந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது“. கிறிஸ்து பிறந்ததால் ஒளியும், வாழ்வின் நம்பிக்கையும் இந்தப் புவிப் பரப்பில் உருவானது என்ற நற்செய்தியை மத்தேயு பறைசாற்றுகின்றார். என்னுடைய பணியும், வாழ்வும் இயேசுவின் பணியும், வாழ்வும் போல அமைந்திருக்கின்றனவா என்று ஆய்ந்து பார்க்க அழைப்பு விடுக்கிறது இன்றைய வாசகம். எனது பணி இருளில் வாழ்வோர்க்கு ஒளியாக, நம்பிக்கை அற்றோருக்கு நம்பிக்கையாக இருக்கிறதா என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன். எனது வாழ்வும் இயேசுவின் வாழ்வு போல அமைய அருள்வேண்டுகிறேன்.

மன்றாட்டு:

நம்பிக்கையின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது பணியும், வாழ்வும் நம்பிக்கை அற்றோருக்கு நம்பிக்கையை. இருளில் வாழ்ந்தோருக்கு ஒளியைக் கொண்டுவந்ததபோல, எனது வாழ்வும், பணியும் அமைய என்னi வலிமைப்படுத்தியருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.