யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
கிறீஸ்து பிறப்புக்காலம்
2020-01-08




முதல் வாசகம்

நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு நிலைத்திருக்கிறார்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 11-18

அன்பார்ந்தவர்களே, கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் எனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார் எனவும் அறிந்துகொள்கிறோம். தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கிறோம். இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் இருப்பதுபோல் நாமும் இவ்வுலகில் இருக்கிறோம். எனவே தீர்ப்பு நாளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்போம். இவ்வாறு நம்மிடையே உள்ள அன்பு நிறைவடைகிறது. அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும். ஏனெனில் அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது; அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
திருப்பாடல் 72: 1-2. 10-11. 12-13

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. பல்லவி

10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள். 11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

பிற இனத்தாருக்குப் பறை சாற்றப்பட்ட கிறிஸ்துவே, உமக்கு மகிமை; விசுவாசத்தோடு உலகில் ஏற்கப்பட்ட கிறிஸ்துவே, உமக்கு மகிமை

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 45-52

ஐயாயிரம் பேர் உணவு உண்ட பின் இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார். பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார். அப்போது எதிர்க்காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, `அது பேய்' என்று எண்ணி அவர்கள் அலறினார்கள். ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். �துணிவோடு இருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்'' என்றார்; பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள். ஏனெனில் அப்பங்கள் பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப் போயிருந்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை